Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் மாணவர்களும் தொழில்முனைவோராக மாறலாம்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய பதின் பருவத்தினர் மிகவும் ஸ்மார்ட். பணம் சம்பாதிக்க பட்டப்படிப்பு முடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை கணித்து வைத்திருக்கிறார்கள். படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு பகுதி நேர வேலைகள் பெரிதும் உதவுகின்றன. அதில் ஒரு சிலர் சொந்தமாக தொழில் தொடங்குகின்றனர். அந்தப் பட்டியலில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து கொண்டு தங்களிடம் இருக்கும் ஆடுகளை கொண்டு ஆட்டுப்பால் மற்றும் அதன் மூலம் மற்ற பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையும் செய்து வருகிறார்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள்.

மன்னத், எக்நூர் இருவரும் சகோதரிகள். இவர்கள் இணைந்து ‘இந்தியா கோட் மில்க் ஃபார்ம்’ என்ற ஆட்டுப்பால் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். இவர்களின் இந்தப் பண்ணையால் அந்தக் கிராமமே பயனடைந்து வருகிறது. இவர்கள் கிராம சுற்றுவட்டாரம் மட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாக இந்தியா முழுதும் ஆட்டுப்பால், பனீர், நெய் என அனைத்து பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்கிறார்கள். மேலும் பால் சார்ந்து தயாரிக்கப்படும் சோப் மற்றும் ஆட்டு எருவையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து மன்னத் விவரித்தார்.

“ஆரம்பத்தில் எங்களின் உடல் ஆரோக்கியத்திற்காகத்தான் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆட்டுப்பால் குடிக்கத் தொடங்கினோம். சிறுவயதில் ஒருமுறை நான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதால் நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். அப்போது என் அப்பாவுடைய நண்பர்களும் கிராம மக்களும் எனக்கு ஆட்டுப்பால் கொடுக்கும்படி அப்பாவிடம் பரிந்துரை செய்தனர். அப்போதுதான் நான் முதலில் ஆட்டுப்பால் குடித்தேன்.

ஆட்டுப்பாலில் நாம் நினைப்பதை விடவும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்கள், புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. இந்தப் பாலை குடிக்கத் தொடங்கியதும் என் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இதன் பிறகு நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து ஆட்டுப்பால் குடிக்க முடிவு செய்தோம். பாலின் தேவை அதிகமாக இருந்ததால் நாங்களே ஆரோக்கியமான ஆடு ஒன்றினை வாங்கினோம். அதன் மூலம் அதிகம் பால் உற்பத்தி கிடைத்தது. அப்போது கிராம மக்கள் சிலர் எங்களிடம் ஆட்டுப்பால் வாங்க வந்தனர். எங்கள் குடும்பத் தேவைக்கு போக மீதமிருந்த பாலை உறவினர், கிராம மக்களுக்கு கொடுத்தோம்.

ஒரு கட்டத்தில் ஆட்டுப்பால் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆட்டுப்பாலின் தேவை அதிகமாக இருந்ததை அறிந்ததும் நானும் என் சகோதரி எக்நூரும் இதை ஏன் தொழிலாக மாற்றக் கூடாதுன்னு யோசனை செய்தோம். எங்களது யோசனையை பெற்றோரிடம் சொன்னதும் அவர்களும் எங்களை ஊக்குவித்தனர். ஆரம்பத்தில் எங்கள் அக்கம் பக்கத்தினரும் கிராம மக்களும்தான் வாடிக்கையாளர்களாக இருந்தனர். மற்ற இடங்களில் கிடைப்பதை விட குறைவான விலையில் விற்பனை செய்தோம்.

அதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் அதிகளவு பால் தேவைப்பட்டது. ஆனால் எங்களிடம் இருந்ததோ ஒரு ஆடுதான். பால் விற்பனை மூலம் கிடைத்த பணம் மற்றும் அப்பாவின் உதவியுடன் ஆடுகளை வாங்கினோம். கலப்பின ஆடுகளில் முதலீடு செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. அதனால் நல்ல ஊட்டச்சத்துள்ள, அதிகளவு பால் உற்பத்தி தரும் ஆடு வகையை தேடினோம். அப்போதுதான் சானென் வகை ஆடுகள் உலகளவில் அதிகளவு பால் உற்பத்திக்காக அறியப்படுகிறது என்பது தெரியவந்தது.

அந்த ஆடுகளை வாங்கினோம். முதலில் எங்க வீட்டில்தான் பராமரித்து வந்தோம். ஆனால் இந்த ஆடுகளை அதிக குளிர் மற்றும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். முறையாக பராமரிக்க பண்ணை அமைக்கணும். எங்களிடம் இருந்த நிலத்தை பண்ணையாக மாற்றி அங்கு ஆடுகளை பராமரிக்க துவங்கினோம். அவற்றின் ஆரோக்கியத்தில் ரொம்பவே கவனமாக இருந்தோம். இது எங்களுக்கு புது தொழில் என்பதால், அம்மா இங்கு கிராமத்தில் அரசு நடத்திய பெண்களுக்கான தொழில் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று கற்றுக் கொண்டார். அவர் எங்களுக்கு கற்றுக் கொடுக்க, அதனை நாங்க எங்க தொழிலில் செயல்படுத்த துவங்கினோம். இல்லத்தரசியாக இருந்த அம்மாவும் இப்போது எங்களுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருகிறார்” என்ற மன்னத் 11ம் வகுப்பு படிக்கிறார். இவரின் சகோதரி எக்நூர் 10ம் வகுப்பு மாணவி.

“நாங்கள் இந்தத் தொழிலை சிறிதளவில் தொடங்கும் போது 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நானும் என் தங்கையும் பள்ளிப் படிப்பில் ஆர்வமாக இருப்போம். ஆரம்பத்தில் பள்ளி செல்வது, வீட்டில் வந்து ஆடுகளை பராமரிப்பது சிரமமாகவே இருந்தது. எங்களுக்கு இரண்டிலும் ஆர்வம் இருந்ததால் பெற்றோரின் உதவியால் எங்களால் இரண்டையும் திறமையாக கையாள முடிந்தது. அப்போது ஒரு ஆடுதான் இருந்தது. இப்போது பண்ணையில் நிறைய ஆடுகள் இருப்பதால், ஆட்களை கொண்டு பராமரிக்கிறோம். அதனால் எங்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது.

எங்களின் பிசினசிற்கு நாங்க படிக்கும் பள்ளியும் ஆதரவு அளித்து வருகிறது. 2022ல் நடைபெற்ற ஃபியூட்சர் டைக்கூன் ஸ்டார்ட்டப் சேலஞ்ச் போட்டியில் நாங்க முதலிடம் பெற்றோம். அதற்கு பள்ளி நிர்வாகமும் எங்களை பாராட்டியது. எல்லாவற்றையும் விட எங்க பெற்றோரின் உதவியில்லாமல் எங்களால் இவ்வளவு தூரம் இந்தத் தொழிலை மேம்படுத்தியிருக்க முடியாது. அவர்களின் ஊக்குவிப்புதான் ஒரு ஆட்டில் இருந்து 85 ஆடுகளாக எங்களின் பண்ணை உயர்ந்துள்ளது. எங்களின் வளர்ச்சியை பார்த்து பலரும் ஆட்டுப் பால் பண்ணைத் தொழில் குறித்து பயிற்சி அளிக்கும்படி கேட்டு வருகிறார்கள்.

ஆர்வமுள்ளவர்களுக்கு தொழில் பற்றிய பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறோம். இதில் எங்களைப் போல் பள்ளிக்கு செல்பவர்கள்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் எங்க பண்ணையில் எங்கள் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறோம்’’ என்ற மன்னத், பல இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகிறார். “இன்றைய சூழலில் எல்லாவற்றையும் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. உங்களிடம் ஒரு சரியான யோசனை இருந்தால் முதலில் அதனை செயல்படுத்துங்கள். அது சிறிய அளவில் இருந்தாலும் சரி. எங்களிடம் ஒரு ஆடு இருந்த போது கூட நாங்கள் இவ்வளவு பெரிய பண்ணை அமைத்து அதன் மூலம் தொழில் செய்வோம் என்று நினைக்கவில்லை.

உழைப்பு இருந்தால் நிச்சயமாக அதற்கேற்ற பலன் இருக்கும். இளம் வயதிலேயே தொழில் தொடங்குவதால் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். படிக்கும் போதே பணம் ஈட்டுவதால் நமக்குத் தேவையான குறிப்பாக கல்வி செலவிற்கும் பெரும் உதவியாக இருக்கும். பொருளாதார சுதந்திரத்துடன் இருக்க முடியும். குழந்தைகள் ஏதேனும் செய்ய விரும்பினால் பெற்ேறார்கள் கண்டிப்பாக ஊக்கமளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும்” என்ற மன்னத், எக்நூர் சகோதரிகளுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் பண்ணைகள் அமைத்து தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்பது வருங்கால திட்டமாம்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்