Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மின்னி ஒளிர்ந்து பாதியில் மறைந்தவர்! எம்.எஸ்.எஸ். பாக்கியம்

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்

நீள் வட்ட முக அமைப்பு, நடுத்தரமான உயரம், கதை பேசும் கண்கள், விழிகளை அகல விரித்துப் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு ஏற்படும் அச்சம், கணீர் என்ற தெளிவான குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, சொந்தக் குரலில் பாடும் திறன் என அத்தனை திறமைகளையும் தன்னகத்தே கொண்டவர். பெரும்பாலான படங்களில் அவர் நகைச்சுவை நடிகையாக, வில்லியாக, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் ஒளிர்ந்திருக்கிறார். அக்கால நடிக, நடிகையரைப் போன்றே நாடகக் குழுக்களில் இணைந்து, பல்வேறு பாத்திரங்களையும் ஏற்று நடித்து பட்டை தீட்டப்பட்ட பின்னரே திரைப்படங்களில் வைரம் போல் மின்னியிருக்கிறார். ஏறக்குறைய நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். திருச்சி வானொலி நிலைய நாடகங்களிலும் தன் குரல் வழி காத்திரமாக நடிப்பை வெளிப்படுத்தியவர் அவர்.

1926 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள் திருச்சிராப்பள்ளியை அடுத்த மருங்காபுரியில் பிறந்து வளர்ந்தவர் மருங்காபுரி செல்லம்மாள் சிவ பாக்கியம். இப்பெயரின் சுருக்க வடிவமே எம்.எஸ்.எஸ். பாக்கியம். ஏற்கனவே 1930களில் பி.எஸ். சிவபாக்கியம் என்ற நடிகை இசைத்தட்டுகளில் பாடிப் பெரும் புகழடைந்து, பின்னர் திரைப்படங்களில் நடிகையாகவும் பிரபலமாகி பரவலாக அறியப்பட்டவர்.

அக்கால நடிகையர்கள் பலர் இவ்வாறு ஒரே பெயரில் புகழ் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். புனைப்பெயர்களைச் சூட்டிக்கொள்ளும் வழக்கமும் பரவலாகாத காலம் அது. அதனால் வேறு வேறு தலைப்பு எழுத்துகளோடு ஒரே பெயரைக் கொண்ட நடிகையர் பலர் இருந்திருக்கிறார்கள். அவ்வாறான பெயர்க் குழப்பம் தனக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் தன் பெயரை எம்.எஸ்.எஸ். பாக்கியம் எனச் சுருக்கி வைத்துக்கொண்டார். பெயரில் சுருக்கம் இருந்ததே தவிர, அவருக்கான பட வாய்ப்புகளிலும் நடிப்பிலும் புகழிலும் எந்தச் சுருக்கமும் இருந்ததில்லை.

நாடகக் குழுக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பாக்கியம்…

மருங்காபுரி ஜமீன்தாரிடம் கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்த நல்லசிவம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர் சிவபாக்கியம். ஒன்றரை வயதுக் குழந்தையாக பாக்கியம் வளர்ந்து வரும் நிலையில் தாயார் செல்லம்மாள் காலமாகவே, தாயைப் பெற்ற பாட்டனார், பாட்டியாரின் அரவணைப்பில் பாக்கியமும் அவருடைய அக்காளும் வளர்த்து ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். மருங்காபுரியிலேயே ஆரம்பப் பள்ளிக்கல்வியை முடித்து ஆறாம் வகுப்பில் சேர்ந்த நேரம் பாட்டனாரும் மரணமடையவே, தொடர்ந்து பாட்டியாரால் பேத்திகளை பள்ளிக்கு அனுப்ப இயலாத நெருக்கடியான சூழல் உருவானது.

அக்காலகட்டச் சூழலில் இவ்வாறு படிக்க இயலாமல் போகும் பல குழந்தைகள் - அது ஆணோ பெண்ணோ எவராயினும் - நாடகக் குழுக்களில் சேர்ந்து எழுத்தறிவு பெற்றதோடு, ஆடலோ, பாடலோ, நடிப்போ ஏதாவது ஒன்றைக் கற்றுத் தேர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் இருந்தன. குடும்பச்சூழல், வறுமை நிலை போன்றவை அதைத் தீர்மானித்தன. பாய்ஸ் கம்பெனிகளில் இவ்வாறாக இளம் பிள்ளைகள் பயிற்றுவிக்கப்பட்டதோடு அவர்கள் வாழ்க்கைப்பாட்டையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் இடங்களாகவும் அன்றைய நாடகக் குழுக்கள் இருந்தன.

சடையப்பக் கொத்தனார் என்ற நாடகக் கலைஞர் வலையப்பட்டி என்ற ஊரில் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் பாக்கியம் இணைந்து ஒன்றரை ஆண்டு காலம் நடிப்புப் பயிற்சியைப் பெற்று வந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த நாடகக் கம்பெனியும் மூடப்படவே, பொன்னமராவதியிலுள்ள கோட்டயத்தைச் சார்ந்தவரான பி.கைலாசம் அய்யர் என்பவரிடம் சாஸ்திரிய இசையை முறைப்படி பயில ஆரம்பித்தார். நடிப்பைத் தொழிலாகத் தேர்வு செய்ய வேண்டுமெனில் இசைப் பயிற்சி மிக அவசியம் என்பதால் பாக்கியம் அதைத் தேர்வு செய்து பயின்றார்.

அவ்வேளையில் யதார்த்தம் டி,பி. பொன்னுசாமி பிள்ளை நடத்தி வந்த மங்கள பால கான சபா நாடகக் குழுவினர் பொன்னமராவதியில் நாடகங்கள் நடத்துவதற்காக வந்து சேர்ந்தனர். பாக்கியம் அக்குழுவினருடன் இணைந்து ‘இழந்த காதல்’ நாடகத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்தார். அப்போது மிகப் பரவலாக நடத்தப்பட்ட புகழ் பெற்ற நாடகம் அது. அத்துடன் ‘இராமாயணம்’, ‘கண்டி ராஜா’ போன்ற நாடகங்களிலும் தன் நடிப்புப் பணியைத் தொடர்ந்தார்.

ஆனால், தொடர்ந்து இந்த நாடகக் குழுவை நடத்த முடியாமல் நலிந்து போன நிலையில், அதனை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்கனவே நடத்தி வந்த ‘என்னெஸ்கே நாடகக் குழு’வுடன் ஒன்றாக இணைக்கும் நோக்கத்துடன் என்.எஸ்.கிருஷ்ணன் வசமே ஒப்படைத்தார் பொன்னுசாமி பிள்ளை. அதன் பின் இரு குழுக்களின் நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரே குழுவினராகத் தங்கள் நாடகப் பயணத்தைத் தொடர்ந்தனர். அவ்வாறு இணைவதில் விருப்பமில்லாத ஒரு சிலர் குழுவை விட்டு விலகி வேறு வேறு நாடகக் குழுக்களில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள். அவ்வாறு விலகியவர்களில் எம்.எஸ்.எஸ்.பாக்கியமும் ஒருவர்.

பன்முகத் தன்மை கொண்ட பாத்திரங்களில் பிரகாசித்தவர்அப்போது ‘வைரம்’ அருணாசலம் செட்டியார் ‘ ராம பாலகான சபா’ என்ற பெயரில் புதிதாக ஒரு நாடகக் குழுவை ஆரம்பிக்க இருப்பதாகவும் அது குறித்துப் பத்திரிகைகளிலும் பரவலாக விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்த பாக்கியம், அந்த நாடகக் கம்பெனியில் இணைந்து பயணிக்கத் தொடங்கினார். ‘பக்த சாருகதாசர்’ என்ற நாடகத்தில் நகைச்சுவையாக நடித்து சக்கைப் போடு போட்டார்.

‘தாக சாந்தி’ நாடகத்திலோ கதாநாயகியாக நடித்துப் பிரமாதப்படுத்தினார். நாடக வாழ்க்கையில் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேடங்களை அளிக்காமல் பலவிதமான வேடங்களை அளிப்பதும் நடிகர்களை பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும் அவர்களை மேலும் மேலும் வளர்த்தெடுப்பதற்கான ஓர் உத்தியே. அதன்படியே ‘திருமழிசை ஆழ்வார்’, ‘குடும்ப வாழ்க்கை’, ‘விஜய நகர சாம்ராஜ்ஜியம்’, ‘செயின்ட் ஃபிலோமினா’, ‘எதிர்பார்த்தது’ போன்ற பலவிதமான நாடகங்களிலும் பாக்கியம் கோலோச்சினார்.

காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் என அன்றைய மதராஸ் ராஜதானியில் உள்ள பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக நாடகங்கள் நடத்தப்பட்டபோது தவறாமல் பங்கேற்று அனுபவம் மிக்கதொரு நடிகையாகத் தன்னை வளர்த்துக்கொண்டவர் பாக்கியம். இத்தகைய திறமைதான் அவரை திரைப்படங்களை நோக்கி உந்தித் தள்ளியது. பல ஊர்களில் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னர், ‘ராம பாலகான சபா’ 1945 ஆம் ஆண்டில் மதராஸில் அடி எடுத்து வைத்தது. இங்கு மட்டுமே ஓராண்டுக்கும் மேல் தங்கியிருந்து இக்குழுவினர் நாடகங்களை அரங்கு நிறைந்த காட்சிகளாக நடத்தி ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார்கள். நாடகம் பார்ப்பதற்காக வந்திருந்த நாடக ஆர்வலர்களின் பார்வையில் பட்டு திரைப்பட நடிகையாகும் வாய்ப்பும் பாக்கியத்தைத் தேடி வந்தது.

ஜூபிடர் நிறுவனத்தின் ஓர் ஒப்பற்ற அறிமுகம்

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கண் மருத்துவரான ஓ.ஆர். பாலு, அவரே ஒரு திரைப்பட நடிகரும் கூட. தவறாமல் நாடகங்களை விரும்பி ரசித்துப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான கலா ரசிகர், தொடர்ச்சியாக நாடகங்களை ஆதரித்து வந்தவர். அத்துடன் கோவையில் உள்ள திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ கம்பெனியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பும் இருந்து வந்தது.

எம்.எஸ்.எஸ். பாக்கியத்தின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரை ஜூபிடர் சோமுவுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, அவரைப் படங்களில் நடிக்க வைக்கப் பரிந்துரையும் செய்துள்ளார். அதன் பேரிலேயே 1946ல் வெளியான ஜூபிடரின் ‘வித்யாபதி’ படத்தில் நகைச்சுவை நடிகையாக, நாராயண பாகவதர் பாத்திரத்தில் நடித்த எம்.என். நம்பியாரின் மனைவியாக அறிமுகமானார் பாக்கியம்.

வடுவூர் துரைசாமி அய்யங்காரின் ‘வித்யாசாகர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது ‘வித்யாபதி’ திரைப்படம். இப்படத்தில் நடித்த இந்த நகைச்சுவை ஜோடி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ஜூபிடர் தயாரித்த வேறு பல படங்களிலும் இணைந்து நடித்தனர். காளி என்.ரத்னம் - சி.டி. ராஜகாந்தம், என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ. மதுரம் ஜோடிகளை போல் இந்த ஜோடியையும் ரசிகர்கள் விரும்பி வரவேற்றனர். 1946 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்குள் ஜூபிடர் நிறுவனத்தின் ஒப்பந்த நடிகையாக ஏறக்குறைய பதினொரு படங்களில் எம்.எஸ்.எஸ். பாக்கியம் தொடர்ந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூபிடர் நிறுவனத்தில் அறிமுகமான காலம் தொட்டே, பல படங்களில் படம் நெடுக வரக்கூடிய, ஏறக்குறைய கதாநாயகிக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பும் சவாலும் நிறைந்த வேடங்கள் அவருக்கு வழங்கப்பட்டமை அவரது நடிப்புத் திறனுக்குக் கிடைத்த ஓர் ஒப்பற்ற வாய்ப்பு. அவரது ஆரம்ப காலத் திரைப்படங்களைக் காணும்போது இந்த எண்ணம் தவறாமல் எழுவதைத் தவிர்க்க இயலாது.

பகுவின் தங்கை பகுணியாக அமர்க்களம்

‘ராஜகுமாரி’ எம்.ஜி.ராமச்சந்திரன் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த இந்தப் படம் இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ராஜா, ராணி, மந்திரவாதி, மாயாஜாலங்கள், சூழ்ச்சிகள் நிறைந்த படம். 1951ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பாதாள பைரவி’க்கு முன்னோடி இப்படம் என்றும் கொள்ளலாம். மந்திரவாதி தன் மாயாஜால வித்தைகள் மூலம் கதாநாயகியும் இளவரசியுமான மல்லிகாவை (மாலதி) கடத்திக்கொண்டு போய் ஒரு ரகசியத் தீவில் வைத்திருக்கிறான்.

பாதாள பைரவியிலும் இதே மாலதிதான் கதாநாயகி. அவளைத் தேடி புறப்படும் ஆருயிர்க் காதலன் சுகுமார் (எம்.ஜி.ஆர்), அவனுக்கு உதவும் உற்ற தோழமைகளும் உடன்பிறந்த சகோதர சகோதரியுமான பகு (எம்.என்.நம்பியார்), பகுணி (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்). கதாநாயகி மல்லிகாவாக நடித்த மாலதியை விட அதிக நேரம் திரையில் தோன்றுபவரும், ஆடிப் பாடி, தந்திரோபாயங்களை மேற்கொண்டு அதிபுத்திசாலிப் பெண்ணாகவும், நடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் பெறுபவரும் பகுணியாக நடித்த எம்.எஸ்.எஸ். பாக்கியம்தான்.

பகுவும் பகுணியும் ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு பாக்குத் தோப்புகளின் ஊடே பாடியவாறே அறிமுகமாகும் காட்சியே அசத்தல். கதாநாயகியைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அறிவாற்றல் நிரம்பியது. கதாநாயகனும் புதியவர் எனும்போது பகுவும் பகுணியும் கிட்டத்தட்ட நாயக, நாயகிக்கு இணையான பாத்திரங்களே.

மந்திரவாதிக்கு (எம்.ஆர்.சாமிநாதன்) ரகசியக் குகைக்குள் கிடைக்கும் மந்திர விளக்கு, அதனைத் திருப்பினால் விளக்கைக் கையில் வைத்திருக்கும் எஜமானனுக்கு எதிரில் தோன்றி, அடிமைச் சேவகம் செய்யும் குட்டி பூதம் என ஆயிரத்தொரு இரவு கதைகளில் ஒன்றான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தையும் கதையையும் நினைவுறுத்தும் காட்சிகளும் ரசிக்கத்தக்கவையே… கலைஞர் கருணாநிதி முதன்முதலாக வசனம் எழுதிய படமும் கூட. ஒவ்வொரு வசனமும் ஆணி அறைந்தாற் போல் ஆழமான பொருளை உணர்த்தக் கூடியவையாக இருப்பதும் சிறப்பு. கலைஞரின் எழுத்துத் திறனுக்குக் கேட்க வேண்டுமா என்ன?

காளியம்மாளும் அவளது நேர்மைப் பண்புகளும்!

1948 ஆம் ஆண்டின் படமான ‘மோகினி’ எம்.ஜி.ஆரும் வி.என். ஜானகியும் இணையாக நடித்த படம். இப்படத்திலும் மோகினி (வி.என்.ஜானகி), குமாரி (மாதுரி தேவி) என இரண்டு நாட்டு இளவரசிகளும் கடத்தப்படுகிறார்கள். இந்தப் படம் சற்றே நேர்த்தியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டல் வில்லனாக ஆஜானுபாகுவான தோற்றத்தில் அச்சுறுத்தும் காளி(ஆர்.பாலசுப்பிரமணியன்). பறக்கும் மரக் குதிரையை தயாரித்து அதை வைத்தே படம் முழுதும் ஏமாற்று வேலைகளைச் செய்யும் தந்திரக்கார பாத்திரம். காதலனும் காதலியுமாக நம்பியாரும், பாக்கியமும் இப்படத்திலும் நிறைந்திருக்கிறார்கள்.

நம்பியார் கூட சில நேரங்களில் வில்லத்தனம் தெறிக்க முதன்மை வில்லனுக்குத் துணை போய்விடுகிறார். ஆனால், அவரது காதலியாக நடித்திருக்கும் பாக்கியம் (காளியம்மாள்) அதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தி மிக நேர்மையானவளாக, கடத்தப்பட்ட இளவரசிகள் இருவரையும் மீட்பதற்கான அத்தனை முயற்சிகளையும் நாட்டின் இளவரசன் மோகன்குமார் (டி.எஸ். பாலையா), சேனாதிபதி விஜயகுமார் (எம்.ஜி.ஆர்) இருவருக்கும் உதவியாக பல வேலைகளைச் செய்யக்கூடியவராக நடிப்பதற்கும் அதிகம் வாய்ப்புள்ள பாத்திரமாக மிளிர்கிறார். நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத படம் இது. பாக்கியத்தின் ஆரம்ப காலப் படங்களுடன் ஒப்பிடும்போது அவரது பிற்காலப் படங்களில் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடித்துச் சிறப்பித்திருக்கிறார்.

புன்னகையை வரவழைக்கும் சொகுசம்மா என்ற பட்டப்பெயர்!

‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் மனைவியைப் பிரிந்து தன் மகள் லல்லியுடன் (குட்டி பத்மினி) வாழும் நாயகனான சேகர் (ஜெய்சங்கர்) வீட்டில், குழந்தைக்கு நடனம் கற்றுத் தருவதற்காக வரும் ஆட்டக்காரியின் (சாந்தா) தாய் சொகுசம்மா (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்) என்ற பேராசைக்காரப் பெண்ணாகவும் நடித்திருப்பார். அறிவாளிக் குழந்தையான லல்லி வைக்கும் சொகுசம்மா என்ற பட்டப்பெயர் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கக்கூடியது. வேலைக்காக வந்திருக்கும் வீட்டில் கூட சொகுசாக வாழ நினைப்பது, ஏமாற்றிப் பிழைப்பது என வில்லத்தனம் நிரம்பிய கதாபாத்திரம் அவருடையது. அதை எந்தக் குறையும் இல்லாமல் தன் தேர்ந்த நடிப்பாற்றலால் உயிருடன் உலவ விட்டிருப்பார் பாக்கியம். படம் வெளிவந்து அறுபதாண்டுகளைக் கடந்த பின்னும் இப்போதும் ‘சொகுசம்மா’ என்ற அந்தப் பட்டப்பெயர் இதழ்க்கடையில் புன்னகையை வரவழைக்கிறது என்றால், அதன் வீரியம் எத்தகையது..!

அதேபோல் எப்போதும் நினைவிலிருக்கும் மற்றொரு பாத்திரம் ‘கருப்புப் பணம்’ படத்தின் நடிகையின் தாயார் பாத்திரம். கணக்கு வழக்கின்றி வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் கொள்ளை போக, புலனாய்வை நிகழ்த்தும் நோக்கில் போலீஸ் அதிகாரி நடிகையின் வீட்டுக்கு வருகிறார். எவ்வளவு தொகையும், நகையும் திருடு போயிருக்கிறது என்பதை போலீஸுக்குத் தெரிவிப்பதிலேயே நடிகையான மகளுக்கும் தாய்க்கும் இடையில் பெருத்த வேறுபாடு.

நடிகையோ ஐம்பதாயிரம் போய் விட்டது என்று சொல்ல, தாயார் குறிப்பிடும் தொகையோ ஆறு லட்சம். இவர்கள் இருவரும் தெரிவிக்கும் இந்த முரணான தகவலே திருடு போனது கருப்புப் பணம் தான் என்பதை போலீஸுக்கு வெட்ட வெளிச்சமாக அறிவிக்கிறது. பணம், நகையைப் பறி கொடுத்த பின் அழுது புலம்புவதும், தான் சொன்னது தவறு, தன் மகள் சொல்வதே உண்மை என வாதிடுவது, பின்னர் நிலைமையை உணர்ந்து கொண்டு ‘எங்களை விசாரணை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விடாதீர்கள்’ என மன்றாடுவது என இரு வேறு விதமாக நடித்து அதிர வைப்பார். அதேபோல் நடிப்பதற்காக கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம் பணத்தைக் கையில் வைத்த பின்தான் கால்ஷீட் பற்றியே பேச முடியும் என அடாவடித்தனம் செய்வது என ஒரு அசலான நடிகையின் தாயாரைக் கண் முன் கொண்டு வந்து அச்சு அசலாக நிறுத்தி விடுவார்.

‘பூவும் பொட்டும்’ படத்தில் வெள்ளியாய் தலை முழுதும் நரைத்துப்போன வயதுக்கு மீறிய பாட்டி வேடம், அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே மரணம் அவரைத் தழுவிக்கொண்டு விட்டது. அவர் ஏற்கனவே நடித்து முடித்த, வீணை வித்வான் எஸ்.பாலச்சந்தரின் ‘நடு இரவில்’ திரைப்படம் மிகத் தாமதமாக இரண்டாண்டுகள் கடந்த பின்னரே வெளி வந்தது. ஏரிக்கு நடுவிலுள்ள தீவில் அமைந்திருக்கும் ஒரு மர்ம பங்களாவில் தினம் ஒரு கொலை அரங்கேறுகிறது. ஒரு நாள் இரவு நடந்த கொலையில் அன்பான கணவரைப் பறி கொடுத்துவிட்டு மகளுடன் (எல்.காஞ்சனா) துயரத்தில் மூழ்கியிருக்கும் தாயாராக நடித்திருப்பார் பாக்கியம்.

பாதியில் முடிந்து போன வாழ்க்கைப் பயணம்

1949 ஆம் ஆண்டிலேயே புதுக்கோட்டை சமஸ்தானத்தை அடுத்த குழிப்பிறை என்ற ஊரைச் சார்ந்த வணிகரான எஸ்.ஆர்.எம்.எஸ். லட்சுமணன் செட்டியாரை காதலித்து மணந்து கொண்டார். ஆனந்தமாகத் தொடர்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை, 1967, ஆகஸ்ட் மாதம் 41 வயதில் முற்றுப் பெற்றது. திறமையான ஒரு நடிகை; நீண்ட காலம் வாழ்ந்து திரைத்துறையில் தன் பங்களிப்பை வெகு காத்திரமாக அளித்திருக்க வேண்டியவர், ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகளை தவிக்கவிட்டுப் புற்றுநோய்க்கு பலியானது பெரும் துயரம்.

கடந்த மே மாதத்துடன் அவருக்கு நூற்றாண்டு நிறைவடைந்துவிட்டது. பொதுவாகவே பெண் ஆளுமைகளுக்கு இத்தகைய கொண்டாட்டங்கள் மிக அரிதானவை. ஆண் கலைஞர்கள் போல், பெண் கலைஞர்கள் இங்கு பெரிதாக நினைவுகூரப்படுவதுமில்லை. மிகப் புகழ் பெற்ற கதாநாயகிகள் போன்ற ஆளுமைப் பெண் கலைஞர்களின் நிலையே அதுதான் எனும்போது, நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனங்களின் வார்ப்பு என உருவானவர் பற்றிய நினைவுகள் மிக அரிதானவையே. ஆனால், போற்றத்தக்க பல நினைவுகளை தன்னகத்தே கொண்டவர் பாக்கியம்.

எம்.எஸ்.எஸ்.பாக்கியம் நடித்த சில படங்கள்...

வித்யாபதி, கஞ்சன், அபிமன்யு, வேலைக்காரி, கன்னியின் காதலி, விஜயகுமாரி, கிருஷ்ண விஜயம், மர்மயோகி, ராணி, மாப்பிள்ளை, சிங்காரி, தூக்குத் தூக்கி, கல்யாணம் செய்துக்கோ, நல்ல தங்கை, மேனகா, சதாரம், உத்தம புத்திரன், திருமணம், மகாலட்சுமி, எதையும் தாங்கும் இதயம், பார் மகளே பார், பலே பாண்டியா, அன்னை, ஏழைப் பங்காளன், அன்பே வா, தாலி பாக்கியம்,

கருப்புப் பணம், குழந்தையும் தெய்வமும், முத்துச்சிப்பி, பூவும் பொட்டும், ராஜா வீட்டுப்பிள்ளை, கன்ணன் என் காதலன், பூமாலை, நடு இரவில்.

தொகுப்பு: பா.ஜீவசுந்தரி