நன்றி குங்குமம் தோழி
செல்லுலாய்ட் பெண்கள்
லட்சணம் பொருந்திய அகன்று பரந்த முகம், அழகான புன்முறுவல். நெற்றியிலோ மிகப்பெரிய வட்டக் குங்குமப்பொட்டு, ஆடம்பரமாக ஜொலிக்கும் ஆபரணங்கள்; பளபளப்பும் பகட்டுமாக மின்னும் அகல ஜரிகையும் வேலைப்பாடுகளும் நிறைந்த வண்ணமயமான பட்டுச்சேலைகள், தலையில் அழகிய கொண்டை, அதைச் சுற்றியிருக்கும் பூச்சரம்.
இவற்றோடு சற்றே பருமனான உடல்வாகு, குறைந்த அளவேயான உயரம். ஆனால், கோபம் கொள்ளும் தருணங்களில் உறுத்துப் பார்க்கும் விழிகள், உதட்டைச் சற்றே கோணி, முகத்தைச் சுருக்கிப் பார்க்கும்போது ஏற்படும் முக விகாரம். ஆனால், சில நேரங்களில் அப்பாவித்தனமாக ஒரு பார்வை பார்ப்பார்; அந்த நேரம் ‘அய்யோ, பாவம்’ என்றிருக்கும். இந்த உருவத்தைச் சற்றே நம் மனக்கண்களில் நிறுத்திப் பார்த்தோமானால், தென்படும் அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் கோயம்புத்தூர் கோட்டைமேடு சரஸ்வதி. ஆம்! சி.கே.சரஸ்வதியேதான்.
கோவை மாவட்டத்தின் மையப்பகுதியாக விளங்கும் உக்கடம் அருகே உள்ளது கோட்டைமேடு என்ற பகுதி. மைசூர் மன்னரான திப்பு சுல்தான், தன் படை வீரர்களுக்கான முகாம் அமைத்திருந்ததால் கோட்டை மேடு என்று பெயர் பெற்று, வரலாற்றுச் சிறப்பைக்கொண்ட பகுதியாக விளங்கிய இங்குதான் பாரம்பரியம் மிக்க ஓர் இசைக்குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்துள்ளார். இவரது பெற்றோர் நல்ல இசைக் கலைஞர்களாகப் பரிணமித்திருக்கிறார்கள்.
சரஸ்வதியை அடுத்துப் பிறந்த இருவரும் பெண் மக்களே. திண்ணைப் பள்ளிப் படிப்புதான் என்றபோதும், இசை, நாட்டியத்தின் மீது சரஸ்வதிக்கு அதிக ஈர்ப்பு இருந்துள்ளது. இசைக்குடும்பத்தின் வாரிசு என்பதால் நாட்டியக் கலை முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. மூத்த மகளாகப் பிறந்தவராதலால் குடும்பப் பொறுப்பும் அதிகமாகவே இருந்துள்ளது. அதனால், மிக இளம் வயதிலேயே கோவை பகுதியில் இயங்கி வந்த ஒரு நாடகக் குழுவில் பத்து வயதில் பெற்றோரால் சேர்த்து விடப்பட்டு, பால பார்ட் வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நாடகங்களிலிருந்தே சரஸ்வதியின் நடிப்புலக வாழ்க்கை தொடங்குகிறது.
பிரபல நட்சத்திரங்களுடன் ‘சிவகவி’யில் அறிமுகம்!
நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்த சரஸ்வதிக்கு திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வமும் இருந்ததால் 1942ல் ஜூபிடர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த நடிகையாக இணைகிறார். சிறு சிறு வேடங்கள் கிடைத்து வந்தபோது, 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிவகவி’ திரைப்படத்தில் 15 வயதில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படம் எஸ்.எம். ராமுலு நாயுடுவின் பக்ஷி ராஜா நிறுவனத்தின் தயாரிப்பு, இயக்கத்தில் கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வெளி வந்தது.
அந்த நாளின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடிக்க அப்போதைய பிரபல நட்சத்திரங்கள் டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளிமூட்டை ராமசாமி போன்றவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு சி.கே.சரஸ்வதிக்கு அமைந்தது. கதாநாயகியாக நடித்தவர் ஜெயலட்சுமி. அவரது தோழியாக நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார் சரஸ்வதி. இவர்கள் அனைவரும் குருகுலத்தில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளாக நடித்தனர். சரஸ்வதி மிக மெலிந்த அழகிய தோற்றத்தில் இப்படத்தில் தோன்றுவார்.
கதாநாயகியான அமிர்தவல்லியின் (ஜெயலட்சுமி) மாளிகையில் அவரது தோழியாக இருப்பார். குருகுலத்தில் மிக எளிமையான உடைகளுடன் தோன்றும் இருவரும் மாளிகை வாசத்தில் ஆடம்பரமான உடைகளும், ஆபரணங்களும் அணிந்து தோற்றமளிப்பார்கள். இந்தக் காட்சிகளில் வசனம் பேசி நடிப்பதற்கான வாய்ப்பு சரஸ்வதிக்கு கிடைத்தது. சொந்த ஊரான கோவையிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையும் நடந்து முடிந்தது. இந்தப் படம் மட்டுமல்லாமல் இதன் பிறகு அவர் நடித்த ஆரம்ப காலப் படங்கள் அனைத்துமே கோவை சென்ட்ரல், பக்ஷி ராஜா போன்ற ஸ்டுடியோக்களில் எடுக்கப்பட்டதால் சரஸ்வதிக்கு சொந்த ஊரைவிட்டு வெளியேற வேண்டிய வாய்ப்பில்லாமல் போனது. அதன் பிறகே அவர் சென்னைக்குப் பயணமாகிறார்.
பிரதிகள் கிடைக்காத ‘என் மகன்’ இரண்டாம் உலகப் போர் காலத்தில் மிகக் குறைந்த நீளம் கொண்ட திரைப்படங்களே எடுக்கப்பட்டன. நம்மை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் ஆணைக்கு ஏற்ப நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்களை மூன்று நிறுவனங்கள் எடுத்து வெளியிட்டன. அவ்வாறு எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று ‘என் மகன்’. சென்ட்ரல் ஸ்டுடியோ தயாரித்த இப்படம் ‘Waterloo Bridge’ என்ற அமெரிக்க ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.
ஏற்கனவே ‘மதன காமராஜன்’ படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்த கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் நாயகன்; யூ.ஆர். ஜீவரத்தினம் நாயகி. இவர்களுடன் சி.கே. சரஸ்வதியும் கல்யாணி என்ற சிறு பாத்திரமேற்று நடித்திருந்தார். ஆனால், இப்படத்தின் பிரதி முற்றிலும் சிதைந்து தற்போது கிடைக்காமல் போய்விட்டது.
1947ல் எம்.ஜி.ஆர். முதன்முதலில் கதாநாயகனாக நடித்த ‘ராஜகுமாரி’ யில் அஞ்சலை என்ற நகைச்சுவைப் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பார். அவருடைய கணவர் நல்லானை (நாராயணப் பிள்ளை) ஓட ஓட விரட்டிக்கொண்டிருக்கும் பாத்திரம். கணவனைக் கோபத்தில் அடித்து விடுவாள் அஞ்சலை. அதன் பின் மனம் வருந்தி, அந்த ஊருக்கு மாறு வேடத்தில் வந்திருக்கும் மந்திரவாதியிடம் (எம்.ஆர்.சுவாமிநாதன்) வசிய மருந்து வாங்கி வந்து கணவனுக்கு தெரியாமல் கொடுத்த பின், அவனுடைய குணாதிசயமே மாறிப்போகும். அதைப் பார்த்து வருந்தி மீண்டும் கணவனை நலமாக்கும் முயற்சிகளில் இறங்குவார்.
சரஸ்வதி நடித்த ஒவ்வொரு படங்களிலும் வேறு வேறு பரிமாணங்களை அவர் எட்டியபோது, ஜூபிடரின் ஒப்பந்த நடிகை என்ற நிலை முடிவுக்கு வருகிறது. அதன் பின் அவர் பல்வேறு நிறுவனங்களின் படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்கும் நிலை நோக்கி முன்னேறியிருந்தார்.
எம்.ஜி.ஆர்- சிவாஜி இருவருக்கும் தாயாக…
1950ல் ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் குறிஞ்சி நாட்டின் மகாராணி சித்ராவாக நடித்தார். படத்தின் துவக்கத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணாக மிக ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு அரண்மனை நர்த்தகிகளின் நடனத்தை ரசிப்பார். லலிதா, பத்மினியின் அற்புதமான நடனக் காட்சி அது. அதன் பின் வேகமெடுக்கும் திரைக்கதையில் மகாராணி என்ற நிலை மாறி எப்படியாவது, தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் தலைமறைவாக ஓடிக்கொண்டிருப்பார். பின் நல்ல மனம் படைத்த ஒருவர் வசம் குழந்தையை ஒப்படைத்து விட்டு, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஊரின் எல்லையில் இருக்கும் காளி கோயிலுக்குள் தஞ்சம் அடைவார். அந்தக் கோயிலின் சிறப்பு ஆண்கள் எவரும் எந்தக் காலத்திலும் உள்ளே நுழைய முடியாது.
உள்ளே இருக்கும் பெண்கள் அங்கிருந்து வெளியேறவும் முடியாது. அவ்வாறு அங்கு வந்து தஞ்சமடைந்த பெண்கள் பலருடன் அவரும் சன்னியாசினி போன்ற தோற்றத்தில் வாழ்வார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின் அங்கிருந்து வெளியேறும் சூழல் உருவாகும். அவரது மகனாக எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். உடன் நாயகியாக வி.என்.ஜானகி. வசனம் கலைஞர் மு.கருணாநிதி. அற்புதமான ஒரு படைப்பு இப்படம். சி.கே.சரஸ்வதியின் பங்களிப்பும் அபாரம் என்றே சொல்லலாம். இதில் சிறப்பு என்னவென்றால், மகாராணியின் முன்பாக நாட்டியமாடிய நடன மணிகளில் ஒருவரான நாட்டியப் பேரொளி பத்மினியுடன், தாயும் மகளுமாக 18 ஆண்டுகளின் பின் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடித்தார்.
அதேபோல் 1954ல் வெளியான ‘தூக்குத் தூக்கி’யிலும் சுந்தரபுரி நாட்டின் மகாராணியாக அமைதியே வடிவான அன்னையாக நடித்திருப்பார். இளைய மகனும் இளவரசனுமான சுந்தராங்கதன் (சிவாஜி கணேசன்) நாடு கடத்தப்பட்டதை அறிந்து மகனிடம் கண்ணீருடன் பேசும் அமைதி வடிவான ஓர் அன்னையை கண் முன் நிறுத்தியிருப்பார். ஆனால், அதன் பிறகு அவருக்கு அமைந்தவற்றில் பெரும்பான்மையானவை எதிர்மறையான வேடங்களே வில்லத்தனம் நிரம்பிய வேடங்களில் அதிகம் நடித்தவர்...
கொங்கு மண்ணில் பிறந்தவர், கொங்குத் தமிழில் பேசி எந்தப் படத்திலும் நடித்ததில்லை. பெரும்பாலான படங்களில் அவருக்கு ஒரே மொழிதான். அது வெடுக் வெடுக்கென்று எதிரில் இருப்பவர்களின் மனங்களை நோகடிக்கும் வகையிலான பேச்சு மொழி. கண்களை உருட்டி விழித்து அவர் பார்க்கும் பார்வையும் குணநலன்களும் எதிரில் இருப்பவர்களையும் பார்வையாளர்களையும் கதி கலங்க வைத்துவிடும்.
இயக்குநர் பீம்சிங்கின் ‘ப’ வரிசைப் படங்கள் பலவற்றிலும் நடித்தவர். 1962ல் வெளியான ‘பாத காணிக்கை’ படத்தில் சிறுவனான கமலுக்கு பழைய சோற்றை வைத்து சாப்பிடச் சொல்வதும் பக்கத்திலேயே அமர்ந்து ஒரு தட்டு நிறைய இட்லிகளை வைத்துக்கொண்டு தான் சாப்பிடுவதுமாக என மிகக் குரூரமாக நடந்து கொள்வார். பல ஆண்டு கால இடைவெளிக்குப் பின் கமலுடன் ‘காதலா காதலா’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்து ரசிகர்களைக் கலகலக்க வைத்தார்கள்.
‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் மாமியாரும் (சி.கே.சரஸ்வதி) மருமகளும் (எம்.சரோஜா) போடும் சண்டைகள், பிச்சைக்காரருக்கு யார் பிச்சையிடுவது என்பதில் தொடங்கி நகைச்சுவைக் காட்சியாகவே அது மாறியது. ஆனால், சினிமா பார்க்கச் செல்லும்போது மட்டும் மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக இருப்பார்கள். ‘பாகப்பிரிவினை’ சி.கே.சரஸ்வதியின் அருமையான நடிப்புக்கு நல்ல உதாரணம். கூட்டுக் குடும்பத்துக்கு இடையே சுவர் எழும்பும் வேளையில் அண்ணன் (பாலையா), தம்பி (எஸ்.வி.சுப்பையா) என இரு ஆண்கள் மனம் கலங்கி அழும் காட்சியில் தியேட்டரே கண்ணீர் விடும். பொதுவாக பெண்கள் அழுவது வாடிக்கை. இரு ஆண்கள் அழுவதைப் பார்த்து ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர் அன்று.
பலவிதமான பிரச்னைகளுக்குப் பின்பும் கல் நெஞ்சத்துடன் நடமாடும் பெரியம்மா அகிலாண்டமாக அதகளம் செய்வார். மருமகன் சிங்கப்பூரானிடம் (எம்.ஆர்.ராதா) தன் பணம், நகைகளை இழந்த பின் அழுது அரற்றிக் கதறி கையறு நிலையில் பித்துப் பிடித்தாற்போல் நடிப்பதிலும் வல்லவர் என்பதை நிரூபித்தார். ‘நவராத்திரி’யில் மனநல மருத்துவமனையில் எலி வால் பின்னலுடன் தோன்றும் வித்தியாசமான சரஸ்வதி, சாவித்திரி, மனோரமா, டி.பி.முத்துலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், திலகம் ராஜகுமாரி என்று அனைத்து மனநோயாளிப் பெண்களுடனும் இணைந்து ஆடும் ஆட்டம் அசத்தல். அதிலும் அந்த மேற்கத்திய இசைக்கு அவர்கள் போடும் ஆட்டம் கண்களுக்கு அத்தனை குளிர்ச்சி…! எவ்வளவு திறமை வாய்ந்த நடிகைகள்…!
‘இரு கோடுகள்’ படத்தில் அவரது பாத்திரம் குறைந்த நேரமே என்றாலும் ‘‘நான் என்ன இங்கிதம் தெரியாதவளா? எப்ப சத்தம் போடணும்? எதுக்கு சத்தம் போடணும்” என்று அவர் பேசும் வசனம் மிக வலுவானதும் வன்மையானதுமாகும். அது என்றென்றும் நம் நினைவில் நிற்பதும் கூட. ‘முரடன் முத்து’, ‘லட்சுமி கல்யாணம்’, ‘குலமா குணமா?, ‘வாணி ராணி’, ‘இருளும் ஒளியும்’ என பல படங்களிலும் கொடூர மனம் படைத்த மாமியார், சிற்றன்னை, பெரியம்மா, அத்தை, பாட்டி என பல்வேறு உறவு நிலைகளிலும் இங்கிதமற்றுப் பேசும்போது அத்தனை வில்லத்தனம் அவர் நடிப்பில் தெறிக்கும். அதன் பின்னும் எத்தனையோ படங்கள், எவ்வளவோ கதாபாத்திரங்கள். அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, என்றென்றும் நினைவில் நிற்கிறார்.
வடிவாம்பாள் என்ற அற்புத கதாபாத்திரம்!
கொத்தமங்கலம் சுப்பு உருவாக்கிய வடிவாம்பாள் என்ற கதாபாத்திரத்துக்கு ஏற்றாற் போன்ற அசல் உருவமாக இயக்குநர் ஏ.பி.நாகராஜனால் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு உயிர் கொடுத்தவர் சிகே.சரஸ்வதி. அத்தனை வேடப் பொருத்தம். குல வழக்கப்படி மகள் மோகனாம்பாளுக்கு (பத்மினி) ஒரு நல்ல அந்தஸ்து மிக்க புரவலரைத் தேடித் தருவதற்காக வடிவாம்பாள் மேற்கொள்கின்ற அத்தனை முயற்சிகளும் தவிடு பொடியாகின்றன.
நாகலிங்கம் (ஈ.ஆர்.சகாதேவன்) தரும் வைர மூக்குத்தி கண்டு முகம் மலர மகிழ்ச்சியிலாழ்ந்து போவது, மகள் அதைத் தூக்கி எறியும்போது அச்சத்தில் பதறுவது, உடை மாற்றிக் கொள்ளும் முன் நாகலிங்கம் உள்ளே நுழைய, அவரைக் கடிந்துகொள்வது, வைத்தி (நாகேஷ்) குழைந்து பேசும்போது பிடி கொடுக்காமல் பேசுவது, சிங்கபுரம் மைனர் (பாலாஜி) பற்றி வைத்தி பேசப்பேச அகமும் முகமும் மலர வைத்தியை வரவேற்பது, சிக்கல் சண்முக சுந்தரத்தைப் பார்க்கும்போது முகத்தில் வெளிப்படும் வெறுப்பு, வரதனும் (டி.ஆர்.ராமச்சந்திரன்), மகளும் இணைந்து நாடகம் பார்க்கப் போவதற்காக கெஞ்சும்போது மிஞ்சி நிற்பதும் பிடி கொடுக்காமல், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வது என பல பாவங்களும் அவர் முகத்தில் மின்னி மறையும்.
ஜில் ஜில் ரமாமணி (மனோரமா) வடிவாம்பாளின் இளமைக் காலத்தை நினைவுபடுத்தி, ‘அவுக ஆடாத ஆட்டமா?’ என்று பேசும்போது சற்றே வெட்கப் புன்னகையுடன் அதை ஆமோதித்துச் சிரிப்பதும், மகள் அரங்கில் ஆடும்போது பாடும் பாடலைக் கேட்டுக் குழப்பத்துடன் அவர் முகத்தில் தோன்றும், ‘என்ன பாடுறா இவ?’ என்ற சிந்தனையோடு வெற்றிலைப் பெட்டியை (எம்.சரோஜா) குழப்பத்துடன் பார்க்கும்போதும் பிரமாதப்படுத்துவார்.
சிக்கல் குரூப் வந்தால் மதன்பூர் அரண்மனைக்கு போகக்கூடாது என்பதில் அவர் காட்டும் பிடிவாதமும், மகள் வற்புறுத்திக் கெஞ்சிப் போகலாம் என்று சொல்லும்போது வெளிப்படும் முகபாவமும் சிறப்பானவை. இறுதியாக, மகள் தற்கொலை செய்து கொள்ள முயலும்போது, கண்ணீர் விட்டுக் கதறுவதும், ‘உன் இஷ்டம் போல் சண்முகசுந்தரத்தைக் கல்யாணம் செய்து கொள்’ என்று தன் பிடிவாதப் போக்கிலிருந்து மாறும்போது வெளிப்படும் மகள் மீதான அன்பும் கனிவும், மகளைத் தவிர வேறெதுவும் பெரிதில்லை என முடிவெடுப்பது வரையிலும் வடிவாம்பாளின் பாத்திரம் மோகனாம்பாளை போன்றே எக்காலத்தும் நினைவில் நிற்கும்.
முதுமை நிலையிலும் விட்டுவிடாத நடிப்பு!
90களுக்குப் பின் அவர் நடித்தவை சிறு சிறு வேடங்களே. 1995ல் வெளியான ‘நான் பெத்த மகனே’ திரைப்படத்தில் வக்கீல் வரதராஜனின் (கவுண்டமணி) பாவப்பட்ட தாயாக நடித்திருப்பார். அந்தப் படம் இளம் பெண்களின் பிரச்னைகள் மட்டுமல்லாமல், வயதான பெண்கள் பல குடும்பங்களில் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும் சேர்த்தே பேசியது.
சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட துயரம்!
இக்கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட எவ்வித ஆடை அலங்காரங்களும் இல்லாமல் நார் மடிச் சேலை என்று சொல்லப்படும் லேசான காவி வண்ணம் கொண்ட சேலையும், நெற்றியில் விபூதிப்பட்டையும் அணிந்த மிக மிக எளிய தோற்றத்துடன் இருமுறை அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை பேருந்துப் பயணத்தில் சக பயணியாக... மற்றொரு முறை ஆழ்வார்பேட்டை ஏ.பி.என். டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேச வந்த தருணத்தில்… இரு முறையுமே அழகான புன்முறுவலோடும் கனிவான பார்வையோடும் அவரைப் பார்த்திருக்கிறேன். சில பத்திரிகை மற்றும் திரைத்துறை சார்ந்த நண்பர்களிடம் அவர் பற்றி பேசும்போதும் அவரது இயல்பு அதுதான் என்றும் திரைப்படங்களில் மட்டுமே அவர் அடாவடிப் பெண்ணாக நடித்தவர்; நேரில் எப்போதுமே அதற்கு நேர்மாறான குணமும் அமைதியும், இளகிய மனப்பாங்கும் கொண்டவர் என்று 1985லேயே நண்பர்கள் அவர் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.
அவர் விரும்பி மணந்து கொண்ட கணவராலேயே வஞ்சிக்கப்பட்டு, பாடுபட்டு சம்பாதித்த அனைத்து சொத்துகளும் சுரண்டப்பட்டு நிர்கதியான நிலைக்கு ஆளானவர். தங்குவதற்கு இடமின்றி சக திரையுலக் கலைஞர்களும் நண்பர்களுமான ஒரு சிலரின் உதவியால் வாழ்க்கையைத் தட்டுத்தடுமாறி நடத்தியவர். நலிந்த திரைக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 2000 ரூபாயை பெறுவதற்காக, வயதான காலத்திலும் அலைந்து திரிந்து பெற்றிருக்கிறார்.
சி.கே.சரஸ்வதி குறித்து யோசிக்கும் வேளையில் அவரது அசல் தோற்றமும் திரையில் பார்க்கும் பிரதி பிம்பங்களும் எதிர் எதிரானவை என்ற புரிதல் ஏற்பட்டது. அவர் மட்டுமல்ல, திரைக் கலைஞர்கள் பலரது பிம்பங்களும் அசல் முகங்களும் வேறு வேறானவையே என்பதையும் நன்கு உணர முடிகிறது. ஆரம்ப நிலையில் ஓய்வின்றி உழைத்து ஏராளம் சம்பாதித்த காலம். அவரது வாழ்வின் பிற்பகுதியும், இறுதிக்காலமும் துன்ப துயரங்களும் வறுமையும் சூழ்ந்து அவரைத் திணறடித்த காலம். அவரது இறுதிப்படமான ‘பொன்மானைத் தேடி’ வெளிவருவதற்கு முன்னதாகவே 1997ல் எல்லாத் துன்பங்களிலிருந்தும் உலக வாழ்க்கையிலிருந்தும் விடுதலை பெற்றுக்கொண்டார்.
மரணம் மட்டுமே அவருக்கு நிம்மதியை அளித்திருக்கிறது. 1942ல் தொடங்கிய அவரது திரையுலக வாழ்வு 1997 ஆம் ஆண்டு வரை தொடர்ந்துள்ளது. ஏறக்குறைய 55 ஆண்டுகளில் 400 படங்கள் என்ற மிக நீண்ட இலக்கில் ஐந்து தலைமுறை கலைஞர்களுடன் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இத்தனை ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் அவர் விருதுகள் எதையும் பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது. ஆனால், என்றென்றும் ரசிகர்களின் நினைவுகளில் வாழ்கிறார் சி.கே.சரஸ்வதி.
தொகுப்பு: பா.ஜீவசுந்தரி


