Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒரு கூரை... பதினாறு கலைஞர்கள்... பல்வேறு கலைகள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்’ கல்லூரியில்தான் என்னுடைய பட்டப்படிப்பினை முடித்தேன். படிப்பு முடித்திருந்தாலும் இன்று வரை என்னுடைய தனிப்பட்ட படைப்பினை படைத்து வருகிறேன். என்னுடைய படைப்புகள் பல கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன’’ என்று கூறும் நிவேதா, கலைகள் சார்ந்த நிகழ்வுகளை நிர்வகிக்கவும் செய்கிறார். அதன் முன்னோடியாக நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரை இவர் முதல் முறையாக தனித்துவமான கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளார்.

‘‘கலைஞர்களுக்காக கண்காட்சி நிகழ்த்துவது, அருங்காட்சியகம் மற்றும் கலாச்சாரங்கள் குறித்து நிர்வகித்து வந்தேன். எனக்கு எப்போதும் ஒரு கலையினை பார்வையாளருக்காக வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதாவது, ஒவ்வொரு கலைஞரும் தன்னுடைய படைப்பினை ஒரு கேலரியில் விற்பனைக்காக வைத்திருப்பார்கள். அல்லது கண்காட்சியில் இடம் பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால், ஒரு கேலரி எவ்வாறு செயல்படுகிறது என்று பலருக்கு தெரியாது. குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கும் நமக்குமான உறவு என்ன என்பதையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக ஆர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படித்தேன். ஆர்ட் சென்டர், கேலரி, கண்காட்சிகள் மற்றும் அருங்காட்சியகங்களை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பது குறித்த படிப்புதான் இது. படிக்கும் காலத்தில் ஒரு நிகழ்ச்சியினை எவ்வாறு தொகுத்து நடத்த வேண்டும் என்று எல்லாம் தெரியாது. படித்து முடித்து கேலரி மற்றும் அருங்காட்சியகத்தில் வேலைக்கு சேர்ந்த போதுதான் அதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்தை இயக்குவது போலதான் இந்த வேலையும்’’ என்றவர், ‘த மெட்ராஸ் வார்ப்’ கண்காட்சி குறித்து பகிர்ந்தார்.

‘‘இது நான் முதன் முதலாக இயக்கும் கண்காட்சி. மற்ற கேலரியில் வேலை பார்த்த போது, அவர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்படவேண்டும். பொதுவாகவே என்னைப் போன்ற கலைஞர்கள் அனைவரும் தங்களின் படைப்புகள் கண்காட்சி, அருங்காட்சியகத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், காப்பகப்படுத்துவது, ஆவணப்படுத்துவது, பாதுகாப்பது, பேணுவது என பல துறைகள் உள்ளன.

அதில் நான் அருங்காட்சியகத்தினை நிர்வகிப்பது குறித்து படிப்பதால், ஒரு கண்காட்சியினை தனிப்பட்ட முறையில் அமைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதில் என்னுடையது மட்டுமில்லாமல் எனக்கு தெரிந்தவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த விரும்பினேன். கலை என்றால் ஓவியம், சிற்பம் வடிப்பது மட்டுமில்லை புகைப்படம் எடுப்பது, பிராஸ்தெடிக் மேக்கப்பும் ஒருவித கலைதான். அதனால் கல்லூரி நண்பர்கள், உடன் படித்தவர்களின் படைப்புகளை இந்த கண்காட்சியில் இடம் பெற செய்துள்ளேன். என்னுடைய விருப்பத்தை கூறிய போது அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அப்படித்தான் ‘த மெட்ராஸ் வார்ப்’ உருவானது.

இதில் இடம் பெற்றிருப்பவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட திறமை கொண்டவர்கள். ஓவியர்கள் மட்டுமில்லாமல் மேக்கப் துறையில் பிராஸ்தெடிக் வடிவமைப்பவர்கள், சிற்பிகள், செராமிக் கலைஞர்கள் என பலரும் கலந்துள்ளனர். இவ்வாறு பல கலையும் ஒரே இடத்தில் இடம் பெரும் போது பார்வையாளர்களுக்கு கலை விருந்து படைத்தது போல் இருக்கும். இந்தக் கண்காட்சியில் குறிப்பிட்ட தீம் கிடையாது. அவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தலாம்.

என்னையும் சேர்த்து மொத்தம் 16 கலைஞர்கள் இதில் பங்கு பெற்று இருக்கிறார்கள். தோழி வித்தார்த்தி, செவி மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு கொண்டவர். தன் ஓவியங்கள் மூலம்தான் உரையாடுகிறார். அதேபோல் வித்யாவிற்கு செவித்திறன் குறைபாடு இருந்தாலும் அவரால் ஓரளவு கேட்க முடியும். பொறியியல் பட்டதாரியான இவர், தன் செவியில் ஒலித்த ஒலிகளை ஓவியமாக வரைந்துள்ளார். வினேஷ், பிராஸ்தெடிக் கலைஞர். மாறன் ஃபேஷன் புகைப்பட கலைஞர். அவர் ஓவியம் குறித்தும் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஹெலன் மற்றும் விபவ், முறையாக பயிற்சி பெறவில்லை என்றாலும் அழகான ஓவியங்களை படைத்துள்ளனர். விபவ் ரோபோடிக் துறை சார்ந்தவர். ஹெலன் பொறியியல் பட்டதாரி, அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் வரைவதில் திறமையானவர்.

கலைஞர்கள் பொறுத்தவரை அவர்கள் உருவாக்கும் கலையில் ஒரு தனிப்பட்ட எண்ணங்கள் பிரதிபலிப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு ரிஷி, நடந்தோ அல்லது சைக்கிளில் பயணித்து பல இடங்களுக்கு செல்வார். அங்கு பார்க்கும் மனிதர்கள், இயற்கை காட்சிகளை படம் பிடித்து அதனை இங்கு பிரதிபலித்து இருக்கார். என்னுடையது முழுக்க முழுக்க அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் போல இருக்கும். குறிப்பாக விமானத்தில் பயணிக்கும் போது கீழே தெரியும் காட்சியினை அப்ஸ்ட்ராக்ட் முறையில் வரைந்திருக்கிறேன். அதில் மெட்டல், வெங்கலம் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறேன். இதுபோல் பல சிந்தனைகளில் உள்ளவர்களை ஒன்றாக இணைத்து செயல்பட வேண்டும் என்ற விருப்பம் தான் இந்தக் கண்காட்சியின் அடிப்படை’’ என்றவர், இந்தக் கண்காட்சி இம்மாதம் ஏழாம் தேதி வரை நடக்க இருப்பதாக கூறினார்.

‘‘கலைஞர்களுக்கு தங்களின் படைப்புகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இசைக் கலைஞர் பாட்டு மூலம் வெளிப்படுத்துவார், சிலர் கவிதையாக சித்தரிப்பார்கள். எங்களைப் போன்ற கலைஞர்கள் ஓவியங்கள், சிற்பங்கள் மூலமாக வெளியிடுவோம். ஒரு புல்வெளியினை வரையும் போது, அந்த நேரத்தில் தோன்றும் சிந்தனைகளை அதில் புகுத்தும் போது அந்த ஓவியத்தின் கண்ணோட்டமே மாறுபடும். இந்தக் கலைதான் என்னுடைய துணை.

இதன் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனை பல கோணங்களில் மக்கள் முன் வெளிப்படுத்த இருக்கிறேன். நிறைய ஓவியங்கள் வரையவேண்டும். கேலரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற கண்காட்சி நிகழ்த்த வேண்டும். எங்களின் கலையினை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார் நிவேதா.

தொகுப்பு: ஷன்மதி