Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அன்று ஆடு மேய்த்தவர், இன்று ஆட்சிப் பொறுப்பில்!

நன்றி குங்குமம் தோழி

வெற்றி என்பது வசதிகளின் வரப்பிரசாதம் அல்ல..! விடாமுயற்சியின் விளைச்சல். அந்த உண்மையை தனது வாழ்க்கையால் நிரூபித்திருக்கிறார் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த IAS அதிகாரியான வான்மதி.எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த வான்மதிக்கு, வாழ்க்கை சிறுவயதிலேயே பொறுப் புகளை அறிமுகப்படுத்தியது. காலையில் பள்ளிக்குச் சென்று பாடம் படித்த அவர், மாலை நேரங்களில் ஆடு, மாடு மேய்த்து குடும்பத்துக்குத் துணையாக இருந்தார். புத்தகங்களும், பசுமை மேய்ச்சல் நிலங்களும் மாறி மாறி அவரது அன்றாட உலகமாக இருந்தன. ஆனால், அந்த எளிய வாழ்க்கை, அவரது கனவுகளை ஒருபோதும் சுருக்கிவிடவில்லை.

இவரது தந்தை ஓட்டுநராகப் பணியாற்றுபவர். வான்மதியின் ஆரம்பக் கல்வியும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் அரசுப் பள்ளியிலேயே நடந்தன.குடும்ப வழக்கப்படி பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததுடன் அவருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் திட்டமிட்டனர். ஆனால், வான்மதிக்கு அதில் நாட்டம் இல்லை. மேற்கொண்டு படிப்பை தொடர்வதில் பிடிவாதமாக இருந்தார். ‘கல்விதான் வாழ்க்கையை மாற்றும்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர், பட்டப்படிப்பை தொடர்ந்து முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

அதன் பிறகு இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்ற இலக்கை தேர்ந்தெடுத்து, UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாரானார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்ட உழைப்பு, விடாமுயற்சி, மன உறுதி ஆகியவை இறுதியில் வெற்றியாக மலர்ந்தன. சிவில் சர்வீஸ் தேர்வில் இவரது தரவரிசை எண் 152. மஹாராஷ்டிரா கேடர் இவருக்கு ஒதுக்கப்பட்டது. பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய வான்மதி, தற்போது வர்தா மாவட்டத்தின் கலெக்டராகப் பணியாற்றுகிறார்.

மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிர்வாக அதிகாரியாக பெயர் பெற்றிருக்கிறார். நிர்வாகம் என்பது வெறும் அலுவலகப் பணி மட்டும் அல்ல, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொறுப்பு என்பதைத் தனது செயல்பாடுகளால் உணர்த்தி வருகிறார்.வான்மதியின் வாழ்க்கைப் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கு, முக்கியமாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, ஒரு நம்பிக்கையின் விளக்காகத் திகழ்கிறது. அதிலும் இளம் பெண்களுக்குத் தாங்களும் முன்னேற முடியும் என்ற உந்துதலை அளித்திருக்கிறது. வசதிகள் குறைவாக இருந்தாலும், உயர்ந்த இலக் குகளை அடையக்கூடும் என்பதை நிரூபித்திருக்கிறது.

சூழ்நிலைகள் அல்ல... மன உறுதியே மனிதர்களின் வாழ்வு உயரத்தை நிர்ணயிக்கிறது என்பதையும் அவரது வெற்றி உரக்கச் சொல்கிறது. ஆடு மேய்த்த சிறுமியின் கைகளில் ஒரு காலத்தில் குச்சி இருந்தது. இன்று அதே கைகளில் ஒரு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பு இருக்கிறது. அந்த மாற்றத்தை உருவாக்கியது அதிர்ஷ்டம் அல்ல, கல்வியின் சக்தி, உழைப்பின் மேன்மை, தளராத தன்னம்பிக்கை!

இலக்கை நோக்கி அயராது பயணிக்கும் ஒவ்வொருவருக்கும், அவரது வாழ்க்கை ஒரு ஆழமான ஊக்க உரையாகவே என்றும் இருக்கும். உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுத விரும்பும் இளைய தலைமுறைக்கு தினசரி திட்டமிட்டுப் படிக்க வேண்டும். தோல்வியை கண்டு தளரக்கூடாது. அரசுப் பள்ளி மாணவர்களும் UPSC தேர்வுகளில் வெற்றி பெற முடியும். தொடர்ந்து உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என்று அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.

மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிறகு, ‘மஹாசம்பத்தி’ என்ற ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார். இது மகாராஷ்டிராவின் வர்தா மாவட்ட நிர்வாகத்தால் அறிமு கப்படுத்தப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த சொத்து மற்றும் வருவாய் நிர்வாக முறை (Integrated Asset and Revenue Governance System) ஆகும்.

இதன் முக்கிய நோக்கம் அரசு சொத்துகள், நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகள் தொடர்பான தகவல்களை முழுமையான டிஜிட் டல் பதிவேடு ஒன்றில் ஒரே தளத்தில் கொண்டு வந்து, அவற்றை வெளிப்படையாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதாகும். இதன் மூலம் அரசு நில ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து பாதுகாப்பது எளிது. வருவாய் நிர்வாகத்தை திறம்படச் செயல்படுத்தவும் முடியும்.

தொகுப்பு: லதானந்த்