Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாதனைப் பட்டியலில் இடம் பெறாதது ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே

நன்றி குங்குமம் தோழி

சென்ற வாரம் நடைபெற்ற தேர்வுப் போட்டிகளில் நான்காவது இடத்தைப் பிடித்ததால், ஜப்பானில் நடைபெறவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் வில் வீராங்கனை தீபிகா குமாரி இடம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.இந்தப் பின்னடைவு இருந்தாலும், மூத்த வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, வரவிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். சமீபத்தில் ஷாங்காயில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பையின் இரண்டாம் கட்டப் போட்டியில், சீனப் பெண்கள் அணியை ஷூட்-ஆஃப் சுற்றில் வீழ்த்தி தீபிகா குமாரி அடங்கிய அணி தங்கப்பதக்கம் வென்றது. 2021-க்குப் பிறகு முதல் முறையாக, உலகக் கோப்பையில் இந்திய மகளிர் ரிகர்வ் அணி தங்கம் வென்றுள்ளது.

யார் இந்த தீபிகா குமாரி?

தீபிகா, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பெரும்பாலான காடுகள் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது. காடு என்றாலே வேட்டை இல்லாமல் இருக்காது. அதனால் தான் தீபிகாவிற்கு வில்லின் மேல் தனிப்பட்ட ஈர்ப்பு இருந்துள்ளது.

‘‘சின்ன வயதில் கம்பை வளைத்து வில்லாக்கி குச்சியை அம்பாக்கி எய்து விளையாடுவேன். குறி என் வீட்டின் அருகிலிருக்கும் மாமரத்தில் காய்க்கும் மாங்காய்தான். நான் எய்த அம்பு தைத்து விழும் மாம்பழம் மண்ணில் விழு முன் ஓடிச் சென்று கையால் பிடித்து விடுவேன். அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். ராஞ்சியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ராட்டுதான் என்னுடைய ஊர். 2005 என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. எனது அம்பு எய்யும் திறமை மீது எனக்கு அபார நம்பிக்கை. இருந்தது. அதனால் நான் அப்பாவை வில் வில்வித்தைக்கான பயிற்சி நிலையத்தில் சேர்த்து விட சொல்லி கேட்டேன். ஆட்டோ ஓட்டுவதில் அப்பாவுக்கு தினமும் இருநூறு கிடைப்பதே பெரிய விஷயம். அம்மா தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார். எங்க வீட்டின் மாத வருமானமே பதினைந்து ஆயிரம்தான். ஓட்டு வீடுதான். ஓடு உடைந்துவிட்டால் அதை உடனடியாக கூட மாற்றி அமைக்க முடியாது. அந்தளவுக்கு பொருளாதார நெருக்கடி.

என் தொந்தரவை தாங்க முடியாமல் தான் அப்பா என்னை அன்றைய ஜார்கண்ட் முதல்வர் அர்ஜுன் முண்டா அவர்களின் மனைவி மீரா நடத்தி வந்த அம்பு எய்யும் பயிற்சி பள்ளியில் சேர்க்க அழைத்து சென்றார். அங்கு நான் மீரா அவர்களிடம், ‘‘அம்மா என்னை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு மூன்று மாத அவகாசம் தாருங்கள். நான் உங்களை என் திறமையால் திருப்திப்படுத்துவேன். அப்படி செய்யவில்லை என்றால் என்னை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். எனது மன உறுதியை கண்டு அவரும் என்னை பள்ளியில் சேர்த்துக் கொண்டார். நானும் சொன்னது போலவே என் திறமையினை நிரூபித்தேன். அடுத்தாண்டு, ஜாம்ஷெட்பூரில் டாடா நிறுவனம் நடத்தும் பயிற்சி பள்ளியில் சேர எனக்கு அனுமதி கிடைத்தது. இங்கு சர்வதேச தரத்தில் உபகரணங்கள் இருந்தன. அவைகளின் அமைப்பும், தொழில்நுட்பமும் என்னை அதிசயிக்க வைத்தன.

என்னுடைய திறமைக்கு மாதம் ஐநூறு ரூபாய் உதவித் தொகையும் கிடைத்தது. அதனால் வீட்டில் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன். கடுமையான பயிற்சியால் வெற்றி என்னை நோக்கி வர ஆரம்பித்தன. 2009ல் இளைஞர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் கிடைத்தது. தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெரும் வாய்ப்பும் வந்தது. அதில் பதக்கங்கள் பெற்றேன். அதன் பிறகுதான் என் கிராமத்திற்கு சென்றேன். காரணம், சாதித்த பிறகுதான் கிராமத்திற்குப் போக வேண்டும் என்ற வைராக்கியத்துடன்தான் பயிற்சி மேற்கொண்டேன். அந்தப் பயிற்சியால்தான் என்னுடைய 15 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்தது. அதைத் தொடர்ந்து 2011-ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தையும் வென்றேன். 2010-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் குழுவிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்றேன். 2011ல் முதல் உலக வில்வித்தைக் குழு போட்டியில் நான் இணைந்திருந்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

உலகக் கோப்பைகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்,

ஆசிய வில்வித்தைப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய

விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் குழு மற்றும்

தனிநபர் பிரிவுகளில் இதுவரை 34 பதக்கங்களை வென்றுள்ளேன்!

உலகக் கோப்பைகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆசிய வில்வித்தைப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் குழு மற்றும் தனிநபர் பிரிவுகளில் இதுவரை 34 பதக்கங்களை வென்றுள் ளேன். ‘ரிகர்வ்’ வில் வித்தையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக நான்கு முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற பெருமை எனக்கு உண்டு. இரண்டு முறை உலக வில்வித்தைப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றேன். உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் என்னை வந்து சேர்ந்தது. தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றேன். 2020ல் சக வில்வித்தை வீரரான அதானு தாஸை மணந்தேன். 2022ல் மகள் வேதிகா பிறந்தாள். இந்த வெற்றிகள் என்னுடைய குடும்பப் பொருளாதாரத்தை தீர்த்தது. வில்வித்தை எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. நல்ல வாழ்க்கை, மக்கள் மத்தியில் மதிப்பெல்லாம் கொடுத்தது. இருந்தாலும் எனது சாதனைப் பட்டியலில் இன்னும் இடம் பெறாதது ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே. கண்டிப்பாக ஒரு பதக்கமாவது பெறவேண்டும் என்பதில் தீவிரமாக இந்திய வில்வித்தை வீராங்கனைகள் அனைவரும் முழு முயற்சி எடுத்து வருகிறோம்’’ என்றார் தீபிகா குமாரி.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி