Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்தியா இப்போது என்னுடைய வீடு!

நன்றி குங்குமம் தோழி

சாண்ட்ரா லாவீ கோஜ்கோவிச்

அதிக வருமானம் தரும் பணியையும், ஆடம்பர வாழ்க்கையையும் தூக்கி எறிந்துவிட்டு, இந்தியாவில் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, சுவிஸ் நாட்டுப் பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார். சுவிட்சர்லாந்து, துபாய் கார்ப்பரேட் வாழ்க்கையை துறந்து, இந்தியாவை புகுந்த வீடாக்கிக் கொண்டுள்ள சாண்ட்ரா லாவீ கோஜ்கோவிச் (Sandra Lavie Gojkovic) தன் அனுபவங்களை பகிர்கிறார்.

‘‘பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுவிட்சர்லாந்து மற்றும் துபாயில் பார்த்து வந்த கார்ப்பரேட் பணியையும் ஆடம்பர வாழ்க்கையையும் உதறிவிட்டு, இந்தியாவில் சேவை செய்வதற்காக வந்தேன்.

அந்த முடிவு என்னைச் சுற்றியிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘யாராவது நல்ல வேலையை... வருமானத்தை... நிம்மதியான சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு இந்தியாவில் சமூகப் பணி செய்யப் போய் சிரமங்களை விலைக்கு வாங்குவார்களா’ என்று எச்சரித்தார்கள். வெறும் இரண்டு சட்டைகள் மற்றும் இரண்டு ஜோடி கால்சட்டைகளுடன் கிளம்பினேன். இந்தியா எனக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியை தந்தது என்னவோ உண்மைதான். ஆனால், அதே சமயம், நான் தேடிக்கொண்டிருந்த எளிமை, வாழ்க்கையின் நோக்கம், அர்த்தம் மற்றும் புதிய கண்ணோட்டம் ஆகியவற்றை இந்தியா எனக்கு வழங்கியது.

என்னிடம் மிகக் குறைந்த பணம், பொருட்களே இருந்தன. ஆனாலும், நான் முன்பைவிட மகிழ்ச்சியாக இருந்தேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து பணியாற்ற துவங்கினேன். அதன் முன்னோடியாக சுவிட்சர்லாந்தில் எனது இந்தியத் திட்டங்களுக்கான நிதியை திரட்டும் பணிகளை மேற்கொள்கிறேன். அதன் மூலம் இந்தியாவில் கல்வி, பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.

ஆரம்பத்தில், நான் ஒரு வெளிநாட்டவர் என்பதால் இந்திய மக்கள் என்னை நம்பவில்லை. பலர் என்னை கிறிஸ்தவ மத போதகர் என்று நினைத்தார்கள். நான் சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவள். படிப்பு முடித்த பிறகு கார்ப்பரேட் துறைக்குள் நுழைந்தேன். பணி நிமித்தமாக பல இடங்களுக்கு பயணித்தேன். கை நிறைய சம்பளம். ஆடம்பர வாழ்க்கை என அனுபவித்த போதிலும், புற உலகில் ஆடம்பர வாழ்க்கைக்கும் வறுமைக்கும் இடையே இருந்த பெரும் இடைவெளியை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

காலப்போக்கில், நான் கண்ட சமத்துவமின்மை குறித்துக் கேள்விகள் எனக்குள்ளே எழுந்தது. பலர் மிகக் குறைந்த வசதிகளுடன் இருக்கையில், எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகமாகக் கிடைக்கிறது? இந்தக் கேள்வி என் வாழ்க்கையின் திசையையே மாற்றிவிட்டது.ஆரம்பத்தில், ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு நிதி ரீதியாக உதவி மட்டுமே அளிக்க நினைத்தேன். ஆனால், இங்குள்ள சூழலை உற்று நோக்கிய போது, ​​பல திட்டங்கள் மோசமான செயல்பாட்டு முறைகளால் முடங்கி கிடந்தது. அதன் காரணமாக வெளிப்படைத்தன்மை கொண்ட, மக்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.

விளைவு தொடக்கக் கல்வி, கல்வியில் வழிகாட்டுதல் திட்டங்கள், பெண்கள் - குழந்தைகளின் மேம்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், மனிதக் கடத்தல் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பணியாற்றுகிறேன். முதல் கட்டமாக மேற்குவங்காளத்தின் சாகர் தீவில் (Sagar Island) எனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். அந்தத் தீவில் உள்ள மூன்று கிராம மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தேன்.

அந்த உரையாடல்கள்தான் நான் தொடங்கிய திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தன. 150 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் ஒரு இலவசத் தொடக்கப் பள்ளியை துவங்க காரணமாக அமைந்தது. மேலும், 20 பெண்களுக்குத் தையல் பயிற்சியை அளிப்பதன் மூலம், அவர்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை அடைவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் எனது அமைப்பு உதவுகிறது. என் வாழ்நாள் முழுவதும் பின்தங்கிய சமூகங்களுக்கு நான் தொடர்ந்து உதவுவேன். எனது திட்டங்கள், இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது.

மற்றவர்களுக்குச் சேவை செய்வது, வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது. வசதி இல்லாதவர்களுக்கு உதவுவது என் வாழ்வின் லட்சியம். நான் உயிருடன் இருக்கும் வரை இப்பணியை தொடர்ந்து செய்வேன். இந்தியாவில் பணியாற்றும் போதுதான் நான் மிக முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். அது ‘உண்மையான மாற்றம் கிராமங்களிலிருந்தே தொடங்குகிறது’ என்பதுதான்!”

தொகுப்பு: கண்ணம்மா பாரதி