நன்றி குங்குமம் தோழி
மின்சார பணி என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது எனும் எண்ணத்தை மாற்றி, பாலின தடையை உடைத்து மின் கம்பங்களில் ஏறி பாதுகாப்பு உபகரணங்களுடன் தைரியமாக பணியாற்றுகிறார் பெண் மின் ஊழியரான (Wire women) ஜோதி அஹெர். மஹாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டம், தமாங்கோன் கிராமத்தைச் சேர்ந்த இவர், மின் துறையில் அரசு பணிப்பெற்றதுடன் மின் கம்பங்களில் ஏறி பழுது பார்க்கும் ‘லைன்வுமனாக’ களமிறங்கி தன்
கிராமத்தையே பெருமைப்படுத்தியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வேலையை முழு ஆர்வத்துடன் செய்து வரும் ஜோதி, மின்கம்பங்களில் ஏறுவது, மின் இணைப்புகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்வது, ஃபியூஸ் உள்ளிட்ட பல மின்சார கோளாறுகளை சரி செய்வது போன்ற களப்பணிகளை செய்து வருகிறார். ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற தொழிலில், ஒரு பெண் துணிச்சலாய் மின்கம்பங்களில் ஏறும் இந்தக் காட்சிகளை பார்த்தால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
‘லைன்மேன்’ என்ற வார்த்தையே இன்றளவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறையில், ஜோதி ஒரு ‘லைன்வுமனாக’ மிளிர்கிறார். ஒரு மின்வாரிய ஊழியர் என்பதையும் தாண்டி, பெண்களாலும் இந்த வேலைகளை செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்.மின்கம்பத்தில் ஏறி வேலை செய்வது சாதாரணமான விஷயமல்ல. ஒரு எதிர்பாராத சிறிய தவறுதலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். இப்பணியில் தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி, சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் திறன், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுதல், மன உறுதி போன்றவையும் அவசியம். ஒரு பெண்ணாக இருப்பதற்காக தனது பணியின் தரத்தில் எந்தச் சமரசமும் செய்யாமல் ஜோதி தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார்.
“மின்சாரம் தடைப்பட்டால் கிராம மக்கள் என்னை அழைப்பார்கள். நிலையான வேலை நேரம் என்பதில் இதில் கிடையாது. 24 மணி நேர வேலை. நள்ளிரவாக இருந்தாலும், ஏதேனும் கோளாறு ஏற்பட்டதாக அழைப்பு வந்தால் நான் உடனே அங்கு செல்ல வேண்டும். பணியின் போது பாதுகாப்பு காலணிகள், உறுதியான கையுறைகளை அணிந்து கொண்டுதான் மின்கம்பங்களில் ஏறுகிறேன்.
உயர் மின்னழுத்த மின்மாற்றிகள், சிக்கலான மின் கம்பி இணைப்புகளையும் மிகவும் கவனமாகவே கையாள வேண்டும்” என்று குறிப்பிடும் ஜோதி, “என் கிராம மக்களின் மின்சார பிரச்னைகள் சரிசெய்யப்படும்போது, அது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது” என்றும் பெருமிதப்படுகிறார். “இது முற்றிலும் ஆண்களுக்கான வேலை என்றேதான் மக்கள் நெடுங்காலமாக நம்பி வந்தார்கள். ஆனால், சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், எந்தப் பெண்ணாலும் இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும்” என்கிறார் ஜோதி அஹெர். பாலினம் ஒருவரின் திறமைக்கு எல்லை வகுக்கக்கூடாது. பெண்களுக்குத் தேவையான பயிற்சியும் வாய்ப்பும் கிடைத்தால், சவாலான எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு ஜோதி சான்றாக விளங்குகிறார்.
தொகுப்பு: ஆர்.ஆர்


