Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கால்கள் இல்லை... கனவுகளுக்கு இல்லை எல்லை!

நன்றி குங்குமம் தோழி

சூழ்நிலைகள் ஒருபோதும் ஒருவரின் திறமையை முடிவு செய்வதில்லை. ஆம்! உலகம் எதை குறையாய் பார்த்ததோ, அதையே தன் பலமாக மாற்றிக் காட்டியவர் கன்யா செஸ்ஸர். 2025 கின்னஸ் புக்கில் உலக சாதனை ஒன்று பதிவானது. அதாவது, ஒரு ஸ்கேட்போர்ட் மீது ரெண்டு கைகளை மட்டும் ஊன்றி, தலைகீழாய் நின்று, 19.65 நொடிகள் அப்படியே பேலன்ஸ் செய்து முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய அசுர சாதனையே இது. இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த ரெக்கார்ட் பிரேக் செய்த வீராங்கனைக்கு, பிறப்பில் இருந்தே இரண்டு கால்களும் இல்லை என்பதே.

ஆம். அது 1992ம் வருடம். தாய்லாந்தில், பாக்சாங்ல என்கிற இடத்திலுள்ள ஒரு புத்தக் கோயில் பள்ளி அருகே, கால்கள் இல்லாமல் கைவிடப்பட்ட குழந்தையாக கன்யா செஸ்ஸர் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் மருத்துவமனை செவிலியர்களும், ஊழியர்களுமே கன்யா செஸ்ஸரை கவனித்து வந்துள்ளார்கள்.கன்யாவுக்கு 5 வயது இருக்கும்போது, ஜேன் மற்றும் டேவ் செஸ்ஸர் தம்பதியினர் அவரைத் தத்தெடுத்து அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்ட் ஒரேகானுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு கன்யா செஸ்ஸரின் வாழ்க்கை தலைகீழாய் மாறுகிறது.அமெரிக்காவில் அவர் சந்தித்த சவால்கள் அதிகம் என்றே சொல்லலாம். முதலில் அவருக்கு ஏற்பட்டது மொழி பிரச்னை. ஏனெனில், கன்யாவுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது.

ரெண்டாவது முக்கியமானது, அவருடைய மெடிக்கல் கண்டிஷன். அதாவது, கன்யாவின் விரல்கள் ஜவ்வு பிணைப்பால் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இருந்தது.கால்கள் இல்லாத போதும் கைகள்தான் கன்யாவுக்கு எல்லாமே. கைகளுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலை கன்யாவுக்கு. இத்தனை தடைகள், உடல் ரீதியான வலிகள் இருந்தும், தன் சுதந்திரத்தை மட்டும் கன்யா செஸ்ஸர் துளியும் விட்டுக் கொடுக்கவே இல்லை. எந்தவொரு இடத்திலும், தன்னை ஒரு விக்டிம்மாகக் காட்டாமல், எல்லோரையும் ஈர்க்கிற மாதிரியாக, தான் படித்த பள்ளியின் டாம்பாயாகவே கன்யா வலம் வந்தவர்.

ஹைஸ்கூல் படிக்கும்போது, ஸ்கூல் பீப்பிள் லீடராய், மிகவும் பிரபலமாக வலம் வந்தார். ‘‘தன் வாழ்க்கையை ஆபத்தான முறையில் வாழ்வதிலும், அதன் சிலிர்ப்பை அனுபவிப்பதிலும் தனக்கு

எப்போதும் ஒருவித ஈர்ப்பு இருந்தது” எனவும் அவர் குறிப்பிடுகிறார். முடியாது என்கிற வார்த்தையே அவர் அகராதியில் இல்லை. கன்யாவுக்குள் இருந்த சாகச மனப்பான்மையும், திரில்லை தேடுகிற குணமும், அவரை விளையாட்டுத் துறைக்குள் இறங்க வைத்தது.

கன்யாவுக்கு நெஞ்சு மற்றும் தோள்பட்டைகளில் பலம் அதிகம் என்பதால், உடல் பலம் தேவைப்படுகிற விளையாட்டுகளை தேர்ந்தெடுக்க தொடங்குகிறார். அதாவது, வீல்சேர் ரேஸிங், நீச்சல், வீல்சேர் ரக்ஃபி, மோனோ ஸ்கீயிங்ஸ், ஸ்கேட்போர்ட் என எதையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஸ்கேட்போர்டில் ஆர்வம் வந்ததுமே, நண்பர் ஒருவரின் ஸ்கேட்போர்ட் மூலமாக அதனை முதல் முறையாக முயற்சிக்கிறார்.

முதலில், வீட்டின் அருகிலுள்ள குன்று ஒன்றின் மேலிருந்து ஸ்கேட்போர்ட் மூலமாக சருக்கிக்கொண்டே கீழே போனதை தன் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த உணர்வென குறிப்பிடுகிறார். அதாவது, அலாவுதீனுக்கு கிடைத்த அற்புத விளக்கு மாதிரி ஸ்கேட்போர்ட் கன்யா செஸ்ஸருக்கு வேகத்தையும், அதீத சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது. மற்ற எல்லோரையும் விட, கன்யாவால் மிக வேகமாய் நகர முடிந்தது. அதனாலே “No Legs, No Limits” அதாவது, ‘கால்கள் இல்லை; அதனால் எனக்கு இல்லை எல்லை’ என்கிற அவரது தாரக மந்திரம் ரொம்பவே புகழடைந்தது.

ஸ்கேட்போர்ட் கொடுத்த தன்னம்பிக்கை மாடலிங் துறையிலும், நடிப்புத் துறையிலும் கூடுதலாய் அவரை சாதிக்க வைத்தது என்றே சொல்லலாம். Adidas, Sephora, Abercrombie & Fitch மாதிரி பெரிய பெரிய பிராண்டுகளுக்கு மாடலிங் செய்ய ஆரம்பிக்கிறார் கன்யா. கன்யா செஸ்ஸரின் குறைபாடே அவருக்கு மிகப்பெரிய பலமாக, யூனிக் ஸ்கில்லாக மாற, ப்யூட்டி இண்டஸ்ட்ரிக்குள் இருந்த ஸ்டீரியோ டைப்பை உடைத்து, நியூயார்க் ஃபேஷன் வீக்கிலும் பங்கேற்கிறார்.

கன்யாவின் அதீத வேகம் மற்றும் அப்பர்பாடி மூவ்மென்ட் சாதாரண மனிதர்களைவிட, வேகமாய் இருந்ததை, ஹாலிவுட் உலகம் மிகச் சரியாய் பயன்படுத்தியது. ஹாலிவுட்டிலும் நுழைந்தவர், ஆக்டிங் மற்றும் ஸ்டன்ட் என களமிறங்கி, “ஹாவாய் 50” தொடரில், “ரோஸி வெலேரா” பாத்திரத்திலும் நடித்தார். “பியர் த வாக்கிங் டெட்” தொடரில் ஸ்டன்ட் கலைஞராகவும் பணியாற்றினார். கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கன்யா செஸ்ஸரின் உலக சாதனை சாதாரண விஷயமே இல்லை. சக்கரம் வைத்த ஸ்கேட்போர்ட் ஒன்றின் மீது கைகளை ஊன்றி, தலைகீழாய் 19.65 வினாடிகள் தொடர்ந்து நின்று, ஸ்கேட்போர்டை பேலன்ஸ் செய்து, பெண்கள் பிரிவில் இந்த ரெக்கார்டை பிரேக் செய்து, 2025ம் வருட கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

சூழ்நிலைகள் ஒருபோதும் நமது திறமையினை முடிவு செய்வதில்லை என்பதற்கு இணையாக கன்யா செஸ்ஸர் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அசுரத்தனமான தனது இயல்புக்கு, தன்னுடைய மரபணுக்களும், ரத்தத்தில் ஊறியுள்ள தன் இயல்புமே காரணம் என நம்புகிற கன்யா செஸ்ஸர், வரவிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன் எனவும் எமோஷனலாய் குறிப்பிடுகிறார்.நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலுமே நமக்கான ஸ்கேட்போர்ட் எப்போதும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றது. அதை எடுத்து சறுக்க வேண்டியது

நம் கைகளில்தான் இருக்கிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்