Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேவதை பிறந்தால் பிரசவக் கட்டணம் இல்லை!

நன்றி குங்குமம் தோழி

பூனாவில் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரசவத்திற்காக தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார். மனைவிக்கு சுகப்பிரசவம் செய்ய முடியாத காரணத்தால் சிசேரியன் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. கணவன் மருத்துவ செலவு குறித்து வினவ, அந்த டாக்டர் பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் வாங்குவதில்லை என்று கூறிவிட்டார். அந்த டாக்டர் பெயர் கணேஷ் ரக். பூனாவில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் சுமார் 2000 பெண் குழந்தைகள் இவரது மருத்துவமனையில் பிறந்துள்ளன. அந்தப் பிரசவங்களுக்கு இவர் ஒரு ரூபாய் கூட கட்டணமாக பெறவில்லை. அது மட்டுமல்ல... பெண் குழந்தை பிறந்தால் மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு அனைவருக்கும் மருத்துவ நிர்வாகம் இனிப்பு வழங்கி கொண்டாடும்.

‘‘அப்பா ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். அம்மாவும் சிறு வேலைகளுக்கு போவார். குடிசை வீடு. வறுமை நிலையை போக்க படிப்பு ஒன்றுதான் வழி என்று எனக்கு புரிந்தது. அதனால் படித்து டாக்டரானேன். என்னதான் நாம் மாடர்னாக மாறினாலும், இன்றும் பல இடங்களில் பெண் குழந்தைகளை சுமையாகத்தான் பார்க்கிறார்கள். மேலும், இந்தியாவில் பெண் சிசுக் கொலைகளும் நடந்துதான் வருகிறது. நான் பெண் குழந்தையை சீராட்ட என் அம்மாதான் காரணம்.

அவர் என்னிடம், ‘நீ மருத்துவராகி பெண் குழந்தைகளை காப்பாற்று’ என்று கூறினார். அதைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். எனக்கு அக்கா, தங்கை கிடையாது. இரண்டு தம்பிகள்தான். எனக்கு வறுமை புதிதல்ல. அளவான சம்பாத்தியத்துடன் என்னால் வாழத் தெரியும். இன்று என்னைப் பார்த்து பல மருத்துவர்கள் பெண் குழந்தை பிரசவித்தால் அதற்கான கட்டணம் வாங்குவதில்லை. என்னுடைய இந்த முயற்சிக்கு என் மனைவியும் மகளும் துணையாக இருக்கிறார்கள். வீட்டில் ‘லட்சுமி’ பிறந்தால், அனைத்தும் முழுகிவிட்டது என்று நினைக்காமல், உண்மையாகவே லட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள்னு கொண்டாடுங்கள்’’ என்கிறார் டாக்டர் கணேஷ் ரக்.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி