நன்றி குங்குமம் தோழி
பட்டதாரி ரோபோக்கள்
சீனாவின் ஹங்சோ நகரில் இயங்கி வரும் பிரத்யேக ரோபோ பள்ளியில், சுமார் இரண்டு மாதங்கள் வழங்கப்பட்ட கடினமான தீவிரப் பயிற்சிக்குப் பிறகு, நான்கு அதிநவீன மனித உருவ ரோபோக்கள் வெற்றிகரமாக தங்கள் படிப்பை முடித்து அதிகாரப்பூர்வமாகப் பட்டம் பெற்றுள்ளன. வெறும் எந்திரங்களாக நின்று வேலை செய்யாமல், வழிகாட்டியாகவும், ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் உதவியாளராகவும், அதுமட்டுமின்றி விரல்களை நளினமாக அசைத்து பியானோ இசைக்கும் கலைத்திறனுடனும் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. படிப்பை முடித்துவிட்ட இந்த ‘பட்டதாரி’ ரோபோக்கள், விரைவில் சீனா மற்றும் தென்கொரியாவின் பல்வேறு முக்கியத் துறைகளில் நேரடிப் பணியமர்த்தப்பட உள்ளன.
கிராமத்துப் புயல்
விளையாட்டு மைதானங்களில் விலையுயர்ந்த காலணிகளும், நவீன ஆடைகளும் வெற்றியை தீர்மானிப்பதில்லை. அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், கடின உழைப்புமே ஒருவரை வெற்றியாளராக்கும். இதற்கு சமீபத்திய உதாரணமாக மிளிர்கிறார், கவிதா குமாரி. ஜார்க்கண்டைச் சேர்ந்த எளிய விவசாயக் குடும்பத்துப் பெண்ணான இவர், ஊர்க்காவல் பணிக்கான தகுதி ஓட்டத்தில் பங்கேற்றார்.
காட்டன் சேலையை இறுகக் கட்டிக்கொண்டு, காலணிகள் இன்றி வெறும் கால்களோடு 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயத் தொடக்கக் கோட்டில் நின்றார். விசில் ஒலித்ததும் தரை வெப்பத்தையும், தூசியையும் பொருட்படுத்தாமல் காற்றெனப் பறந்த அவர், பத்து நிமிடங்களில் கடக்க வேண்டிய பந்தய தூரத்தை, வெறும் ஆறு நிமிடங்களில் கடந்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.
எல் நினோ எச்சரிக்கை
உலகளாவிய காலநிலைக் குழப்பங்களை உருவாக்கும் ‘எல் நினோ’ நிகழ்வு, மீண்டும் இந்திய விவசாயத்துக்குக் கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. பருவமழையின் சீரற்ற போக்கைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு 2026 - 27 ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கைக் குறைத்துள்ளது. மேட்டூர் அணை நீர் இருப்புப் பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி ஏற்கெனவே அழுத்தத்தைச் சந்தித்துள்ள நிலையில், இந்த இலக்கு குறைப்பு நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்குமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 9 சதவீதம் பேருக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது என்று உச்சநீதிமன்றம் நியமித்த தேசியப் பணிக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பிரச்னைகளை ஆய்வு
செய்யவும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானில் பதற்றம்
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் முடங்கிக் கிடக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, அவரது ‘தெரீக்-இ-இன்சாஃப்’ கட்சி நடத்திய பிரமாண்டப் பேரணி ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்திருக்கிறது. இது பாகிஸ்தானில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
தொகுப்பு : த.சக்திவேல்


