நன்றி குங்குமம் தோழி
எச்சரிக்கை
இமயமலைப் பனிப்பாறைகள் 65 சதவீத வேகத்தில் உருகி வருவதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இமயமலையின் நீர்வளம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் பங்கிற்கு நேரடி ஆதாரமாக உள்ளது. ஆர்க்டிக் போலன்றி மக்கள் நெருக்கம் மிகுந்த மூன்றாவது துருவமான இமயமலையை பாதுகாப்பது இன்றியமையாதது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தெற்காசிய நாடுகள் ஒருங்கிணைந்து தகவல் பகிர்வு, கூட்டு முதலீடு மற்றும் எல்லை தாண்டிய கண்காணிப்பை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். இல்லையேல் இமயமலை உருகுவதையும், அதனால் இந்தியாவில் ஏற்படும் பொருளாதாரம் மற்றும் உயிர் சேதங்களையும் தவிர்க்க முடியாது என்றும் எச்சரிக்கின்றனர்.
ஆளுக்கு 5000 டாலர்!
நவம்பர் மாத தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே, அமெரிக்க மக்கள் பகல் கனவு காணத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், கருவூல அதிகாரிகளோ, ‘‘டாலர் அடிக்க பேப்பரும் இல்லை, இங்க் வாங்கவும் காசு இல்லை’’ என மூலையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் அவர் பணத்தை அள்ளிவிட்டால், பணவீக்கம் விண்ணைத்தொட்டு, கடைசியில் தெருவோரக் கடையில் ஒரு பர்கர் வாங்கவே சூட்கேஸில் 5000 டாலரை அள்ளிக்கொண்டு போகவேண்டிய நிலைதான் வரும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
AI வைரஸ்
ஏஐ தனியாக ஒரு புதிய வைரஸை வடிவமைத்துவிட்டது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, மக்களிடையே ஒரு புதிய பயத்தை உருவாக்கியுள்ளது. கொரோனா அல்லது எபோலா போன்ற மனிதர்களை தாக்கும் கொடிய கொள்ளைநோய் வைரஸ்களை ஏஐ உருவாக்கவில்லை. விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின்படி பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கி அழிக்கும் ‘பாக்டீரியோபேஜ்’ போன்ற நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் மரபணு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, மனித உடலுக்குத் தீங்கற்ற, முற்றிலும் புதிய ‘செயற்கை வைரஸ்களை’ செயற்கை நுண்ணறிவு கணினிகள் வடிவமைத்துள்ளன.
இசைஞானிக்கு கௌரவம்!
இசைஞானி இளையராஜாவின் 50 வருட இசைப் பயணம், இன்று கண்டங்கள் கடந்து ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தையே சிலிர்க்க வைத்துள்ளது. ஆம்; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூடியிருந்த உலகத் தலைவர்களின் கரவொலிக்கு நடுவே, இசைஞானியின் திருவுருவம் தாங்கிய சிறப்புத் தபால் தலை கம்பீரமாக வெளியானது. ஆஸ்திரேலிய அமைச்சர் அதை பெருமிதத்தோடு வெளியிட, நமது இசைஞானி புன்னகையோடு அதைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டார்.
மீண்டும் மோதல்
ஈரான் விமானங்கள் வெளிநாட்டு விமான நிலையங்களில் தரையிறங்கும்போது, அவற்றுக்கு விமான எரிபொருள் வழங்குதல், தரையிறங்கும் மற்றும் தரைச் சேவைகளை வழங்குதல், பயணச்சீட்டுகளை விற்பனை செய்தல் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்தால், அவை அமெரிக்க டாலர் நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்படக்கூடும் என அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து அண்டை நாடுகள் ஈரான் விமானங்களின் மீது தடை விதித்தால், அவர்களின் விமான நிலையங்களை தகர்ப்போம் என்று ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான மோசன் ரேசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொகுப்பு: த.சக்திவேல்


