Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

அதிக சம்பளம் வாங்கும் பிரதமர்

உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் நாட்டின் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்திய ஊதிய உயர்வின் மூலம், அவரது ஆண்டு வருமானம் சுமார் 64 சதவீதம் உயர்ந்து, 27 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டு ஊதியம் படிகளுடன் சேர்த்து சுமார் ரூ.33.60 லட்சம் மட்டுமே.

ஓவியங்கள் கொள்ளை

தெற்கு பிரான்சில் உள்ள புகழ்பெற்ற ரென்வார் அருங்காட்சியகத்தில், சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது. பிரபல இம்ப்ரெஷனிச ஓவியர் ரென்வார் வாழ்ந்து மறைந்த இந்த வரலாற்று இல்லத்தின் வேலியையும், ஜன்னல் சட்டங்களையும் நவீன மின்சாரக் கருவிகளால் அறுத்து, கமாண்டோ உடையும் ஹெல்மெட்டும் அணிந்த இரு மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த தலா 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஓவியங்களை அவர்கள் அவசரமாகக் களவாடினர். எச்சரிக்கை அலாரம் ஒலித்த அடுத்த ஐந்தே நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திருடர்கள், இரண்டு ஓவியங்களை அருங்காட்சியகத் தோட்டத்திலேயே தவறவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆனாலும், இரண்டு ஓவியங்களை அவர்கள் திருடிக் கொண்டுபோய்விட்டனர். அதன் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய்.

மாண்புமிகு ஆசிரியை!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த, 68 வயது அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியை, திரிப்தி பாக்சி. தனது 39 ஆண்டுகால நீண்ட பணி வாழ்வில் எடுத்த விடுமுறை வெறும் 11 நாட்கள் மட்டுமே. இதைவிடப் பேரதிசயம் என்னவென்றால், கடந்த 2018ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே மீண்டும் பள்ளி வகுப்பறைக்குச் சென்றதுதான். மாணவர்களின் எதிர்காலமே தனது மூச்சு என வாழும் இவர், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தினமும் காலை 10:30 மணிக்கெல்லாம் தவறாமல் பள்ளிக்கு வந்துவிடுகிறார். எந்தவித ஊதியத்தையும் எதிர்பாராமல், இன்முகத்தோடு குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்பித்து வருகிறார்.

புற்று நோய்க்குத் தீர்வு

மனிதர்கள் தங்களின் வாழ்நாளில் கண்டுபிடிக்க முடியாததை செயற்கை நுண்ணறிவு இன்னும் சில வருடங்களில் செய்து காட்டப் போகிறது என்கின்றனர் நிபுணர்கள். சிக்கலான டிஎன்ஏ மாற்றங்களை கம்ப்யூட்டர் மாதிரிகள் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எளிதில் பகுப்பாய்வு செய்துவிடும். இதனால் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்கின்றனர்.

நதியை சுத்தம் செய்யும் இளைஞருக்கு நெதர்லாந்தில் வேலை !

ஆற்றின் கரையில் நின்று சாக்கடைக் கழிவுகளை அகற்றும்போது, தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று, இந்திய இளைஞர் பிட்டு தபாஹி நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். எந்தவித நவீன உபகரணங்களும் இன்றி, தன் சொந்த முயற்சியால் ஒரு மாசடைந்த ஆற்றைத் தூய்மைப்படுத்திய அவரது காணொளி இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ நெதர்லாந்து தொழிலதிபர் போயன் ஸ்லாட்டின் கண்களில் பட்டது. பிட்டுவின் உழைப்பையும் நோக்கத்தையும் வியந்து பாராட்டிய அவர், நெதர்லாந்திற்கு வந்து தன் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அருமையான வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.

தொகுப்பு: த.சக்திவேல்