Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

டாப் 10 நகரங்கள்

சமீபத்தில் 2026ம் ஆண்டின் உலகிலேயே கவர்ச்சியான டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அந்த நகரங்களுக்குச் சென்ற சுற்றுலா பயணிகளின் அனுபவங்கள், நகரத்தின் சுகாதாரம், அங்கே கிடைக்கும் உணவு மற்றும் காற்றின் தரம் உட்பட பல அம்சங்களை கணக்கிட்டு கவர்ச்சியான நகரத்தைத் தேர்வு செய்கின்றனர். இந்த வகையில் ஜப்பானில் உள்ள ஒசாகா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது.

இரண்டாம் இடத்தையும் ஜப்பானில் உள்ள க்யூட்டோ கைப்பற்றியிருக்கிறது. மூன்றாம் இடத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கும், நான்காம் இடத்தில் தென்கொரியாவின் சியோலும் பிடித்துள்ளன. ஐந்தாம் இடத்தில் பிரான்ஸின் பாரிஸூம், ஆறாம் இடத்தை இங்கிலாந்தின் லண்டனும், ஏழாம் இடத்தை இத்தாலியின் ரோமும் பிடித்துள்ளன. எட்டாம் இடத்தை ஜப்பானில் உள்ள ஒகினாவா நகரம் பிடித்துள்ளது. ஒன்பதாம் இடத்தைப் பாங்காக்கும், பத்தாம் இடத்தை துபாயும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் தில்லிக்கு 36-வது இடம்தான் கிடைத்துள்ளது.

வசூல் சாதனை

சமீபத்தில் வெளியான ‘நியூ லை’ எனும் சீன அனிமேஷன் படம் வசூலில் பல சாதனைகளை படைத்து சினிமா உலகையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கிறது. இதன் பட்ஜெட் வெறும் 19 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், வசூலோ 66 கோடியை தாண்டிவிட்டது. 100 கோடி வசூல் செய்யும் என்று சொல்கின்றனர். இத்தனைக்கும் சமூக வலைத்தளங்களில், ‘2026-ம் ஆண்டின் மிக மோசமான படம்’ என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. பழைய கம்ப்யூட்டர்களை வைத்து இலவசமாக கிடைக்கும் அனிமேஷன் மென்பொருட்களை பயன்படுத்தி இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கியிருக்கின்றனர். சன் லிஃபாங் திரைக்கதை எழுத, சின் யூமெங் படத்தை இயக்கியிருக்கிறார்.

நிதி நிர்வாகத்தில் ஜொலிக்கும் ஜென் ஸி

பொதுவாக ஜென் ஸி தலைமுறையினர் பொறுப்பில்லாமல் ஊதாரித்தனத்துக்கும், பயணங்களுக்காகவும், டிஜிட்டல் சார்ந்த விஷயங்களுக்காகவும் அதிகமாக செலவு செய்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பண விஷயத்தில் ஜென் ஸி தலைமுறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

அதாவது, இந்தியாவில் மாதச் சம்பளம் வாங்கும் ஜென் ஸி தலைமுறையினர் தங்களின் மாதாந்திரச் செலவுகளில் பெரும்பாலானவற்றை அன்றாடத் தேவைகளுக்கும், தொடர்ச்சியான நிதிப் பொறுப்புகளுக்குமே ஒதுக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மாதாந்திரச் செலவில்

பயணங்களுக்காக வெறும் 5 சதவீதத்தை மட்டுமே செலவிடுகின்றனர்.

வைரல் பாட்டி

அசாமில் உள்ள சோனிட்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஜ்ரோய்மரி எனும் கிராமத்தைச் சேர்ந்த கனக்லதாவுக்கு வயது 103. சமீபத்தில் அசாமின் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. இதில் பலர் உயிரிழந்தனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் பல வழிகளில் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று விரும்பினார் கனக்லதா. கடந்த வாரம் சிவசாகர் மாவட்டத்தின் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று, பல வருடங்களாக தான் சேகரித்த 1.54 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் கனக்லதா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்குத் தலா 2000 ரூபாயை வழங்க

வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

வேகமாக சமைக்கும் ரோபோ

ஜெர்மனியைச் சேர்ந்த சர்க்கஸ் எஸ்இ எனும் நிறுவனம், ஏஐ திறன்கொண்ட ரோபோடிக் கிச்சனை வடிவமைத்திருக்கிறது. ஏழு மீட்டர் சதுர அடி கொண்ட கண்ணாடி பெட்டகத்துக்குள் இந்த கிச்சனை வடிவமைத்திருக்கின்றனர். இங்கே சமைப்பதற்காக பிரத்யேகமாக ஒரு ரோபோவை டிசைன் செய்திருக்கின்றனர். உலகிலேயே வேகமாக சமைக்கக்கூடிய ரோபோ இதுதான். ஆம்; ஒரு மணி நேரத்தில் சூப், பாஸ்தா, நூடுல்ஸ் என்று 120 உணவு வகைகளை சமைக்கிறது. அதாவது, வெறும் 30 நொடியில் ஓர் உணவு வகையைச் சமைத்து அசத்துகிறது. அதுவும் மனிதர்களின் உதவியின்றி இந்த அசாதாரண செயலை செய்கிறது. உணவு சமைப்பதோடு பிளேட்களில் கச்சிதமாக பரிமாறுகிறது. சமைத்த பாத்திரங்களையும், சாப்பிட்ட பிளேட்களையும் வேகமாக கழுவி வைக்கிறது.

தொகுப்பு: த.சக்திவேல்