நன்றி குங்குமம் தோழி
முதல் பெண் விமானி
பீ காரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்த பாவனா காந்த், இந்திய விமானப்படையின் முதல் ‘டாப் கன்’ விமானி என்ற சிறப்பை தன்வசமாக்கியிருக்கிறார். இந்திய விமானப்படையின் முதன்மையான போர் தந்திர நிறுவனமாக கருதப்படுகிறது, குவாலியரில் உள்ள வான்வழிப் போர் மேம்பாட்டு நிறுவனம். இது அமெரிக்க கடற்படையின் ‘டாப் கன்’ அமைப்புக்கு இணையானது.
இது மேம்பட்ட போர் தந்திரங்கள், பணித் திட்டம், வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகள், தலைமைத்துவம் வழங்குதல் போன்ற பயிற்சிகளை வழங்குகிறது. இதன் பயிற்றுநர்கள் இந்திய விமானப்படையின் மிகவும் அனுபவம் வாய்ந்த போர் விமானிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த வான்வழிப் போர் மேம்பாட்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற போர் விமானத் தலைவர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் பெண் போர் விமானி என்ற வரலாற்றுச் சாதனையைத்தான் தன்வசமாக்கியிருக்கிறார் பாவனா.
தத்தெடுப்பு அதிகரிப்பு...
இந்தியாவில் முதல்முறையாக ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகளை தத்தெடுப்பது அதிகரித்திருக்கிறது என்பதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ். 2025-26ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பிறந்த 2,574 பெண் குழந்தைகளையும், 2,448 ஆண் குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளனர். இந்தியாவில் தத்தெடுக்கப்பட்டுள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கொஞ்சம்தான் அதிகம். ஆனாலும், ஆண் குழந்தைதான் வேண்டும் என்று பிடிவாதத்துடன் இருக்கும் ஒரு தேசத்தில், ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தாலே கொன்றுவிடும் நாட்டில், பெண் குழந்தைகளை தத்தெடுப்பது அதிகரித்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த மாற்றத்தை பெண்கள் நல அமைப்புகள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்களும் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.
சர்வதேச விருது வென்ற இந்தியப் பெண்
சமீபத்தில் பிரான்ஸில் நடந்த ‘வேர்ல்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் இன் கேன்ஸ்-ரிமெம்பர் தி ஃபியூச்சர் 2026’ எனும் திரைப்பட விழாவில் ‘மைலோ’ என்கிற அனிமேஷன் குறும்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளியது. இப்படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ‘எதிர்காலத்தின் சிறந்த இசையமைப்பாளர்’ மற்றும் ‘சிறந்த பின்னணி இசை’ ஆகிய இரண்டு உயரிய விருதுகளை வென்றுள்ளார் கேசியா தாமஸ். பல இளம் இசைக்கலைஞர்கள் தங்களின் முதல் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் வயதில், உலகின் மிகவும் மதிப்புமிக்க சினிமா மேடைகளில் ஒன்றான ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் தனது இசைஅமைப்பின் மூலம் தடம் பதித்துள்ளார் கேசியா. கேரளாவில் உள்ள திருவல்லாவில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்த கேசியாவின் வயது 22.
தொகுப்பு: த.சக்திவேல்



