Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

கின்னஸ் சாதனை

ஒரு மணி நேரத்தில் 847 புஷ்-அப்களை எடுத்து கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார், இந்தியாவைச் சேர்ந்த ரோக்டாஷ் சவுத்ரி. ‘புஷ்-அப் மேன் ஆஃப் இந்தியா’ என்று புகழப்படும் ரோக்டாஷ், தனது முதுகில் 27.21 கிலோ எடை கொண்ட ஒரு பையை சுமந்து கொண்டே 847 புஷ்-அப்களை எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு சிரியாவைச் சேர்ந்த சாமி ஜோமா ஹாசன் என்பவர் ஒரு மணி நேரத்தில் அதிக புஷ்-அப்களை எடுத்தவர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

இச்சாதனையை முறியடித்திருக்கிறார் ரோக்டாஷ். சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கோர விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் ரோக்டாஷ். உடலை எங்குமே நகர்த்தக்கூடாது என்பதால் இரண்டு வருடங்களுக்கு மேல் படுத்த படுக்கையாகவே இருந்தார். இப்படியான சூழலிலிருந்து வந்து, புஷ்-அப்பில் அவர் சாதனை படைத்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

டாப் 10

பிரபலமான ஆய்வு நிறுவனம் ஒன்று, 2026-ம் வருடத்துக்கான உலகிலேயே சுவையான, சிறப்பான உணவுகள் கிடைக்கும் டாப் 10 பகுதிகளை பட்டியலிட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் கடைபிடிக்கப்படும் தனித்துவமான சமையல் முறைகள், உள்ளூர் மூலப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய சமையல் குறிப்புகள், மக்களின் கருத்துகள், சுவை என பல அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உலகளாவிய இப்பட்டியலில் இத்தாலியில் உள்ள கம்பேனியாவும், எமிலியா ரொமாக்னாவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. காரணம், இங்கே கிடைக்கும் இத்தாலிய பாரம்பரிய உணவுகள் உலகில் வேறு எங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் இந்தப் பகுதிகளில் கிடைப்பதைப் போல சுவையாகவும், தரமாகவும் இருப்பதில்லை. கிரீஸில் உள்ள கிரீட் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

91 வயது ஸ்கை டைவர்

பொதுவாக எண்பது, தொண்ணூறு வயதை நெருங்கிவிட்டவர்கள் ஓய்வு எடுக்கத்தான் விரும்புவார்கள். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் ஸ்டில்லோ சாகச விளையாட்டுகளில் சாதனை படைத்து வருகிறார். இப்போது ஆலனின் வயது 91. உள்ளூரில் உள்ள சமூக சேவை மையத்துக்கு நிதி திரட்டுவதற்காக மக்களின் முன்னிலையில் ஸ்கை டைவிங் செய்து அசத்தியிருக்கிறார் ஆலன்.

அதாவது, உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து, ஸ்கை டைவர் ஒருவரது உதவியுடன் இந்த ஸ்கை டைவிங் சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார். ஆலன் ஸ்கை டைவிங் செய்ததை நூற்றுக்கணக்கானோர் பார்த்து, அவரை உற்சாகப்படுத்தியிருக்கின்றனர். பலர் ஆலன் ஸ்கை டைவிங் செய்யும் போது புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படங்களை தேநீர் கோப்பையில் பிரின்ட் செய்து, ஆலனுக்கே பரிசாக வழங்கியிருக்கின்றனர்.

வசூல் சாதனை

உலகிலேயே அதிக வசூலை குவித்த வாழ்க்கை வரலாற்றுப் படம் என்ற சிறப்பை தன்வசமாக்கியிருக்கிறது, ‘மைக்கேல்’. உலகப் புகழ்பெற்ற பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம். கடந்த ஏப்ரலில் உலகமெங்கும் வெளியான இந்த ஆங்கிலப் படம், இதுவரை 1.016 பில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் 9,725 கோடி ரூபாய்.

அதிகரிக்கும் புற்றுநோய்

உலகம் முழுவதும் வேகமாக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக சரியான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுக்காவிட்டால் வரும் 2050-க்குள் உலகம் முழுவதும் வருடந்தோறும் 3.5 கோடிப் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். இப்போது வருடத்துக்கு சுமார் 2 கோடி பேர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். தினமும் சுமார் 28 ஆயிரம் பேர் புற்றுநோயால் மரணமடைகின்றனர்.

தொகுப்பு: த.சக்திவேல்