Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஸ்மார்ட்போன் ஆபத்து!

குழந்தை பிறந்ததிலிருந்து முதல் மூன்று வருடங்கள்தான் அதன் மூளை வளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் தாய், தந்தையின் அரவணைப்பு, குழந்தையிடம் ஏதாவது பேசுதல், குழந்தையின் கண்களை பார்ப்பது, விளையாடுவது என்று குழந்தையுடன் உணர்வு ரீதியாக ஒரு பிணைப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அதன் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். முக்கியமாக குழந்தைகளிடம் பேச வேண்டும். அப்போதுதான் அதன் மொழித் திறன் வளரும். முதல் மூன்று வயதுக்குள் ஸ்மார்ட்போனை குழந்தைகளிடம் காட்டினால் ஆபத்துதான் மிஞ்சும் என்று எச்சரிக்கை செய்கிறது தில்லி எய்ம்ஸின் ஆய்வு. மூளை வளரும் காலங்களில் ஸ்மார்ட்போன் திரைகளை குழந்தைகள் பார்க்கும்போது, ஆட்டிசக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுதான் இன்றைய மருத்துவ உலகில் முக்கியமான விவாதப்பொருளாக மாறியிருக்கிறது

முதல் பெண் கிரிக்கெட் பயிற்சியாளர்!

இன்று உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் உச்சரிக்கும் ஒரு பெயர், சாரா டெய்லர். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச ஆடவர் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பெண் என்ற பெருமையை தன்வசமாக்கியிருக்கிறார் இவர். ஆம்; அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போகும் இங்கிலாந்தின் ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சாரா. அதுவும் 150 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெண் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருப்பது பலரது கவனங்களை ஈர்த்திருக்கிறது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் பாலினத் தடைகள் உடைக்கப்பட்டிருப்பது பாராட்டுகளை அள்ளி வருகிறது.

சாதனைப் பெண்!

வாழ்க்கையில் ஒருமுறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்பது ஒவ்வொரு மலையேற்ற வீரர், வீராங்கனையின் கனவு. இந்நிலையில் லக்பா ஷெர்பா என்ற பெண், 10 முறை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்திருக்கிறார். எவரெஸ்ட் மீது மலையேற்றம் செய்பவர்களில் சிலர் மட்டுமே அதன் உச்சியை தொடுகின்றனர். பெரும்பாலானவர்கள் பாதியிலேயே திரும்பிவிடுகின்றனர். லக்பாவோ பத்து முறையும் எவரெஸ்ட்டின் உச்சியை தொட்டிருக்கிறார். அதுவும் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து இந்த சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார். ஆம்; நேபாளத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து வந்த ஏழ்மையான ஷெர்பா குடும்பத்தில் பிறந்தவர், லக்பா. இந்த வருடத்தில் 11-வது முறையாக எவரெஸ்ட்டில் ஏறப்போவதாக அறிவித்திருக்கிறார்.

வைரல் வருமானம்!

டெல்லியைச் சேர்ந்த தேவ்னேஷ் தியாகி என்ற இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸரின் பரிசோதனை முயற்சியை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். மலைப்பகுதிகளில் மேகி ஸ்டால் வைத்தால், வியாபாரம் எப்படியிருக்கும் என்று ஒரு பரிசோதனை செய்து பார்த்தார் தியாகி. டெல்லியைச் சுற்றி அதிகமாக மக்கள் வந்து போகும் மலைப்பகுதிகளில் மேகி ஸ்டாலை அமைத்தார். அவரே மேகியை தயார் செய்து விற்பனை செய்தார். ஒரு பிளேட் மேகி 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் 24 ஆயிரம் ரூபாய் வரை அவருக்கு மேகி மூலம் வருமானம் கிடைத்திருக்கிறது. அவர் கடை அமைத்த மற்ற மலைப்பகுதிகளிலும் ஜோராக இருந்திருக்கிறது. ‘‘தியாகி புதிதாக ஒரு பிசினஸ் மாடலை நமக்கு கொடுத்திருக்கிறார்...’’ என்று அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

பள்ளிகளை கட்டும் யூடியூபர்!

சமூக வலைத்தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ‘மிஸ்டர் பீஸ்ட்’டைப் பற்றிய அறிமுகம் பெரிதாக தேவைப்படாது. ஜேம்ஸ் டொனால்ட்சன் என்பது இவரது நிஜப் பெயர். உலகின் மிகப் பிரபலமான, அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர் இவர்தான். அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூபரும் இவர்தான். இவரது ‘MrBeast’ என்ற யூடியூப் சேனலை 48.7 கோடிப் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். கடந்த 14 வருடங்களாக இந்தச் சேனலில் 980 வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார் மிஸ்டர் பீஸ்ட். இந்த வீடியோக்கள் 12,200 கோடி பார்வைகளை அள்ளியிருக்கிறது. இதில் பெரும்பாலான வீடியோக்கள் டிரெண்ட் அடித்து, வைரலாகியிருக்கின்றன. இவரது யூடியூப் பிரபலத்தைப் பார்த்து, ‘டைம்’ பத்திரிகை, 2023-ம் வருடத்தில் உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரின் பட்டியலில் மிஸ்டர் பீஸ்ட்டுக்கும் இடம் கொடுத்தது. இதுபோக ஏராளமான கௌரவங்களையும், விருதுகளையும் அள்ளியிருக்கிறது. இன்றைய தேதியில் இவரது சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், நன்கொடை அளிப்பதிலும் பெயர் பெற்றவர் மிஸ்டர் பீஸ்ட். உலகம் முழுவதும் நவீனமான 10 பள்ளிகளை கட்டமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அதில் ஒரு பள்ளி இந்தியாவிலும் வரப்போகிறது.

தொகுப்பு: த. சக்திவேல்