Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மாணவர் போராட்டத்தின் புதிய முகம் நேஹா போரா

நன்றி குங்குமம் தோழி

ஒரு தனிமனிதன் நினைத்தால், எந்த பின்புலமும் இல்லாமல், சொந்தக் குடும்பமே சித்தாந்த ரீதியாக எதிர்த்தாலும், தன் உண்மையான அறச்சீற்றத்தால், ஒரு நாட்டின் அதிகார மையத்தையே அசைத்துப் பார்க்க முடியும் என்பதற்கான வாழும் சாட்சி நேஹா போரா.உத்தரகாண்டில் ஒரு சாதாரண ராணுவ வீரரின் மகளாய் பிறந்த பெண் எப்படி டெல்லி வீதிகளில், அதிகார வர்க்கத்தை நோக்கி நேரடியாக கேள்விகள் கேட்கிற ஒரு மாபெரும் புரட்சி முகமா மாறினார் என்பதே இன்று வலைத்தளங்களில் டாக் ஆஃப் த டிரெண்டாக மாறியிருக்கிறது.

இது வெறும் நேஹா போரா என்கிற ஒற்றைப் பெண்ணின் கதை மட்டுமல்ல... ஒட்டுமொத்த தலைமுறையோட மனமாற்றம். அமைதியாக வகுப்பறையில் இருக்க வேண்டிய குரல்கள் எப்படி ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்குகிற பெருங்குரல்களாக மாறியது என்கிற விடை நேஹா போராவின் பயணத்திலும் புதைந்திருக்கிறது.நேஹா உத்தரகாண்ட் மண்ணுல பிறந்தவர். அவரின் அப்பா ஒரு ராணுவ வீரர். அதுமட்டுமல்லாம தீவிரமான வலதுசாரி சிந்தனையாளர். ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி சித்தாந்தங்களை பின்பற்றுபவர். ஒரு மரம் தன் வேர்கள் இருக்கிற திசைக்கு எதிராக, அதாவது, புவியீர்ப்பு விசைக்கு எதிராய் வளர்வது போல.நேஹாவோ முற்றிலும் நேர்மாறாக ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களோட நீதிக்காக களமிறங்குபவர்.

இங்கதான் பிரச்னை ஆரம்பிக்குது. இந்த சித்தாந்த முரண்பாட்டால நேஹாவின் அப்பா அவரிடம் பேச மறுக்க, குடும்பம் அவரை நிராகரிக்க, அதிகாரத்தின் நிழலில் கிடைக்கக்கூடிய சொகுசு வாழ்க்கை, குடும்ப பாசம் என எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வருகிறார் நேஹா.தன் அப்பாவோட இடமாற்றங்களால்தான், நேஹா போரா இந்தியா முழுக்க பயணித்து, சாமானிய மக்களின் வலிய புரிஞ்சுக்கிற பார்வையை பெற்றிருக்காங்க என்று நாம் நினைத்தாலும், பயணம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதிலும் குறிப்பாக ஒரு ராணுவ வீரரோட குடும்பம் பாதுகாக்கப்பட்ட வளையத்துக்குள், கண்டோன்மென்டுக்குள் அடைபட்டு வாழும் வாழ்க்கை கொண்டது. பள்ளிகள், மருத்துவமனைகள், சுத்தமான சாலைகள்னு குறையற்ற உலகம் அது.

அந்தப் பாதுகாப்பான சுவர்களுக்கு வெளியே இருக்கின்ற இந்தியா முற்றிலும் வேறானது. பசி, வறுமை, ஏழ்மை என போராட்டங்கள் நிறைந்தது. பல மாநில மொழிகள், கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் கடந்து, ஒரு சிறுமி வளரும் போதே, இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில இருக்கின்ற மலைக்க வைக்கிற வித்தியாசத்தை நேரில் பார்க்கிறார்.

பாதுகாப்பான வளையத்துக்குள்ள இருக்கறவங்க ஏன் வெளிய இருக்கறவங்களை கண்டுக்கிறது இல்லை என்கிற கேள்வி ஆழமாக எழ, அதுவே மற்றவங்க வலியை தன் வலியா உணர்கிற பச்சாதாபத்தை அவருக்குள் உருவாக்குது. தன் சொந்தக் குடும்பத்தோட சித்தாந்தத்துக்கு எதிரா நிற்பது என்பது, ஒரு மனிதன் எடுக்கக்கூடிய மிகமிகக் கடினமான உளவியல் முடிவு.

அப்பா பேச மறுக்கிறார். குடும்பம் விலகி நிக்குதுன்னா அது சும்மா இல்ல. இன்றைய ஜென்சி தலைமுறையை சேர்ந்த ஒரு மாணவி தனக்கு இயல்பாவே கிடைக்கக்கூடிய அத்தனை சொகுசுகளையும், பாதுகாப்பையும் தூக்கி போட்டுட்டு யாரோ ஒரு ஏழை மாணவனின் உரிமைக்காக வீதிக்கு வந்து நிக்கிறார் என்றால்?

நேஹா டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கிறாங்க. அப்புறம் புகழ்பெற்ற அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இணைந்து முதுகலை முடிக்கிறாங்க. இன்று இந்தியாவிலேயே தலை சிறந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமான ஜே.என்.யூ.ல பிஹெச்டி பயிலும் மாணவி. இதுல இன்னொரு சுவாரசியமான விஷயம் அவங்க ஒரு நாடகக் கலைஞரும்.

கல்வி உரிமைகள் இந்த சமூகத்தில் பறிக்கப்படுறத கண்டபோது, நேஹா பேனாவை மட்டும் பிடிச்சிட்டு அறைகளுக்குள் கட்டுரைகள் எழுதல. மாறாக வீதிகளில் இறங்கி தன் முஷ்டியை உயர்த்துனாங்க. ஆம்! ஒரு நாடகக் கலைஞர் தன் மேடையை விட்டிறங்கி, நிஜ வாழ்க்கையோட திரைக்கதையை மாற்ற நினைத்து களத்துல குதிச்ச மாதிரி இருக்கு

நேஹாவின் போராட்டக் களம்.

ஒரு போராட்டக் களத்துக்கு தேவையான முக்கியமான ஆயுதமே நாடகக் கலைதான். நூற்றுக்கணக்கான கண்களுக்கு முன் தன்னை முழுமையா வெளிப்படுத்திக்கிற ஒரு கலைஞருக்கு, பொதுவெளியில தடையின்றி பேசுகிற தைரியம் இயல்பாவே வரும். அதைவிட முக்கியம் குரலோட வலிமை. அப்புறம் உடல் மொழி. காவல்துறை மிரட்டுது. தடியடிகள் விழுது. நேஹா அதை ஒரு புன்னகையோடு எதிர்கொள்றாங்க. கோபத்தைக் காட்டுவதைவிட, அதையே ஆக்கப்பூர்வமான போராட்டமா மாற்றுவதே கலை.

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிரா ஒட்டுமொத்த தேசமே கொதித்து எழ, அந்தப் போராட்டக் களத்திலும் நேஹா முன்னணியில் நின்றார். சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுவுடன் இணைந்து 23 நாட்கள் டெல்லியில உண்ணாவிரதம் இருந்தார். மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா கோரி நடந்த அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நேஹாவின் உடல்நிலை மோசமாக பாதித்தாலும் அவர் பின்வாங்கவில்லை.

23 நாட்கள் உண்ணாவிரதம் என்பது ஒரு GenZ மாணவிக்கு எக்ஸ்ட்ரீமான முடிவு. இதற்கு காரணம், நேஹாபோரா அவரின் உயிருக்கு நிகராக நம்புகிற சித்தாந்தத்தின் மேல் வைத்துள்ள காதலேயாகும். தன் உடம்பையே ஒரு ஆயுதமாக மாற்றுவது மிகப்பெரிய விஷயம். ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட நேஹா சென்ற போது, அவர் மீது எதிரிகள் மையை கொண்டு வீசி தாக்குதல் நடத்த, நேஹா துளியும் பயப்படல.

அந்த அவமானத்தையே தனக்கான கிரீடமாகவே மாற்றினார்.‘‘அந்த மை என் மேல வீசப்படல. பல லட்சம் இந்திய மாணவர்களுடைய எதிர்காலத்தின் மேல வீசப்பட்ட இருள். டெல்லி வீதிகளில், துப்பாக்கி குண்டுகளையும், தடியடிகளையும் எதிர்கொண்டவள் நான். என் மீது மை வீசினால் இந்த இளைஞர்களின் கோபத்தை அடக்கி விட முடியுமா?’’ எனப் பேசி, முகத்தில் அறைந்த மாதிரியான கேள்விகளை முன் வைத்தார். நேஹாவின் போராட்டம், கல்வி நிறுவனங்களோடும், நீட் பிரச்னையோடும் நிற்கல. அவர் தனது கரங்களில் தொட்ட இடதுசாரி அரசியல், ஊபா சட்டம், தேர்தல் ஆணயத்தின் மீதான விமர்சனங்கள், பகத்சிங் முழக்கங்கள்னு அனைத்துமே கூர்மையானவை.

காக்ரோச் ஜனதா பார்ட்டி என்கிற ஒரு நையாண்டியான இளைஞர் இயக்கத்தை ஆரம்பித்து, அதிகார மையங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததுடன், தேர்தல் ஆணையத்தோட வாக்காளர் பட்டியல் முறையீடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியை அதிர வைத்ததுடன், அக்டோபர் 2ல் ஜந்தர் மந்தரில் காவல்துறையின் இரும்பு தடுப்புகளை தகர்த்து அவர் முன்னேறிய காட்சிகள், நாடு முழுக்க தீயாய் பற்றியது. அடையாளம் தெரியாத வாகனங்களில் கடத்தப்படுகின்ற மாதிரி, பலமுறை கைது செய்யப்பட்டார். ஆனாலும், விடுதலை யான அடுத்த கணமே மறுபடியும் வீதிக்கு வந்து நின்றார்.

இப்போது ஜந்தர் மந்தர் 2.0 தொடங்கி இருக்கிறது. “நாம் தனியாகப் போராடல. ஒருவருக்காக ஒருவர் போராடுகிறோம். இன்குலாப் ஜிந்தாபாத்’’ என இளைஞர்கள் மத்தியில் நின்று பெருங்குரல் எடுத்து நேஹா போரா முழங்க, இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆம்! ஒரு கிளையில இருக்கிற நோயை குணப்படுத்த சென்ற இளைஞர் படை, அந்த மரத்தின் வேரிலேயே விஷம் இருப்பதை கண்டு, மரத்தையே நீக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

“நீங்கள் கோட்சேவை நம்புகிறீர்கள். நாங்கள் பகத்சிங்கை நம்புகிறோம்” என்கிற முழக்கம், வெறுமனே இரண்டு வரலாற்று பெயர்களுக்கு இடையிலான மோதல் இல்லை. முற்றிலுமாக வேறுபட்ட இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான வெளிப்படையான போர் பிரகடனம்.அரசாங்கத்தோட ஆகப்பெரிய ஆயுதம் மக்களை கைது செய்து சிறையில அடைப்பதுதான். பலமுறை கைது செய்யப்பட்டாலும், மீண்டு வருவது. ஒருவருக்காக ஒருவர் போராடுகிறோம் எனச் சொல்வதெல்லாம் அரசை பற்றிய பயத்தை முறியடித்த மனிதர்களோட அடையாளங்கள்.

ஆனால், ஒரு மாணவி, அந்த சிறைக்கும், தடியடிக்கும் பயப்படுவதை நிறுத்திவிட்டால், இந்த அதிகாரத்தால ஒன்னும் பண்ண முடியாது என்பதே நேஹா போராவின் போராட்டம் நமக்கு அப்பட்டமாக காட்டுகிறது.நமக்காக, நம் அடுத்த தலைமுறையோட எதிர்காலத்துக்காக இரும்புத் தடுப்புகளை உடைத்து, தடியடிகளுக்கு மத்தியில இளைய தலைமுறையினர் முன்னேறி செல்வதைப் பார்ப்பது, மனித குலத்தின் மீது, மிகப்பெரிய நம்பிக்கையை விதைப்பதுடன், உண்மையான ஜனநாயக மாற்றம் என்பது நமது டிஜிட்டல் உலகத்தோட திரைகளிலா? அல்லது இந்த வீதிகளோட புழுதியில் இருக்கா? வீதியை மறந்த சமூகம் விடுதலையை இழக்குமா?

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்