Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைமைப் பண்பின் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

தலைமைப் பண்பு என்பது ஏதோ நிறுவனத்தின் தலைவர்கள் அல்லது அரசியல் மற்றும் சமூக தலைவர்களுக்கு மட்டுமே உரித்தான பண்பு என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு சாமானியரிடத்தும் இருக்க வேண்டிய அடிப்படை பண்புநலன். எந்த நேரத்தில் தக்க முடிவு எடுக்க வேண்டும். ஒரு சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும். உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்னைகள், மனஸ்தாபங்களை எவ்வாறு கையாள்வது என்பதனை இதனை கொண்டு எதிர்கொள்ள முடியும்.

தலைமைப் பண்பு ஒருவரிடத்தில் இருந்தால், பிரச்னைகள் என்று ஏதும் இல்லை, அனைத்தும் சவால்கள் என்ற புரிதலை ஏற்படுத்தும். பிரச்னையை எதிர்கொள்ள தைரியம் இருக்காது. ஆனால், சவால்களை எப்படி முறியடிக்கலாம் என்ற உத்வேகம் பிறக்கும். பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற மன அழுத்தம் ஏற்படும். சவால் என்றால் அதை ஏற்க வேண்டுமா, வேண்டாமா? அதனை தவிர்த்துவிட்டு வேறு என்ன செய்யலாம் என்ற புதிய, மாற்று கோணத்தில் சிந்திக்க தோன்றும். இவை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

தோல்வி மற்றும் இழப்பில் இருந்தும் மீள எளிமையானதாகவும் விரைவானதாகவும் அமையும். முன்னேற்றத்திற்காக புதிய விஷயத்துக்கு மனதை பழக்கப்படுத்திக்கொள்ள தலைமைப் பண்பு தூண்டுகோலாக இருக்கும். உணர்வுகளை எவ்வாறு எந்த அளவில் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் இதன் மூலம் மேம்படும். அவமானப்படும் நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டாமல், சமயோஜித புத்தியுடன் கையாள்வது சிறந்தது. எதுவும் அவமானமல்ல... அனைத்தும் அனுபவம் மற்றும் பாடமே என்கிற உயர்ந்த மனநிலைக்கு தலைமைப்பண்பு நம்மை கொண்டு செல்லும்.

தலைமைப் பண்பு என்றால் என்ன?

அடுத்தவர்களை வழிநடத்துவது மட்டுமே தலைமைப் பண்பு அல்ல. தன்னைத்தானே திறம்பட வழிநடத்திக்கொள்ள உதவுவதுமே தலைமைப் பண்பு தான். இதன் அடிப்படையே தெளிவான சிந்தனை, தைரியம், நிதானம் ஆகிய மூன்றும்தான். இவை மூன்றும் ஒருவரிடத்தில் ஒருங்கிணைந்து இருந்தால் அவர் தலைமைப் பண்பில் மேம்பட்டவராவார். நல்ல முடிவை எடுப்பது மற்றும் உணர்வுகளை செம்மையாக கையாளுதல் இவை இரண்டும் தெளிவான சிந்தனையினை குறிப்பிடும். ஒவ்வொரு நாளும் கவனத்துடன் சிந்தனை, தைரியம், நிதானம் இவை மூன்றையும் மேம்படுத்தினால் வாழ்வின் கோணமே மாறும். குறிப்பாக ஒருவரின் குணாதிசயங்களும், பழகும் தன்மையும் உயர்வாக மாற்றியமைக்கும்.

தீர்வில்லாத பிரச்னைகளே கிடையாது. அவற்றில் எது சுமூகமானது, பாதிப்பு இல்லாதது, எளிதானது, மன திருப்தியை கொடுக்கக்கூடியது என்று ஆராய்ந்து ஒரு முடிவினை தேர்ந்தெடுக்கும் போது சிறிய அளவிலான பாதிப்பை மட்டுமே கொடுக்கும். இதற்கு முடிவினை எடுக்க தலைமைப்பண்பு உதவும். மேலும், எப்போது பேசணும், பேசக்கூடாது, எதை பேசணும், தவிர்க்கணும் என்ற புரிதல் ஏற்படும். சில நேரங்களில் முடிவு ஏதும் எடுக்காமல் இருப்பதே நல்லது. அது ஒரு தெளிவினை கொடுக்கும். யாரிடம் நெருக்கம் காட்டுவது, விலகி இருப்பது என்று புலப்படும்.

தவறு செய்வது மனிதனின் இயல்பு. ஆனால், ஒரு தவறு செய்த பிறகு, அதை மீண்டும் செய்யக்கூடாது என்ற பாடத்தினை கற்க வேண்டும். செய்த தவறினை எவ்வாறு சரி செய்வது என்ற அடுத்த நகர்வுக்கு மனம் செல்லும் போது தலைமைப் பண்பு உறுதி செய்யும்.ஏக்கம், புலம்பல், புரளி பேசுதல், அடுத்தவரிடத்தில் குற்றம் கண்டுபிடித்தல், அடுத்தவர் புகழுக்கும் பொருளுக்கும் பொறாமைப்படுதல் ஆகியவற்றை தவிர்க்க தலைமைப் பண்பு சொல்லிக் கொடுக்கும். புலம்பல், ஏக்கம், பொறாமை இவை மூன்றும் இயலாதோரின் மொழி.

தலைமைப் பண்பு தோல்விகளை தாங்கும் மனநிலையை கொடுக்கும். ஒன்றை கெஞ்சிதான் பெற்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், தன்மானம் இழக்காமல் காரியத்தை சாதிக்கக்கூடிய தெளிவை தலைமைப் பண்பு கொடுக்கும். செய்த தவறுக்கான மன்னிப்பினை தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் கேட்க கற்றுக்கொடுக்கும். எதிர்மறை எண்ணங்கள் தவிடு பொடியாகும். தெளிவான திட்டமிடல் அதை நடைமுறைப்படுத்துவதும் தெரிய வரும். புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடிய சிந்தனைகளை அதிகரிக்க செய்யும். ஆசைப்படும் விஷயம் அவசியமா என்று சிந்திக்க வைக்கும்.

தொகுப்பு: கார்த்திக், தலைமைத்துவப் பயிற்சியாளர்