Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வேலையில் அறநெறியின் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

எண்ணம், சொல், செயல்-இவை மூன்றிலும் எவர் நேர்மையாக இருக்கிறாரோ அவரே நேர்மையானவர். அந்த நேர்மையை தொழிலில் காட்டுவதுதான் ‘Work Ethics.’ விசுவாசம்-இதுவே வேலை அறநெறிக்கான அடித்தளம். விசுவாசம் இல்லாத நபர் ஆபத்தின் அறிகுறி மட்டுமல்ல, அவர்தான் முழுமையான ஆபத்தே. அவரை நம்பி நாம் எந்த தகவலை சொல்ல முடியும்? எந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும்? “யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என்றே தெரிவதில்லை” என்று பலர் புலம்பக் காரணமே மக்களிடம் விசுவாசம் குறைபாடு இருப்பதால்தான்.

சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்களிடம் தொழிலிலும் நேர்மை இருக்காது. “சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்பதே நேர்மையின் அடிப்படைத் தன்மை. நேர்மை ஒருவரின் குணம். அதேபோல் அறநெறிகளும் குணத்தை சார்ந்தது. குணம் மூலமாக ஒருவரின் நடத்தை வெளியாகிறது. அவை அறநெறி சார்ந்த நடத்தையினை வழிவகுக்கும். இதைத் தொடர்வதுதான் வேலையில் அறநெறி. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காமல் இருந்து, அதனால் தவறு செய்யாமல் இருப்பது மேலான நிலை அல்ல. தவறு செய்ய அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், தவறு செய்யக்கூடாது என்கிற மன உறுதியோடு இருப்பதுதான் அறநெறி. சில நேரங்களில் கண்காணிக்க யாரும் இல்லை, தவறு இழைத்தால் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணம் தோன்றலாம். அப்படி ஒரு சூழ்நிலையில் மனம் தடுமாறி விடக்கூடாது.

வேலையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் நம்முடைய நேர்மை தவறக்கூடாது. நேர்மையின் மூலம் மட்டுமே மன நிம்மதி கிடைக்கும். தவறு செய்ய திணிக்கப்பட்டாலும், நீதி தவறாமையிலிருந்து விலகக்கூடாது. “பொறுப்புடன் வேலை செய்யவேண்டும் என்பது எழுதப்படாத விதி.” அதை அனைவரும் உணர்ந்துதான் பணிபுரிவார்கள். என்றாலும், அதன் அவசியம் குறித்து நிறுவனங்கள் அவ்வப்போது ஊழியர்களுக்கு விளக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்களுக்கு பரிசும், பாராட்டும் கொடுக்க வேண்டும்.

அறநெறியினை ஊழியர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்றில்லை. நிறுவனர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் செய்யும் தவறுகளை நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அறமற்ற செயலாகும்நிறுவனத்தில் உயர் அதிகாரி தவறு இழைத்தால் நிர்வாக துறையில் முறையிடலாம். ஆனால், தவறு இழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், தவறை சுட்டிக் காண்பித்தவர் மீது நடவடிக்கைகள் பாய்கின்றன. சில சமயங்களில் அவர் வேலையும் இழக்க நேரிடும். இதுதான் யதார்த்தமும், உண்மையும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இதுதான் நிலைமை.

தன் தவறு மட்டுமே தவறல்ல, கண்ணில் படும் தவறுகளை கண்டும் காணாமலும் இருப்பதும் தவறுதான். ஆனால், நமக்கு எதற்கு வம்பு என்று பெரும்பான்மையான ஊழியர்கள் விலகிச்சென்று விடுகிறார்கள். காரணம், பாதிப்பு தனக்குதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனை நிறுவனங்கள் புரிந்துகொண்டு தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். வேலையில் அறநெறி அவசியமானது. இது வெற்று அறிவிப்பு அல்ல. செயல் நடைமுறை. வாழ்வியல் ஒழுங்குமுறை.

தொகுப்பு: கார்த்திக் தலைமைத்துவப் பயிற்சியாளர்