Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேலி பேசியவர்களுக்கு என் வளர்ச்சிதான் பதில்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய ஃபேஷன் யுகத்தில் ஆடை, ஆபரணங்களுக்கு அடுத்த நிலையில் கவனிக்கப்படுவது சிகை அலங்காரம். தலையில் எண்ணெய் வைத்து சீவி, ரெட்டை ஜடை பின்னி கல்லூரிக்குச் சென்ற காலம் மறைந்துவிட்டது. தலைமுடி வல்லுநர்களும் எண்ணெய் இல்லா தலைமுடிகள்தான் ஆரோக்கியம் என்கின்றனர். இன்றைய மாசான சுற்றுப்புற சூழ்நிலையில் எண்ணெய் வைத்தால் தலை குளித்த பிறகே வெளியே செல்ல வேண்டும் என்பதே அவர்களது அறிவுரையாக உள்ளது.

அன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் தலைமுடிகள் நன்றாக இருந்தன. ஆனால், இன்று பலரும் சிறு வயதிலேயே இளநரை, வழுக்கை, அடர்த்திக் குறைவு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றுக்கு தண்ணீர் மாசு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அதிக கெமிக்கல்ஸ் உள்ள ஷாம்பூ, ஜெனிட்டிக் பிரச்னை, தைராய்டு என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தலைமுடி பிரச்னைகளுக்கு ஏற்ப அதற்கான தீர்வுகளும் வந்துவிட்டன. இளநரையை ஆரம்ப காலத்திலேயே கவனித்தால் சரி செய்ய முடியும் என்றும் பல்வேறு மாற்று வழிகளும் உருவாகிவிட்டன என்கிறார்கள் ஹேர் ஸ்பெஷலிஸ்ட்ஸ். தலைமுடிகள் அழகியல் சார்ந்து இருப்பதால் சின்னக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தலைமுடிக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள். அப்போதெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும்.

தற்போது பெண்களும் இந்தப் பிரச்னையினை சந்திக்கிறார்கள். ஃபேஷன் என்ற பெயரில் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்றவற்றில் அதிகளவு ரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்பட்ட முடி இழப்பினை நாம் திரும்ப பெற முடியாது. ஆனால், அதற்கான தீர்வினை தரமுடியும் என்கிறார் ‘ஸ்டார் ஹெர்பல் ப்யூட்டி பார்லர்’ நிறுவனர் நாகலட்சுமி ரமேஷ். இவர் ஹேர் எக்ஸ்டென்ஷன் மற்றும் ஹேர் எக்ஸ்டென்ஷன் கிளிப்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருகிறார்.

‘‘நான் வேளச்சேரியில் இருக்கிறேன். 2002ல் தரமணியில் அழகு நிலையம் ஒன்றை துவங்கினேன். பத்தாவது வரை தான் படித்திருக்கிறேன். 16 வயசிலேயே திருமணமானது. நான் இந்த துறைக்கு வந்தது தற்செயலானது. என் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பக்கத்து வீட்டுப் பசங்களும் என்னிடம் பாடம் கற்றுக்கொள்ள வருவாங்க. அந்தக் குழந்தைகளின் அம்மா ஒருவர் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.

அவங்களால் அதை பார்த்துக் கொள்ள முடியாத காரணத்தால் என்னை அதை வாங்கிக் கொள்ள முடியுமான்னு கேட்டார். நான் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி. என்னுடைய இடது கையில் விரல்கள் இருக்காது. இந்தக் குறையினால் பலர் என்னிடம் நேரிடையாக இந்தக் கையை வைத்துக் கொண்டு

எப்படி மற்றவர்களுக்கு சர்வீஸ் செய்ய முடியும்னு கிண்டல் செய்தாங்க. ஆனால், அவர்களுக்கு என் வளர்ச்சி ஒரு பதிலடி கொடுத்திருக்கிறது.

அழகுக் கலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அதனால் நான் அதை பழகிக் கொள்ளும் வரை கடையின் முன்னாள் உரிமையாளர் உடன் இருந்து எனக்கு உதவுவதாக கூறினார். அவர் சொன்ன சொல்லை நம்பி நானும் கடையை வாங்கினேன். ஆனால், அவருக்கு அங்கு வேலை செய்ய பிடிக்காமல் நின்றுவிட்டார். எனக்கும் இந்த துறைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனால் கடையை மூடிவிட்டேன். வருமானம் இல்லாமல் அதற்கு வாடகை கொடுத்து வந்தேன். என் குறைபாடு மற்றவர்களுக்கு கேலியானது.

அதனால் அழகுக் கலை பயிற்சிக்கு சென்றேன். என் குறைபாட்டை புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சி அளித்தார் பயிற்சியாளர் கிரிஜா. பயிற்சி பெற ஆரம்பித்ததும் கடையை மீண்டும் திறந்தேன். ஒரு பெண்ணை நியமித்தேன். காலை நான் பயிற்சிக்கு செல்வேன். மதியம் கடைக்கு வந்திடுவேன். என்னுடைய பிரச்னை காரணமாக எனக்கு புருவம் தீட்ட செய்யப்படும் திரெட்டிங் மிகப்பெரிய சவாலாக இருந்தது. மூன்று மாதப் பயிற்சிக்குப் பிறகுதான் என்னால் சரியாக செய்ய முடிந்தது.

அதன் பிறகு ஹேர் கட், பெடிக்யூர், ஃபேசியல் எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். பிரைடல் மேக்கப், ஹேர் டிரெசிங் செய்ய டெல்லி, பெங்களூரு, கோயம்புத்தூர் சென்று ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பயிற்சி எடுத்தேன். சில அழகு நிறுவனங்கள் பயிற்சி வழங்குவார்கள். அதிலும் சேர்ந்து படிச்சேன். அதன் மூலம் துபாயில் ஹேர்கட்ஸ், கலரிங் கோர்ஸ் முடித்தேன்’’ என்றவர் அரோமா தெரபியும் படித்துள்ளார்.

‘‘டெல்லியில்தான் ஹேர் எக்ஸ்டென்ஷன் கோர்ஸ் படிச்சேன். அதன் பிறகு பலர் என்னிடம் தலைமுடி அடர்த்தி, நீளம் வேண்டும் என்று வருகிறார்கள். அவர்களுக்கு சிறந்த முறையில் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து தருகிறேன். புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபியால் முடி கொட்டிவிடும். அதே போல் அலோபீசியா பாதிப்பினாலும் முடி உதிரும். அவர்களுக்கு ஹேர் பேட்சஸ் செய்து பிக்ஸ் செய்கிறோம். நீளமான முடி வேண்டுபவர்களுக்கும் ஹேர் கிளிப்சும் தருகிறேன்.

எங்களிடம் 10 இன்ச் முதல் 30 இன்சஸ் வரை நிஜமான முடிகள் கிடைக்கும். இவற்றை டெல்லியில் இருந்து அவர்களின் சைசிற்கு ஏற்ப வரவழைத்து தருகிறேன். இந்தியா மட்டுமில்லாமல் லண்டன், ஜெர்மனி போன்ற உலக நாடுகள் முழுவதும் எனக்கு வாடிக்கையாளர்கள் இருக்காங்க.ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்த பிறகு நம்முடைய ஒரிஜினல் முடி போல ஷாம்பு, கண்டிஷ்னர் பயன்படுத்தினால் போதும்.

பத்து வருடங்கள் வரை எந்த பாதிப்பும் ஏற்படாது. எக்ஸ்டென்ஷன் செய்தவர்கள் மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக எங்களிடம் வந்து அதனை சீராக்கிக் கொள்ள வேண்டும். காரணம், புதிய முடிகள் வளரும் போது சிக்காகும் வாய்ப்புள்ளது. எல்லா துறைகளை போலவே அழகியல் துறையும் தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ந்து வருகிறது. அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்’’ என்று கூறும் நாகலட்சுமி ப்யூட்டி அகாடமி மூலம் பெண்களுக்கு அழகுக் கலை குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார்.

தொகுப்பு: கலைச்செல்வி