நன்றி குங்குமம் தோழி
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இயக்கி, அவரது மனைவி பிரேமா செழியன் தயாரித்த ‘காகித மலர்’ திரைப்படம், ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற 39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. உலக அளவில் தேர்வான 10 படங்களில் இதுவும் ஒன்று.ஈரான், துருக்கி, கொரியா, ஜப்பான் மொழி படங்களோடு போட்டியிட்டு, ஆசிய சினிமாவின் புதிய குரல்களை உலகுக்குக் கொண்டு போகிற முக்கியமான தளமாக, ஆசியன் ஃபியூச்சர் பிரிவில், உலகளாவிய பிரீமியராய் இரண்டு காட்சிகள் திரையிடப்படுவது இமாலய சாதனையே.
வாழும்போது அங்கீகாரம் கிடைக்காமல், மறைந்த பிறகு உலகம் கொண்டாடுவது, ஒரு கலைஞனுக்கு கிடைக்கின்ற வெற்றியோட முரண்பாடுதான் என்றாலும், இயக்குநர் செழியன் இல்லாத நிலையில், ஜப்பானில் நடக்கவுள்ள பாராட்டு விழாவில் கலந்துகொள்ள டோக்கியோ செல்கிறார் தயாரிப்பாளர் பிரேமா செழியன். செழியன் குறித்து அவரிடம் பேசியதில்...
‘‘புகழோ, பணமோ, திரைப்பட விழாக்களின் ஆடம்பரங்களோ இல்லாமல் கலையை மட்டுமே சுவாசமாகக் கொண்டு வாழ்ந்த சமரசம் இல்லாத கலைஞன் செழியன்.அவருக்கு ஊர் சிவகங்கை. நான் அங்கு 8ம் வகுப்பு படிக்கும்போது, செழியன் சிவில் இன்ஜினியரிங் முடித்து, வீடுகளுக்கான பிளான் வரைந்து கொடுக்கும் வேலைகளை டீமாக இணைந்து செய்து வந்தார். அந்த டீமில் என் ஒன்றுவிட்ட சகோதரியும் இருந்தார்.
ஒருநாள் என் சகோதரியைப் பார்க்க செழியன் அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த ஜன்னல் வழியாக நான் பார்க்க... அவரைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துப்போனது. அவரும் என்னைப் பார்த்துவிட்டு, உள்ள வான்னு கைகளை அசைத்து கூப்பிட்டு, கடலை மிட்டாய் கொடுத்தார். வெறும் ஒரு கடலை மிட்டாய்தான் எங்களோட முதல் சந்திப்பே.
எனக்கு ஏற்பட்டதை வெறும் ஈர்ப்புன்னுதான் சொல்வேன். ஏன்னா எனக்கு அப்ப 13 வயசுதான். அவருக்கும் எனக்குமான இடைவெளி 9 ஆண்டுகள்...’’ நினைவுகளை அசை போட்டபடி
மெலிதாய் புன்னகைக்கிறார் பிரேமா செழியன்.
‘‘சிவகங்கை அன்னம் பதிப்பக உரிமையாளர் கவிஞர் மீராவின் மகன் கதிரும், செழியனும் நல்ல நண்பர்கள். கதிர் அண்ணனின் தங்கை கண்மணி என் வகுப்புத் தோழி. கண்மணியோடு போகும் போது செழியனை பார்க்கும் வாய்ப்பு சிலநேரம் அமைந்தது.ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் குடும்பமாக மதுரைக்கு மாறினோம். மதுரையில் கல்லூரி முடித்து, கம்ப்யூட்டரும் முடித்து வேலைக்கு போக ஆரம்பித்தேன். செழியன் சிவகங்கையில் ‘சலனம்’ என்கிற பெயரில் ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ நடத்தியவாறே, ஃபிலிம்களை கழுவி பிரின்ட் போட மதுரை வரும்போது, என் கஸின் சிஸ்டரை சந்திப்பார். அப்போது என் வீட்டுக்கும் வந்து என் அப்பாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டுதான் செல்வார். இத்தனை வருடத்திலும் அவர் நாகரிகமான நல்ல நண்பராவே எனது குடும்பத்தோடு பழகினார்.
ஒரு கட்டத்தில் எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்க, செழியனுக்கும் வீட்டில் பெண் தேடினார்கள். நெருக்கடியான அந்த நேரத்தில் செழியன் என் வீட்டுக்கு வருகிறார். என் அப்பா கவனிக்காத ஒரு சின்ன இடைவெளியில் என்னை நேராகப் பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தார். வார்த்தைகளே இல்லாத அந்த புரிதல்தான் எங்க வாழ்க்கையோட அஸ்திவாரமே...’’ நினைவுகளின் அசைவுகள் மெல்லிய கீற்றாக... சோகமாக...
பிரேமாவின் விழிகளில் வெளிப்படுகிறது.‘‘பிறகுதான் சினிமா ஆசையில் சென்னை கிளம்பினார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம் சாரிடம் உதவியாளரா சேர்கிறார். மொபைல் போன் இல்லாத காலம் என்பதால், ஒரு ரூபாய் காயின் போட்டு பேசுகிற டெலிபோன் பூத்துகளில்தான் எங்க காதல் தீவிரமாய் வளர்ந்தது. பிறகு இருவீட்டார் சம்மதத்தோடு எங்கள் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில், சினிமா வறுமையதான் எங்களுக்கு பரிசாய் தந்தது. ஒரு படப்பிடிப்புல கேமராமேன் பாதி யிலே ஷூட்டிங்க நிறுத்திவிட்டு கிளம்ப, பொறுப்பு ‘செ’யிடம் வருது. (செழியனை ‘செ’ ன்னுதான் நான் கூப்புடுவேன்) கரடு முரடான மலைப்பாதை மீது ஏறி ஷூட்டிங் எடுக்கணும். ‘செ’ கிட்ட கால்ல போடுறதுக்கு ஒரு ஷூ கூட அப்ப இல்ல. சாதாரண செருப்பை வச்சுக்கிட்டு அவர் கஷ்டப்படுதைப் பார்த்த நடிகர் மாதவன் ஷூ ஒன்றை வாங்கி பரிசாய் கொடுக்க, வாங்க மறுத்திருக்கிறார் ‘செ’.
செழியனுக்கு தன்னோட திறமையை வியாபாரமாக்கத் தெரியலைங்கிறதவிட, அதை அவர் ஒருபோதும் விரும்பல என்பதுதான் உண்மை. வணிக சினிமாவுக்காக தன்னோட படைப்புத் திறனை சமரசம் செஞ்சுக்க அவர் மனசு ஒத்துக்கல. அதுக்காக அவரு குடும்பத்தை கைவிடல.கையில பணம் இல்லாதப்போ எனக்கு தெரியாமலே வெளிய போயி கடைகளுக்கு பெயர் பலகைகள் எழுதிக் கொடுத்து அதுல கிடைக்கிற சின்ன தொகையை கொண்டு வந்துதான் என்னிடம் கொடுப்பாரு. வறுமையில உழைக்க அவர் தயங்கல. ஆனா, கலையை விற்க தயங்கினாரு.
ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு என்னையும் அவர் அழைத்துச் செல்ல, ஆசையா நான் கேட்ட ஒரு புத்தகத்தை வாங்கித்தர முடியாதபடி அவரின் நிதி நிலை இருந்தது. எனக்கோ ஆற்றாமையில் கோபம் வர, தனியாகவே வீடு திரும்பினேன். வீடு திரும்பி செழியன் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாத தீர்க்கமான பார்வையோட என்னைப் பார்த்து, “இதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்க. அத்தான் சம்பாதிச்சு ஒருநாள் இந்த புக் ஸ்டாலையே உனக்கு விலைக்கு வாங்கி தருவேன்னு” சொன்னாரு என்கிற பிரேமாவின் இதழ்களில் அந்த நாளின் நினைவுகள் மெல்லிய புன்னகையாய் இழையோடுகிறது.
‘‘சினிமாவில ஒரு வழக்கம் உண்டு. அதாவது, ஒரு படத்துல வேலை செய்யும் போதே அடுத்த படத்தோட தயாரிப்பாளர் கிட்ட அடுத்தடுத்த படங்களுக்கு அட்வான்ஸ் வாங்குறது. படப்பிடிப்பு முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் பல நாட்களில் கையில அவரிடம் காசு இருக்காது. ‘இன்னைக்கும் சம்பளம் தரலம்மா’ என்பதே பதிலாக இருக்கும். ராத்திரியில சாப்பாட்டுக்கு வழி இல்லாம வீட்ல இருக்கற பொட்டுக்கடலையை சாப்பிட்டுட்டு இருவரும் பேசிக்கிட்டே தூங்கிடுவோம்.
இயக்குநர்கள் கிட்ட வாய்ப்புக்காக நெருங்கி பழகுறது. கொஞ்சம் நாடகத்தனமா நடந்துக்கிறது. இதெல்லாம் சினிமா தொழிலோட எழுதப்படாத விதிகள். இதையெல்லாம் ‘செ’ ஒரு நாளும் செய்ததே இல்ல. ஆனாலும், திறமைய மட்டுமே வச்சு நடைமுறை வாழ்க்கையோட சூழ்ச்சிகள் தெரியாம பிழைக்க முடியாதுதான?
ஒருமுறை நான் செ யிடம் “உங்களுக்கு திறமைய காசாக்க தெரியல. இளிச்சவாயர்னு வெளிய சொல்றாங்கன்னு” சொல்ல, அவர் கோபப்படவே இல்ல. ரொம்ப அமைதியா “அப்படியா... வாங்க! இங்க வாங்க!! என்ன நம்பி கல்யாணம் செஞ்ச நீங்களும் இளிச்சவாயர்தான். வாங்க இளிச்சவாயர். நாம ரெண்டு பேரும் கை கொடுத்துப்போம்” என சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. அந்த மனப்பக்குவம்தான் ‘செ’ யின் பலமே.ஒரு படைப்பு முழுமையா முடிச்ச பிறகுதான் அவர் அடுத்த படைப்பு பத்தியே சிந்திப்பார். முன்கூட்டியே அட்வான்ஸ் வாங்கிட்டா அது தன் கலையோட சுதந்திரத்தை பறிச்சிருமோங்கிற பயம் அவருக்குள் எப்போதும் இருக்கும்.
அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, குண்டு பல்பு வெளிச்சத்துலதான், உலக சினிமா தொடரையே எழுதுனாரு.உலக சினிமா படங்களைப் பார்க்க சிடி வாங்கவும், வெளிய போறதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவும் கூட அந்த நாட்களில்அவரிடம் பணம் இருக்காது.அடுத்தடுத்து வாடகை வீடுகள் மாறிய அனுபவங்கள்... வீட்டு உரிமையாளர்கள் கொடுத்த நெருக்கடின்னு... எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்தான் ‘டூலெட்’ படமே. அது ஏதோ கற்பனையா உருவாக்கப்பட்ட காட்சிகள் கிடையாது. அவர் தன் சொந்த வலிகளை... அவமானங்களை... கலையா மாற்றிய வித்தைதான் டூலெட்.
வாடகை கொடுக்க முடியாத ஒரு நடுத்தரவர்க்க மனிதனோட மூச்சுத் திணறல, தனது கேமரா கோணங்களில் கடத்தினார். ஒரு பார்வையாளனா கேமரா அந்த வீட்டுக்குள் மிக நெருக்கமாய் நகரும். ரியலிஸ்டிக்கா இருக்கும். அதனாலதான் படம் கொல்கத்தா, டெல்லி, கோவா, ஹைதராபாத் எனப் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றது.
‘செ’க்கு இசை பற்றி தெரியும். ‘த மியூசிக் ஸ்கூல்னு’ புத்தகம் எழுதியிருக்காரு. அழகா கீபோர்டு வாசிப்பாரு. நல்லா பாடுவாரு. படம் வரைவாரு. பத்திரிகைகளுக்கு படைப்புகள் எழுதியிருக்காரு. அவரின் கையெழுத்து பார்க்க நேர்த்தியா இருக்கும். திட்டமிட்டு எல்லாத்தையும் நேர்த்தியா செய்வாரு. இன்னைக்கு ‘செ’ இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். என்றாலும் அவர் விட்டுச் சென்ற மரபு உயிர்ப்போடுதான் இருக்கு.
ஆம்! செழியன் எழுதி முழுமையாகத் தயார் நிலையில் வைத்துச்சென்ற, 23 பவுண்டட் ஸ்கிரிப்ட்டுகளை நான் தற்போது கையில் எடுத்திருக்கிறேன். ஒரு திரைப்படத்தை எந்த லொக்கேஷன்ல எடுக்கணும்? எந்தெந்த கேமரா ஆங்கிள் பயன்படுத்தணும்? லைட்டிங் எப்படி இருக்கணும்? கேரக்டர்களோட ஆடை என்ன என்பதுவரை, ஷூட்டிங் போகத் தேவையான அத்துனை தகவல்களும் உள்ளடக்கிய வரைபடமே பவுண்டட் ஸ்க்ரிப்ட். இதுவொரு ப்ளூ பிரின்ட் மாதிரி.
இந்த 23 படங்களையும் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீ ராம் மற்றும் எடிட்டர் ஸ்ரீ கர் பிரசாத் வழிகாட்டுதலோடு மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பை தற்போது நான் என் கைகளில் எடுத்திருக்கிறேன். அவருக்காக நான் உயிரையே கொடுப்பேன். ஆனா, இப்ப அவருக்காகவேதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.செழியன் சினிமா வகுப்புகள் எடுத்த அலுவலகத்தில், அவர் எழுதிய புத்தகங்களை படிப்பது, அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி கிடப்பதுமா என் வாழ்க்கை நகருது’’ என முடித்த பிரேமா செழியனிடம் இருந்து செழியனின் நினைவுகளோடு விடைபெற்றோம். ஒரு கலைஞனோட உண்மையான வெற்றி என்பது அவனோட வாழ்நாள்ல பணமாகவோ புகழாகவோ கிடைக்கிறதை விட அவன் மறைவிற்குப் பின் அவனோட கலையை இந்த உலகம் கொண்டாடும்போதே முழுமை அடைகிறது.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்


