Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இசை

நன்றி குங்குமம் தோழி

தமிழ் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் புத்தகம் எழுதத் துவங்கியவர் அதோடு நில்லாமல் இசை, கலை, களப்பணி என்று தன்னை இளம் வயதில் இருந்தே ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் சாய் சஞ்சனா. அமெரிக்கா வாழ் தமிழரான இவர் அயல் நாட்டிலும் நம் தமிழ் கலாச்சாரத்திற்கு கவுரவம் தேடித் தந்துள்ளார். சென்னைக்கு வந்திருந்தவரை சந்தித்த போது...

‘‘சென்னையில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே படிப்பதில் ஆர்வம் அதிகம். பள்ளியில் நடத்தப்படும் ஆங்கில வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங் போட்டியில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் நான் முதலிடம் பிடித்திருக்கிறேன். போட்டியில் 5,000 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் நான் முதல் இடம் பிடித்திருந்தேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

அதன் பிறகு என்னுடைய பத்தாவது வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றோம். அங்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தேன். என்னுடைய 13வது வயதில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ஓவியப் போட்டியிலும், குறும்பட போட்டியிலும் ‘நியுஜெர்சி மாநில விருது’ பெற்றேன். உயர்நிலைப் பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்கியதற்காக ‘ஏ.பி.ஸ்காலர்ஸ் விருது’, ‘நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப் விருது’, ‘பைரட்ஸ் ஆப் டெக்னாலஜி விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றேன். 2021ம் ஆண்டு ‘நேஷனல் ஹானர்ஸ் சொஸைட்டி’ எனப்படும் சிறந்த மாணவர்களுக்கான குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2022ல் 5000 மாணவர்களில் ‘யுனிவர்சிட்டி ஆப் மேரிலாந்தில்’ மிகச்சிறந்த பத்து மாணவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்’’ என்றவர் கல்லூரியில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சிறந்த மாணவர் விருதினை பெற்றுள்ளார்.

‘‘என் தமிழ்ப் பயணம் பலதரப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கியது. சென்னையில் பள்ளியில் படிக்கும் போது தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், இலக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கலந்து கொள்வேன். அமெரிக்காவுக்கு சென்ற பின் ‘பிளைன்ஸ்போரா தமிழ் கிளப்’ என்னும் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து தமிழை கற்றேன். திருக்குறள் முற்றோதல்கள், பேச்சுப்போட்டிகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் எனத் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தினச் சிறப்புப் பட்டிமன்றத்திலும், மங்கையர் சோலை நிகழ்ச்சியிலும் பங்கேற்று பேசியது மறக்க முடியாத அனுபவம்.

இதுவரை மூன்று தமிழ்ப் புத்தகங்களை எழுதியிருக்கிறேன். நான் எழுதிய புத்தகங்களுக்காக இளம் எழுத்தாளர் விருதினை பெற்றிருக்கிறேன். என்னுடைய நூல்கள் பெரும்பாலும் எழுத்தும் ஓவியமும் ஒருங்கிணைந்து, சிறுவர்கள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை ஆர்வமுடன் அறிந்து கொள்ளும்படி இருக்கும். இந்த இரண்டு புத்தகங்களும் வர்ஜீனியாவில் உள்ள லூடன் கவுண்டி பொது நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. என்னுடைய மூன்றாவது புத்தகமான ‘கொரோனாவை வென்ற க்ரோஷே’ அமெரிக்கப் பெண்கள் சாரணியர் இயக்கத்தில் பெற்ற ‘கோல்ட் அவார்ட்’ என்ற மிக உயர்ந்த விருதுக்காக ஆற்றிய சமூகப் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னல் கலையை மையமாகக் கொண்டு இந்த நூலை உருவாக்கினேன். இதனைத் தொடர்ந்து என் அம்மாவுடன் இணைந்து ஹைக்கூ கவிதைகளை எழுதியது என் எழுத்துப் பயணத்தின் அடுத்த மைல் கல்’’ என்றவர், தன்னுடைய நான்காவது வயதில் இருந்தே இசையினை பயின்று வருகிறார்.

‘‘எனது இசைப்பயணம் என்னுடைய 4வது வயதிலிருந்து தொடங்கியது. கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் அமெரிக்காவில் மேற்கத்திய பாடல்களுக்கான பயிற்சியும் பெற்றேன். மத்திய ஜெர்சி இசைக்குழுவில் பாட என்னுடைய 17 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தமிழ் இசையில் 2019ல் நியுஜெர்சி தமிழ்ப் பேரவை நடத்திய ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் முதலிடம் பெற்று பேரவைப் பாடகர் விருதைப் பெற்றேன்.

பிரின்ஸ்டன் பெண்கள் இசைக்குழு, மேரிலாந்து பல்கலைக்கழக இசைக்குழு மற்றும் ஜ்வாலா என்ற நியுஜெர்சி இசைக்குழுவில் பாடகராக பல நிகழ்ச்சிகளில் பாடிய அனுபவமும் எனக்குண்டு. என்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அமைப்புகளுக்கு நிதி திரட்டி நன்கொடையாக வழங்கியுள்ளேன். என் பார்வையில், இசை ஒரு கலை வடிவமாக மட்டுமல்ல, சமூகங்களை இணைக்கும் சக்தியாக உணர்கிறேன்’’ என்றவர், சதுரங்க போட்டியிலும் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றது மட்டுமில்லாமல் பெண்களுக்கான இயக்கத்தில் முழுமையாக செயல்பட்டு வருகிறார்.

‘‘அமெரிக்கப் பெண் சாரணியர் இயக்கத்தில் என் பயணம் 2015ல் தொடங்கியது. ஜஸ்ட் ப்ரீத் என்ற திட்டத்தின் மூலம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை கற்றுத்தந்தேன். பாஸிடிவ் வீவ்ஸ், திட்டம் மூலம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பின்னல் கலையை பயிற்றுவித்து 75 தொப்பிகள் மற்றும் 25 சால்வைகள் செய்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கியதற்காக கோல்ட் அவார்ட் என்ற பெண் சாரணியர் இயக்கத்தின் மிக உயர்ந்த விருதைப் பெற்றேன்’’ என்று கூறும் சாய் சஞ்சனா, மதர் இந்தியா க்ரோஷே குயின்ஸ் அமைப்பு சார்பாக கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் செய்து 2019ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

தொகுப்பு: விஜயா கண்ணன்