Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஹோம்மேட் பிசினஸில் கலக்கும் அம்மா பிள்ளை!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் வீட்டிலிருந்து செய்யக்கூடிய சுய தொழில்கள் பல இருந்தாலும் பல காலமாக இல்லத்தரசிகள் முதல் வயதானவர்கள் வரை செய்யக்கூடிய எளிதான தொழில் வற்றல் வியாபாரம். இதற்கு பெரிய அளவில் முதலீடும் தேவைப்படாது.குறைந்த முதலீட்டிலேயே நல்ல லாபகரமான தொழிலாக அன்றும் இன்றும் என்றும் பெண்களுக்கு கைக்கொடுத்து வருகிறது. தன் கணவர் இறப்பிற்கு பிறகு இந்தத் தொழில்தான் தன் வாழ்வாதாரத்தை உயர்த்தியதாக கூறுகிறார் ஜெயலட்சுமி.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த இவர் ‘கறுக்கு முறுக்கு’ என்ற பிராண்டில் வற்றல் வியாபாரம் செய்கிறார். ஏழு வகையான வற்றல்களை வீட்டிலேயே செய்து ஆன்லைன் விற்பனையிலும் அசத்துகிறார். ‘அம்மு அட்ராசிடிஸ்’ என்ற பெயரில் தன் மகனுடன் சேர்ந்து அட்ராசிட்டி செய்யும் யூ டியூப் அம்மாவாக டிஜிட்டல் உலகிலும் வலம் வருகிறார்.

‘‘மதுரை அலங்காநல்லூர்தான் சொந்த ஊர். எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். குடும்ப கஷ்டம், பிழைப்புக்காக மெட்ராஸுக்கு வந்துட்டோம். என் கணவர் சோடா பிசினஸ் செய்து வந்தார். அவர் கடைகளுக்கு போய் ஆர்டர் எடுப்பார். நான் பாட்டில்களை கழுவி சுத்தப்படுத்தி வைப்பேன். அவர் வந்ததும் பாட்டிலில் சோடாவை நிரப்பி கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்து செல்வார். அவருக்கு உதவியாக நானும் இருந்தேன். எனக்கு வெளியில போய் பழக்கம் இல்லை என்பதால் வீட்டில் இருந்தபடியே அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்து வந்தேன். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த தருணத்தில் என் கணவர் இறந்துவிட்டார். அந்த சமயத்தில் என் இரண்டு மகன்களும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே நாளில் எங்களோட வாழ்க்கை தலைகீழானது’’ என்று தன் வாழ்க்கையின் மிக கடினமான நாட்களை பகிர்கிறார் ஜெயலட்சுமி.

‘‘என் கணவர் இருந்த காலக்கட்டத்தில் வீட்டில் சாப்பாடு மிச்சமாகிடுச்சுனா அதில் வற்றல் போடுவேன். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கொடுப்பேன். திடீரென கணவர் இறந்த போது எனக்கு என்ன செய்வதுன்னே தெரியல. வெளி உலகம் தெரியாது, ரொம்பவே கஷ்டப்பட்டேன். பசங்களும் படிப்பை பார்க்கணும். எங்களின் அன்றாட செலவுகளை சமாளிக்கணும். அப்பதான் எனக்கு வற்றல் பிசினஸ் செய்யலாம்னு எண்ணம் தேன்றியது. அரிசி மற்றும் ஜவ்வரிசி வற்றல் போட்டு பக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன கடைகளுக்கு கொடுத்தேன். கொஞ்சம் காசு கிடைச்சது’’ என்றவரை தொடர்ந்தார் இளைய மகன் சக்திவேல்.

‘‘அம்மா காலையில 3 மணிக்கு எழுந்து, வற்றலுக்கு தேவையான கலவையை செய்து மாடியில காயப் போட்டுவிட்டு பக்கத்துல ஒரு குழந்தையை பார்க்கிற வேலைக்கும் போவாங்க. அண்ணன் வேலைக்கு போகும் வரை ரொம்பவே கஷ்டப்பட்டோம். வற்றல் வித்த காசுலதான் நானும் அண்ணனும் படிச்சோம். அம்மாகிட்ட பிடிச்சதே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சிரிச்சுக்கிட்டே எல்லாத்தையும் கடந்து போவாங்க. ரொம்ப ஹீயூமர் சென்ஸ் உள்ளவங்க. சும்மா விளையாட்டாகத்தான் நாங்க வீட்ல பண்ற குறும்புகளை வீடியோவாக போட்டேன். எல்லோரும் அம்மாவின் பேச்சையும் குறும்பையும் ரசிச்சாங்க. அம்மாக்கு ஃபேன்ஸ் அதிகமானாங்க’’ என்றவர் அம்மாவின் பிசினஸை ஆன்லைன் மூலமாக டெவலப் செய்துள்ளார்.

‘‘நாங்க குடும்பமாக எப்போதும் ஜாலியா இருப்போம். எனக்கு நடிக்கலாம் வராது. வீட்டில் யதார்த்தமா இருந்ததை பையன் வீடியோ எடுப்பார். அப்படித்தான் எங்களின் வத்தல் பிசினஸையும் ஆன்லைனில் செய்யலாம்னு சொன்னார். எனக்கு தெரிஞ்ச வற்றல் எல்லாம் போட செய்து அதை வீடியோவாக பதிவும் செய்தோம். அதன் மூலம் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. இப்ப நான் மட்டுமில்லை என் இளைய மகனும் என்னிடம் பயிற்சி பெற்று அவரும் சூப்பரா வற்றல் போடுவார். ஆரம்பத்தில் அரிசி மற்றும் ஜவ்வரிசி வற்றல் மட்டும்தான் போட்டு வந்தோம். இப்போது முருங்கை, புதினா, பிரண்டை, கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை வற்றல் எல்லாம் போடுகிறோம். எங்களின் பிராண்டிற்கு ‘கறுக்கு முறுக்கு’ன்னு பெயரும் வைத்தோம்’’ என்றார் ஜெயலட்சுமி.

சக்திவேல் பேசும் போது, ‘‘நான் ஐடியில வேலை பார்க்கிறேன்.அம்மா 2015ல் இருந்து வற்றல் போடுறாங்க. பல பெண்கள் பலவித பிசினஸ் செய்றாங்க. ஆனா, தற்போது யாரும் வற்றல் சார்ந்த பிசினஸில் அதிகமா ஈடுபடுவதில்லை. இப்போது நானும் அண்ணனும் வேலை பார்க்கிறோம். நாங்க கஷ்டப்பட்ட போது இந்த பிசினஸ் தான் எங்களுக்கு கைக் கொடுத்தது. அதனால் இதை மேலும் டெவலப் செய்ய இன்ஸ்டாவில் அம்மா செய்றதை வீடியோவாக பதிவு செய்தேன். ஆர்டர் செய்தவங்க, வெரைட்டி கேட்டாங்க. அப்படித்தான் கேரட், பீட்ரூட் போன்றவற்றை அறிமுகப் படுத்தினோம்.

பொதுவா ஒரு பிசினஸ் செய்தால், அதை ஒரு பிராண்டாக மாற்றினால்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். அதனால்தான் எங்களின் வற்றலை பிரியமாக மாற்ற பல வெரைட்டியினை அறிமுகம் செய்தோம். மேலும், இதில் பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை நிற மிகமை பயன்படுத்துவதில்லை. தரத்தில் நாங்க காம்பிரமைஸ் செய்வதில்லை. எங்க வற்றல்களுக்கு ஒரு வருடம் கேரண்டி இருக்கு. மழைக்காலங்களில் வற்றல் போட முடியாது. அதனால் தேவையானதை முன் கூட்டியே செய்து வைத்திடுவோம்’’ என்ற சக்திவேலைத் தொடர்ந்த ஜெயலட்சுமி வற்றல் செய்முறைகளை விளக்கினார்.

‘‘தினமும் காலை எழுந்ததும் வற்றல் காய்ச்சி காயப்போட்டு விடுவேன். அதனால் முந்தைய இரவே தேவையானதை ரெடி செய்திடுவேன். காரத்துக்கு பச்சை மிளகாய், சீரகம் எல்லாம் சேர்த்து இறக்கும் போது எலுமிச்சை சாறு பிழிந்து விடுவேன். கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை எல்லாம் சாறெடுத்து அரிசி, ஜவ்வரிசி கலந்த மாவு பாதி வெந்த பிறகு இந்த சாற்றை கலந்து வேக வைத்திடுவேன். ஒரு நாளைக்கு 5 கிலோ மாவு தயாரிப்பேன்.

ஜவ்வரிசி அளவும் அதிகமாகிவிட்டால் மாவு நீர்த்துவிடும். சாயங்காலம் ஆறு மணிக்குள் எடுத்து விடுவேன். வெயில் காலத்துலயே கொஞ்சம் அதிகமாக செய்து வைத்து விடுவேன். குழந்தைகளும் சாப்பிடுகிறார்கள் என்பதால் தரத்தில் கவனமாக இருக்கிறோம். நல்ல பொருளை இந்தக் கால பசங்க சாப்பிடுறது இல்ல. பாக்கெட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகள் கூட எங்க வற்றல்களை விரும்பி சாப்பிடுவதாக என் வாடிக்கையாளர்கள் சொல்வதைக் கேட்கும் போது மனசுக்கு திருப்தியாக இருக்கும்.

வற்றல்களை காற்று புகாத டப்பாக்களில் வைத்தால் நமத்துப் போகாது. ஒரு வருஷம் ஆனாலும் கெடாது. நல்ல ஆரோக்கியமான பொருளாக கொடுக்கிறோம்னு சந்தோஷமாக செய்றேன். உழைச்சது போதும்னு பசங்க சொன்னாலும் கஷ்ட காலத்துல கைக்கொடுத்த வற்றலை விட முடியவில்லை. எல்லோர் வாழ்க்கையிலும் கடினமான சூழல் ஒன்று கண்டிப்பாக வரும். அதை எதிர்நோக்கி கடந்தா நமக்கான எதிர்காலம் நல்லாவே இருக்கும்’’ என்கிறார் புன்னகை மாறாமல் ஜெயலட்சுமி.

தொகுப்பு: கலைச்செல்வி