Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மாதவிடாய் சுகாதாரமும் உளவியலும்

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு வருடமும் மே 28ம் தேதி உலக மாதவிடாய் சுகாதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த நாள் என்பது வெறும் சானிட்டரி நாப்கின்கள் பற்றியோ அல்லது உடல் நலம் சார்ந்து மட்டுமோ பேசும் நாள் அல்ல. இது பெண்களின் மனநலம், அவர்களை சுற்றியிருக்கும் சமூக உளவியல் மற்றும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு ஆதிக்கச் சுவரை உடைக்கும் மாபெரும் தலைமுறை மாற்றத்தின் கூட்டுப் பிரதிபலிப்பாகும். மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் நிகழும் நான்கு நாட்கள் குருதிப்போக்கு மட்டுமே அல்ல, அதற்குப் பின்னால் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்களின் மிகப்பெரிய போர்க்களமே அவளது மூளைக்குள் நடக்கிறது. இந்தச் சுழற்சி காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் கோபம், அதீத சோர்வு, மனப்பதற்றம் மற்றும் காரணமில்லாத அழுகை போன்ற ‘மூட் ஸ்விங்ஸ்’ மாற்றங்கள் அனைத்தும் அவளது கட்டுப்பாட்டில் இல்லாத உடலியல் மாற்றங்களால் ஏற்படும் தற்காலிக உளவியல் பாதிப்பாகும். இதை ஒரு நோய் என்றோ அல்லது குணம் கெட்டவள் என்றோ பார்க்காமல், அவளது உடலின் இயல்பான சுழற்சி என்று அவளை சுற்றியிருக்கும் குடும்பமும் சமுதாயமும் புரிந்து கொள்வதே இந்த நாளின் முதல் மற்றும் மிக முக்கியமான சுகாதாரமாகும்.

​ஆனால், நம் சமுதாயத்தின் கடந்த காலப் பக்கங்களை திருப்பிப் பார்த்தால் அது முற்றிலும் இருள் நிறைந்தது. ஒரு பெண் தன் முதல் மாதவிடாயை எட்டும்போது, அவளுக்குக் கல்வியையும் தைரியத்தையும் தந்திருக்க வேண்டிய சமூகம், அவளை ஒரு தனி அறையில் பூட்டி வைத்து ‘தீட்டு’ என்றும் ‘தீண்டத்தகாதவள்’ என்றும் வார்த்தைகளால் அவளது மழலை மனதிற்குள் வாழ்நாள் முழுமைக்குமான பயத்தையும் ஒருவித குற்ற உணர்ச்சியையும் விதைத்தது. விஞ்ஞானம் விண்வெளியை தொட்ட பிறகும் கூட, இன்றும் சில மனிதர்கள் மாதவிடாயை ஒரு அசுத்தமாக பார்க்கும் பிற்போக்குத்தனமான உளவியலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அறியாமை இருளை அந்தக் காலத்திலேயே அடித்து நொறுக்கியவர்கள் நம் புரட்சித் தலைவர்கள்.

‘‘மாதவிடாய் என்பது இயற்கையான உடலியல் நிகழ்வு. அதைத் தீட்டு என்று சொல்லிப் பெண்களை முடக்குவது அறியாமை” என்று தந்தை பெரியார் அன்றே முழங்கினார். அதேபோல், ‘‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று பாடிய மகாகவி பாரதியார், பெண்ணடிமைத்தனத்தின் முதற்புள்ளியாக இருக்கும் இது போன்ற உடலியல் ரீதியான ஒடுக்குமுறைகளை தன் பேனா முனையால் அறுத்தெறிந்தார். அன்றைய காலத்திலேயே இத்தகைய மாமேதைகள் பெண்களின் உடல் சார்ந்த உரிமைகளையும், அவர்களுக்குத் தேவைப்படும் கண்ணியமான பார்வையையும் மிக உன்னதமாக உலகிற்கு உரக்கச் சொன்னார்கள்.

​அந்தப் புரட்சியின் நீட்சியை இன்று நாம் வாழும் நவீன தலைமுறையினரிடம் பார்க்க முடிகிறது என்பதுதான் இந்த நாளின் ஆகச்சிறந்த நம்பிக்கை ஒளியாகும். அன்றைய தலைமுறை மாதவிடாயை பற்றிப் பேசவே கூச்சப்பட்ட நிலையில், இன்றைய புதிய தலைமுறை இளைஞர்கள் மாதவிடாயை ஒரு இயற்கை நிகழ்வாக, மிக இயல்பாக புரிந்துகொள்கிறார்கள். தன் அக்கா, தங்கை, தோழி அல்லது காதலியின் மாதவிடாய் சுகாதாரத்தின் மீது அவர்கள் அதீத அக்கறை கொள்கிறார்கள். வெறும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவோடு நின்றுவிடாமல், பெண்களுக்கான பிரத்யேக சுகாதாரப் பொருட்களை மிகத் தரமான முறையில் தயாரிக்கும் அதிநவீன நிறுவனங்களை ஆண்களே முன்னின்று தொடங்கி நடத்தும் அளவிற்கு அவர்களின் தொலைநோக்குப் பார்வை இன்று வியக்கத்தக்க வகையில் மாறியிருக்கிறது.

கடைகளில் சானிட்டரி நாப்கின்களை பேப்பரில் சுற்றிக் கறுப்பு கவரில் ஒளித்து வாங்கிய காலமெல்லாம் மலை ஏறிப்போய், இன்று ஒரு ஆண் தன் வீட்டுப் பெண்ணிற்காகத் தயக்கமின்றி நாப்கின்களை கைகளில் ஏந்தி வரும் சமத்துவ உளவியல் வளர்ச்சியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். மாதவிடாய் என்பது ஒளித்து வைக்க வேண்டிய தீட்டல்ல... அது மனிதகுலத்தின் தொடர்ச்சிக்கான ஜீவநதி என்பதை உணர்ந்து, பெண்களின் மனமாற்றங்களை ஏளனம் செய்யாமல் பக்குவத்தோடு அரவணைப்பதே நாம் அடைந்திருக்கும் உண்மையான சமூக உளவியல் வெற்றியாகும்.

தொகுப்பு: அர்ஷதா