Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழிலாளர்களை பாதுகாக்க வைரத்தை அடகு வைத்த மெஹர்பாய் டாடா!

நன்றி குங்குமம் தோழி

டாடா என்ற பெயருக்கு இந்தியாவில் அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு பிரபலம். ஆனால், அந்தப் பெயருக்குப் பின்னால் வாழ்ந்த பெண்களின் கதைகள் சம அளவில் பேசப்பட்டதில்லை. அவற்றில், மெஹர்பாய் டாடாவின் வாழ்க்கை தனித்துவமானது. அவர் ஒரு தொழிலதிபரின் மனைவி மட்டுமல்ல... அவர் ஒரு விளையாட்டு வீராங்கனை, பெண்களின் உரிமைக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதி, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த, மனிதநேயத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்ட பெண்.

1879-ம் ஆண்டு பிறந்த மெஹர்பாய், அந்தக் காலத்திலேயே முற்போக்கான சிந்தனைகள் நிறைந்த சூழலில் வளர்ந்தவர். பெண்களுக்கு கல்வி என்பது அவசியமல்ல என்று சமூகம் கருதிய காலத்தில், அவருக்குக் கிடைத்த கல்வியும் வளர்ப்பும் உலகைப் பரந்த பார்வையுடன் பார்க்கும் வாய்ப்பை அளித்தன. 1898-ம் ஆண்டு அவர் தோரப்ஜி டாடாவைத் திருமணம் செய்து கொண்டார். தோரப்ஜி, இந்தியத் தொழில்துறையின் முன்னோடியான ஜம்செட்ஜி டாடாவின் மூத்த மகன். திருமணத்தின் மூலம் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் குடும்பத்திற்குள் வந்தபோதிலும், மெஹர்பாய் தன்னை அந்தக் குடும்பத்தின் மருமகள் என்ற அடையாளத்துக்குள் மட்டும் சுருக்கிக்கொள்ளவில்லை.

சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்கிற தனி அடையாளத்தை கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவது அரிதாக இருந்திக்கலாம். குறிப்பாக உயர்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவெளியில் விளையாடுவது இன்னும் அரிதானது. ஆனால், மெஹர்பாய்க்கு டென்னிஸ் மீது இருந்த ஆர்வம் சாதாரண பொழுதுபோக்காக மட்டுமின்றி, அது அவருடைய திறமையாக வளர்ந்தது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் போட்டிகளில் பங்கேற்று, அறுபதுக்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவரது கணவர் தோரப்ஜியும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்ததால், விளையாட்டு அவர்களை ஒன்றிணைத்ததோடு, மெஹர்பாய்க்கு சர்வதேச அரங்கிற்குச் செல்லும் வாய்ப்பையும் உருவாக்கியது.

1924-ம் ஆண்டு பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற வீரர்களில் மெஹர்பாயும் ஒருவர். டென்னிஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், சர்வதேச விளையாட்டு அரங்கில் கால் பதித்த முன்னோடி இந்தியப் பெண்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்தார். எல்லாவற்றையும் விட நம் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு சுவாரஸ்ய தகவலாக அமைந்தது, அவர் சேலை அணிந்தபடி டென்னிஸ் களத்தில் நின்றவர் என்பதுதான்.

இன்றைய உலகில் அது நமக்கு இயல்பாகத் தோன்றினாலும், 1924-ல் அது முற்றிலும் வேறுபட்ட காட்சி. மேற்கத்திய உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கில், தன்னுடைய பாரம்பரிய அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் ஒரு இந்தியப் பெண் போட்டியிட்டுள்ளார். அவர் அணிந்திருந்த சேலை, வெறும் உடை மட்டுமில்லாமல், அதுவே அவருடைய அடையாளமாக திகழ்ந்துள்ளது.

மெஹர்பாயின் வாழ்க்கையை விளையாட்டில் மட்டும் நிறுத்திவிட முடியாது. பெண்களின் நிலை குறித்த சமூகக் கேள்விகள் அவரை ஆழமாகப் பாதித்தன. பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும், அவர்கள் சமூகத்திலும் அரசியலிலும் பங்கேற்க வேண்டும், குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணங்களுடன் அவர் செயல்பட்டார். குழந்தைத் திருமணத்திற்கு எதிரான இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். பெண்களின் கல்வி மற்றும் வாக்குரிமைக்காகவும் குரல் கொடுத்தார். இந்தியப் பெண்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டுமென்றால், அவர்களுக்கு முதலில் கல்வியும் தன்னம்பிக்கையும் கிடைக்க வேண்டும் என்பதை அவர் நம்பினார்.

இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெண்களின் உரிமைகள் தொடர்பான அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். இவ்வளவு செய்துகொண்டிருந்தபோதும், அவர் தனது சமூக அந்தஸ்தை வெறும் தனிப்பட்ட வசதிக்காகப் பயன்படுத்தவில்லை. தன்னிடம் இருந்த செல்வமும் செல்வாக்கும் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அந்த எண்ணத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்திய சம்பவங்களில் ஒன்று டாடா குடும்பத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற ஜூப்ளி டைமண்ட் கதை.சுமார் 245 காரட் எடையுடைய அந்தப் பிரமாண்ட வைரம் டாடா குடும்பத்தின் முக்கியமான நகைகளில் ஒன்றாக இருந்தது. மெஹர்பாய் அதை அணிந்திருந்த புகைப்படங்களும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

ஒரு கட்டத்தில், டாடா நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. குறிப்பாக டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் பெரும் சவால்களைச் சந்தித்த காலம் அது. அந்த நேரத்தில், நிறுவனத்தையும் அதனுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக தோரப்ஜி டாடா குடும்பத்தின் விலையுயர்ந்த நகைகளை அடமானம் வைத்தார். அதில் ஜூப்ளி டைமண்டும் இருந்தது. இந்தச் சம்பவம் பல ஆண்டுகளாக “மெஹர்பாய் தனது வைரத்தை அடமானம் வைத்து டாடா நிறுவனத்தைக் காப்பாற்றினார்” என்ற உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லப்பட்டு வருகிறது. மெஹர்பாயின் செல்வத்தை அனுபவிக்கக்கூடிய நிலையில் இருந்தாலும், செல்வத்துடன் பொறுப்பும் இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொண்டிருந்தார். தனது 51வது வயதில், லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட மெஹர்பாய், 1931-ம் ஆண்டு உயிரிழந்தார். மெஹர்பாயின் நினைவாக உருவாக்கப்பட்ட Lady Tata Memorial Trust, லுகேமியா உள்ளிட்ட ரத்தம் தொடர்பான நோய்கள் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆதரவளித்தது. இந்த அறக்கட்டளை டாடா குழுமத்தின் தலைமையகமான புகழ்பெற்ற பாம்பே ஹவுஸ் கட்டிடத்தில் இப்போதும் இயங்கி வருகிறது.

தொகுப்பு: ஆர்.ஆர்