நன்றி குங்குமம் தோழி
மருதாணியை அடிக்கடி கைகளில் இடுவதால் மன அழுத்தம் குறைவதுடன், உடல் சூட்டைக் குறைத்து, பெண்களுக்கு வருகின்ற மாதவிடாய் பிரச்னைகளுக்கு மூலிகை மருந்தாகவும் மாறும் என, திருமண வைபவங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கும் ‘மெஹந்தி ஆர்ட்’ குறித்த விளக்கத்துடன் பேசத் தொடங்கியவர், மெஹந்தி ஆர்டிஸ்ட் யாஸ்மின்.
‘‘உடல் சூட்டை தணிப்பதற்காகவும், பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் ஏற்படும் வெடிப்புகள், காயங்களை ஆற்றுவதற்காகவும் ஆண்கள் மருதாணி இலைகளை முதலில் அரைத்து பூச தொடங்கினார்கள். அதன்பிறகே அழகியல் சார்ந்த ஒன்றாக அது மாறி பெண்களை தொற்றிக்கொண்டது’’ என்றவர், ‘‘இளைஞர்கள் உடல் முழுவதும் போட்டுக்கொள்ளும் டாட்டூஸ் வகை இதிலிருந்து தோன்றிய ஒன்றே’’ என்கிறார்.
‘‘திருமணம் என்றில்லை, குடும்ப நிகழ்ச்சிகள், பெண் பருவம் அடைதல், வளைகாப்பு, பள்ளி, கல்லூரி விழா என எல்லாவற்றிற்கும் இன்று பெண்கள் மெஹந்தி இட்டுக் கொள்கிறார்கள். மருதாணி
வடக்கத்திய கலாச்சாரத்தில் மெஹந்தியாய் மாறி வருமானம் ஈட்டும் தொழிலாய் இன்று மாறி நிற்கிறது.
வடஇந்திய பெண்கள் கணவனை இழந்த 16ம் நாள் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் மெஹந்தி இட்டு, வளையல் போட்டுக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு இருக்கிறது. இதில் பிளாக் மெஹந்தியும் உண்டு. விரைவில் இது அழியாது. ஆனால், நம் இந்தியர்களின் ஸ்கின் டோனிற்கு சாதாரண மெஹந்தியே போதுமானது.
மெஹந்தியில் மணப்பெண் மெஹந்தி, அரபிக் மெஹந்தி, ராஜஸ்தானி மெஹந்தி, பாகிஸ்தானி மெஹந்தி, ஷர்தோஷி மெஹந்தி என பல வகைகள் உள்ளது.
அரபிக் மெஹந்தியில் திக் அவுட் லைன் இருக்கும். சிங்கிள் லைனாக அவர்களின் மெஹந்தி வேலைப்பாடு இருக்கும். அரேபியன்ஸ் அடர்த்தியான டார்க் வண்ண மெஹந்தி களையே அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஒரு விரலில் மட்டும் ஒன் லைனாக வரும் ராஜஸ்தானி மெஹந்தியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் இருக்கும். அவர்களின் பழக்க வழக்கங்களை மெஹந்தி வேலைப்பாட்டிலே பெரும்பாலும் வடிவங்களாகக் கொண்டுவந்து விடுவார்கள்.
ராஜஸ்தானி பெண்கள் வளையலை தோள்பட்டையிலிருந்து போடுவதால் மெஹந்தி டிசைனையும் தோள்பட்டையிலிருந்தே கொண்டு வருவார்கள். பாகிஸ்தானி மெஹந்தி என்பது அரபிக் மற்றும் ராஜஸ்தானி மெஹந்தியின் கலவையாகவே இருக்கும்.
மனிதர்கள் என்ன உடுத்துகிறார்களோ அதற்கேற்ப கலையும் தன்னை வளைத்துக் கொள்கிறது’’ என்றவர், ‘‘இதில் ஷர்தோஷி என்பது திருமண நாள் அன்று ஒரு ஐந்து மணி நேரத்திற்கு அப்படியே இருப்பது மாதிரி, மணமகளின் உடைக்கு ஏற்ற வண்ணத்தில், அதே கலரில் ஜிகு ஜிகுவென கிளிட்டரில் அவுட் லைன் கொடுத்துப் போடுவது. இதில் மிரர் வேலைப்பாடுகளும் இணையும்’’ என்கிறார்.
‘‘மெஹந்தியில் ராஜாராணி உருவங்கள், ராணியை பல்லக்கில் தூக்கிச் செல்கிற காட்சிகள், மணமக்கள் உருவங்கள் என ஒரு காவியத்தையே தீட்டி விடலாம்’’ என்றவர், மெஹந்தியும் ஒரு கலை வடிவமே எனப் புன்னகைக்கிறார்.
‘‘மணமகளின் இரண்டு கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி இட குறைந்தது 5 மணி நேரம் முதல் அதிகபட்சம் எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கைகளை ஆட்டாமல், நுணுக்கமா வேலைப்பாடுகளை செய்வது, வரைபவருக்கும் வரைந்து கொள்பவருக்கும் கஷ்டம்தான். வரைவதற்கு எடுக்கும் நேரத்தை பொறுத்தே கட்டணமும் நிர்ணயம் செய்யப்படுகிறது
கோன் பிடித்து மெஹந்தி டிசைன் வரைவது, ஒரு பேனாவைப் பிடித்து எழுதுகிற மாதிரி சுலபமில்லை. இதற்கு நிறைய பயிற்சி வேண்டும். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் நேரடியாக கைகளில் வரையாமல், பென்சிலில் சிறு சிறு டிசைன்களை வரைந்து, அதன் மேல் கோன் வைத்து வரையப் பழக வேண்டும்’’ என டிப்ஸ் கொடுத்த யாஸ்மின், ‘‘சித்திரமும் கை பழக்கம்’’ என சிரித்தவாரே முடித்தார்.
வெறும் காடுகளில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகை எந்த அளவுக்கு தன் பரிணாமத்தை வளர்த்துக் கொண்டு இன்று துணிகளோடும் ஆபரணங்களோடும் போட்டி போடும் அளவிற்கு ஒரு காஸ்மெடிக் ஆர்ட்டாய் வளர்ந்திருக்கிறது என்பதை நினைத்தால் பிரமிப்பாய்தான் இருக்கிறது.
தொழில்நுட்பம் இன்னும் அசுர வளர்ச்சி அடையும்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஸ்மார்ட் மெஹந்தி போன்று ஏதேனும் ஒன்று எதிர்காலத்தில் வரலாம்.
குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகை எந்த அளவுக்கு தன் பரிணாமத்தை வளர்த்துக் கொண்டு இன்று துணிகளோடும் ஆபரணங்களோடும் போட்டி போடும் அளவிற்கு ஒரு காஸ்மெடிக் ஆர்ட்டாய் வளர்ந்திருக்கிறது.
டிப்ஸ்...
*மருதாணி பவுடருடன், எலுமிச்சை அல்லது புளித் தண்ணீர், டீ டிக்காஷன் கலந்து தயார் செய்யலாம்.
*மருதாணி போடும் முன் உடல் சூட்டிற்காக கைகளில் நீலகிரி தைலம் தடவிக் கொள்ளலாம்.
*சுகர் சிரப்போடு எலுமிச்சை சாறு கலந்து டிசைன் மீது போட்டுக் கொண்டே வந்தால், டிசைன் உதிராமல் பிடித்துக் கொள்ளும்.
*மருதாணி டிசைனை நீக்கியதும், லவங்க புகை மீது நம் கைகளை காட்டினால் அடர் சிவப்பு வண்ணம் அழகாய் வரும்.
*மருதாணியை தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தல் தவறு.வேண்டுமானாலும் எடுக்கலாம்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்


