Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பிரதான பிரச்சனையை அணுக தற்காப்புக் கலை அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

கராத்தே, வில்வித்தை பயிற்சியாளர், தமிழ்நாடு கள வில்வித்தை விளையாட்டுச் சங்கத்தின் இணைச் செயலாளர், செங்கல்பட்டு கள வில்வித்தை சங்கத்தின் மாவட்டச் செயலாளர், ஜே.பி.எஸ் மகளிர் சுய பாதுகாப்பு அகாடமியின் இயக்குநர், அகில இந்திய டாட்சுகான் இஷின்ரியு கராத்தே-கோபுடோ சங்கத்தின் துணைத் தலைவர்... இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்தான் சென்னை ஆதம்பாக்கம், பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஜே.பி.எஸ். விளையாட்டு ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் வினோதா சிவபாலன்.

‘‘என் அப்பா காவல்துறையில் பணியாற்றினார். எனக்கு அந்தப் பணியை பார்க்கும் போது, அதிகமான வீரம் தெரியும். மக்களுக்காக நானும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் அல்லது வீரத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே உருவானது. அந்த அடித்தளம் இன்று ஒரு பயிற்சியாளராகவும், வீராங்கனையாகவும் என்னை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தேசிய சான்றளிக்கப்பட்ட லெவல்-3 பயிற்சியாளர், சர்வதேச சான்றளிக்கப்பட்ட லெவல்-1 பயிற்சியாளர், நடுவர்- ஜப்பானின் ஒகினாவின் இஷிரின்யு கராத்தேவில் 6-வது கருப்பு பட்டம் பெற்றுள்ளேன். இந்திய கராத்தே சங்கத்தில் 5-வது பட்டம் பெற்றுள்ளேன். ஜப்பானின் ஒகினாவா கோபுடோவில் 3-வது பட்டம் கருப்பு பெல்ட் பெற்றிருக்கிறேன்’’ என்றவர், மாணவர்களுக்கு வீர விளையாட்டு முறைகளை கற்றுத் தருகிறார்.

‘‘மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டு முறையினை அவர்களின் பயிற்சி, எதிர்பார்ப்பு, வழிகாட்டுதல், உடல் வலிமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாணவர்கள் சளி, காய்ச்சல் என்று அடிக்கடி விடுப்பு எடுப்பார்கள். மேலும், வளரும் பருவத்தில் குழந்தைகள் சில வேலைகளில் மிகச் சோர்வாக இருப்பார்கள். என்னிடம் இருக்கும் 10 முதல் 14 வயது மாணவர்களை போட்டி மனப்பான்மையோடு, தனித்தனி இலக்கு கொடுத்தல், பங்கேற்க செய்தல், அடிப்பட்டாலும் சரியாயிடும் அதுபோன்ற எண்ணத்தை மனதிற்குள் கொண்டு வரும் முறையை கையாள்கிறேன். கராத்தேவைப் பொறுத்தவரை மனம் என்ன சொல்லுதோ அதுதான் செய்யத் தூண்டும்.

இன்றைக்குப் பயிற்சிக்குப் போக வேண்டும் என்று நான் முடிவு செய்தால் மட்டுமே போவார்கள், கற்றுக் கொள்ளவும் செய்வார்கள். தொடர்ச்சியாக ஒரு பணியில் ஈடுபட ஒழுக்கம் அவசியம். ஒழுக்கம்தான் கராத்தேயின் முதல் பாடம். இன்றைக்கு ஒரு தொழில்நுட்ப முறையில் 50 முதல் 1000 வரை என்னால் ஆசிரியரை மதிப்பது, தனிப் பயிற்சி பெறுவது, புது தகவல்களை கற்றுக்கொள்வது என அனைத்தும் மாணவர்கள் கேட்டு புரிந்து கொண்டு ஒழுக்கம் சார்ந்த பயணத்தோடு தொடர்ந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய சாதனையாளராக வர முடியும்’’ என்றவர், குழந்தை பராமரிப்பினை தன் பயிற்சி முறையில் செயல்படுத்தி வருகிறார்.

‘‘உடலில் உள்ள தசைகள் வளரும் பருவம்தான் குழந்தைப் பருவம். நேற்று இருப்பது போல் இன்று இருக்காது. நடக்க முடியாமல் தவழும் குழந்தைகளின் பருவம் அழகானது. அந்த அழகானப் பருவத்தில் இருந்து வந்த குழந்தைகளை ஒன்றோடு ஒன்று மகிழ்ச்சியாக இருக்க ஊக்கப்படுத்த குழந்தை பராமரிப்பு முக்கிய அம்சமாகும். உதாரணமாக ஆங்கிவேசோ என்பவர் ஜப்பான் நேர்காணல் ஒன்றில், தான் இளமைப் பருவத்தில் வேகமாக இருந்ததாகவும், வயதான பிறகு மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருந்து அடுத்த பருவம் வந்தவுடன், உடனே சாதனை செய்திட முடியாது. முறையான பயிற்சி அவசியம். அதற்கேற்ப அவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும். அதற்கான ஊக்கம் அளிக்க வேண்டும். முறையான பயிற்சி வளர்ச்சிக்கேற்ப கொடுக்க வேண்டும்.

பெண்கள் எல்லா துறையிலும் கால் பதித்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆண்களுக்கான பயிற்சி, பெண்களுக்கான பயிற்சி என்று தனிப்பட்டு எதுவும் கிடையாது. இருவருக்குமே பொதுவான பயிற்சிதான். பெண்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் பயிற்சி பெறலாம். குறிப்பாக இரவு நேரத்தில் பணிபுரிதல், குழந்தைகளை பாதுகாத்தல், வெளியில் சென்று வரும் போது நகைகளை பாதுகாத்தல் போன்ற எண்ணற்ற தனிப்பட்ட பாதுகாப்புகளுக்கு இந்தப் பயிற்சி கைக்கொடுக்கிறது. எவ்வளவு மதிப்பான செயலாக இருந்தாலும், சண்டை போடுவதற்கு இரண்டு கையும் அவசியம் என்று என் ஆசிரியர் கூறுவார். வலது கையில் குழந்தையிருக்கும் போது, சண்டை போட நேர்ந்தால் இடது கையில்தான் போட வேண்டும். ஒரு பிரதான பிரச்னையை அணுக தற்காப்புக்கலை மிக அவசியம்’’ என்றவர், தெரசா விருது, கராத்தே கலை அரசி என எண்ணற்ற விருதுகள் மட்டுமில்லாமல் கராத்தே மற்றும் வில்வித்தையில் தேசிய அளவில் வெற்றிப் பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்