Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெண்களை கவர்ந்து வரும் மாஜோங் விளையாட்டு!

நன்றி குங்குமம் தோழி

விடுமுறை வந்தாலே இரவு நேரம் என்று பார்க்காமல் பலரின் வீட்டில் தாயக்கட்டை சுழலும் ஒலி கேட்கும். செல்போன், OTT இல்லாத காலக்கட்டம். வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து பரமபதம், ஆடு புலி ஆட்டம், திருடன் போலீஸ், புளியங்கொட்டை, சோழி என விளையாடுவார்கள். இன்று இந்த விளையாட்டுகள் கைக்கு அடக்கமான செல்போனிலேயே வந்துவிட்டது.

என்னதான் இந்த விளையாட்டுகள் செல்போனில் இருந்தாலும் ஒன்றாக கூடி சிரித்து விளையாடும் சுகமே தனிதான். இது போன்ற விளையாட்டு நம்மூரில் மட்டுமில்லை சீனா, ஜப்பான், கொரியா போன்ற இடங்களிலும் வேறுவிதமாக விளையாடப்படுகிறது. அதில் சீனாவின் மிகவும் பிரபலமான ‘மாஜோங்’ விளையாட்டு சென்னை மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டினை பெண்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டுமில்லாமல் அவர்கள் இணைந்து விளையாடவும் வழிவகுத்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஜார்னா சட்டநாதன்.

‘‘என்னுடைய பூர்வீகம் மும்பை. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாயிட்டேன். ஃபேஷன் துறையில் ஆலோசகராக இருக்கிறேன். ஜே.எஸ் என்ற பெயரில் ஃபேஷன் ஸ்டுடியோ ஒன்றையும் நிர்வகித்து வருகிறேன். நான் சென்னைக்கு வந்து 12 வருடமாகிறது. இங்குள்ள மக்கள் மும்பையை போல் சோஷியலைஸ் செய்வதில்லை. கணவரின் மனைவிகள் தோழிகளாகவும், குழந்தைகளின் பெற்றோர்கள் நண்பர்களாக மாறுவதும்தான் இயல்பாக உள்ளது.

மும்பையில் வேலை காரணமாக சந்திப்பவர்கள் கூட நல்ல நண்பர்களாக மாறுவார்கள். மேலும், பெண்கள் ஒன்றுகூடினால் வீட்டுப் பிரச்னைகளை பற்றிதான் பேசுகிறார்கள். அப்படி இல்லாமல் இவர்கள் கூடும் இடம் மகிழ்ச்சியை தரக்கூடிய நிகழ்வாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும், இன்றைய சூழலில் நாம் அனைவரும் செல்போனிற்கு அடிமையாகிவிட்டோம். சொல்லப்போனால் நாம் பல விஷயங்களை மனதில் பதிவு செய்வதில்லை. குறிப்பாக நம்முடைய உறவினர்களின் செல்போன் எண்கள் நம் நினைவில் இருப்பதில்லை’’ என்றவர், மாஜோங் விளையாட்டு குறித்து விவரித்தார்.

‘‘மாஜோங், புத்திசாலித்தனத்திற்கான விளையாட்டு. சீனர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு 20ம் நூற்றாண்டுகளில் மற்ற நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமடைய ஆரம்பித்தது. குறிப்பாக பெண்கள் மத்தியில். இந்த விளையாட்டிற்கும் சில விதிமுறைகள் உள்ளது. இதனை விளையாட நான்கு பேர் தேவை. சின்னச் சின்ன பாக்ஸ் போன்ற டைல்ஸ் கொண்டு விளையாடுவார்கள். மூங்கில், வட்டம், டிராகன், காற்று, பூக்கள் போன்ற டிசைன்கள் டைல்ஸ்களில் வரையப்பட்டிருக்கும். மொத்தம் 136 டைல்ஸ்கள். இதனை நான்கு நபர்களுக்கு என பிரிக்கப்படும். கிட்டத்தட்ட சீட்டுக்கட்டில் ரம்மி விளையாட்டு போலதான். அதில் நாம் எண்களை இணைப்போம். இதில் டைல்ஸினை பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொருவரும் ஒரே எண் மற்றும் டிசைனில் உள்ள மூன்று டைல்ஸ் (பங்), ஒரே எண் மற்றும் டிசைனில் உள்ள நான்கு டைல்ஸ்கள்(காங்), ஒரே ரகத்தில் வரிசையாக எண்கள் கொண்ட டைல்ஸ்கள் (சாவ்) அதாவது, மூங்கில் இனத்தில் 2,3,4 அல்லது பூக்களில் 5,6,7 என்று இணைக்க வேண்டும். இவை தவிர இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும் டைல்ஸ்களையும் இணைக்க வேண்டும். இணைப்பவர்களே வெற்றியாளர். ேமலும், எந்த டைல்ஸ் வெளியேறியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கான டைல்ஸ்களை இணைக்க முடியும். ஒவ்வொரு முறை விளையாடும் போதும் புது அனுபவம் கிடைக்கும்’’ என்றவருக்கு பெண்களுக்கான ஒரு விளையாட்டு குழு அமைக்கவே இதனை துவங்கியுள்ளார்.

‘‘நான் முதலில் என் தோழிகளுக்குதான் இந்த விளையாட்டை சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் மூலம் மற்றவர்களும் இதில் இணைய ஆரம்பித்தார்கள். அப்படித்தான் நான் இதை துவங்கினேன். இதுதான் என்னுடைய முதல் விளையாட்டு ஈவென்ட். 11 மேஜைகள் அமைத்து 44 பெண்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். பொதுவாக இந்த விளையாட்டில் 12 சுற்று இருக்கும். குறைந்தபட்சம் ஒரு விளையாட்டு முடிய மூன்று மணி நேரமாகும்.

ஒவ்வொரு மேஜையிலும் நான்கு பேர் விளையாடுவார்கள். நான்கு சுற்று முடித்த பிறகு நான் இவர்களை மாற்றி அமரச் செய்வேன். அப்போதுதான் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வார்கள். 35 வயதுள்ள பெண் 60 வயது முதியவருடன் சேர்ந்து விளையாடுவார். இப்போது பலரும் இதனை தொடர்ந்து நடத்த சொல்வதால், என்னுடைய வீட்டில் ஒரு சிறிய விளையாட்டு இடம் அமைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதன் மூலம் விளையாட்டு மட்டுமில்லாமல், அதனுடன் வேறு சில நிகழ்வுகளையும் இணைத்து செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறேன்.

மேலும், உறுப்பினர்களாக இணைபவர்கள் எப்போது வேண்டும் என்றாலும் தங்கள் நண்பர்களுடன் இங்கு விளையாட வசதி செய்கிறேன். இந்த விளையாட்டு குறித்து பயிற்சியும் அளிப்பதால். விளையாட்டை தெரிந்துகொண்டு விளையாடும் போது சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றவர், இந்த விளையாட்டினால் உள்ள பலன்களை குறிப்பிட்டார்.

‘‘புது நண்பர்கள் கிடைப்பார்கள். மூளை சார்ந்த விளையாட்டு என்பதால் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற பாதிப்பு ஏற்படுத்தாது. அறிவுசார் திறன்களை மேம்படுத்தும். இந்த விளையாட்டிற்கு வயது பாகுபாடு என்பது கிடையாது. முதலில் எனக்கும் இந்த விளையாட்டு விளையாட தெரியாது. நான் ஒருவரிடம் தான் இதை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நான் எனக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக விளையாட வேண்டும் என்று விரும்பினார்கள். வாட்ஸப் குழு அமைத்தோம். அடுத்த நிகழ்வில் 80 பேர்களை கொண்டு விளையாட்டினை அமைக்க இருக்கிறேன். மேலும், இதில் பல விளையாட்டு முறைகள் உள்ளன. அதனால் மும்பை, ஐதராபாத் போன்ற இடங்களில் உள்ள மற்ற மாஜோங் பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க இருக்கிறேன். ஆண்களையும் இணைக்க திட்டமிட்டிருக்கிறேன். ஸ்ட்ரெஸ் வாழ்க்கையில் இருந்து விடுபட இந்த விளையாட்டு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்’’ என்றார் ஜார்னா.

தொகுப்பு: ஷன்மதி