Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் பேருந்து உலா போகலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்...

மெரினாவில் வீடு கட்டப் போறேன்...

லைட் ஹவுஸில் ஏறி நிக்கப் போறேன்...

நான் மங்காத்தா ராணி போல வாரேன்...’

என்கிற பாடல் வரிகள் சொல்வது போல், உள்ளே ஏறி அமர்ந்தால் சென்னையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிடும் விதமாக வருகை தந்துள்ளது ‘சென்னை உலா பேருந்து’. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த பேருந்து சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், பல்லவன் இல்லம் போன்ற சென்னையின் முக்கியமான வழித்தடங்களில் செல்கிறது. பயணம் செய்யும்போது விண்டேஜ் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வை கொடுக்கிறது உலா பேருந்து.

பேருந்தின் வெளிப்புறமும் உட்புற அமைப்பும் 80களில் நடைமுறையில் இருந்த பேருந்தின் சாயலை பிரதியெடுத்தது போல் அமைக்கப்பட்டுள்ளது. 80கள் மற்றும் 90களில் பயணம் செய்த மக்களுக்கு தங்கள் நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது சென்னை உலா பேருந்து. தற்போது சுவாரஸ்யம் என்னவென்றால், 2k கிட்ஸ்களே பெரும்பாலும் இதன் பிரியர்களாக உள்ளனர்.

விண்டேஜ் லுக்கில் தயாராகி வந்து பயணம் செய்வதுடன், அதே லுக்கில் பேருந்துடன் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து மகிழ்கின்றனர். இரண்டு மணிநேரம் பயணம் செய்து 16 வழித்தடங்களையும் கடந்து வரும் உலா பேருந்து மீண்டும் சென்னை சென்ட்ரலில் வந்து முடிகிறது. இந்தப் பயணத்திற்காக வழங்கப்படும் பயணச்சீட்டும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“ஒரே நாளில் சென்னையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு சென்னை உலா பேருந்து சுவாரஸ்யமானதாக இருக்கும். ரூ.50ல் ஒரே நாளில் 16 இடங்களை சுற்றி பார்த்துவிடலாம். இது ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் பேருந்து என்பதால் விருப்பமான சுற்றுலாத் தலத்தில் இறங்கிக் கொள்ளலாம். சுற்றி பார்த்துவிட்டு அடுத்து வரும் சென்னை உலா பேருந்தில் ஏறிக்கொள்ளலாம். ஒருமுறை எடுக்கும் டிக்கெட் ஒருநாள் முழுக்க செல்லுபடியாகும். சென்ட்ரலில் இருந்து தற்போது 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பேருந்து சேவை உள்ளது. தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில், மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப மற்ற நகரங்களிலும் உலா பேருந்துகள் கொண்டுவரப்படலாம்” போன்ற சில குறிப்பிட்ட தகவல்கள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது. சென்னை மக்களையும் சென்னைக்கு வருகை தரும் மக்களையும் ஈர்த்து வரும் ‘சென்னை உலா பேருந்தில்’ பயணம் செய்து மகிழுங்கள்.

தொகுப்பு: ஆர்.ஆர்