நன்றி குங்குமம் தோழி
பெண்களுக்கு தோட்ட பராமரிப்பு மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருக்கும். சிலர் காய்கறி தோட்டம் வைக்க விரும்புவாங்க. சிலருக்கு அழகான பூச்செடிகள் வைக்க பிடிக்கும். காலை எழுந்தவுடன் பச்சை பசேலென்று நம் கண்களுக்கு விருந்து படைக்கும் இந்த செடிகள் நமக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை தரும். அப்படிப்பட்ட பல்வேறு செடிகளை விற்பனை செய்து வருகிறார் நாமக்கல்லை சேர்ந்த ஆனந்தி. ‘ஸ்ரீ சக்தி முருகன் நர்சரி கார்டன்’ என்ற பெயரில் இயங்கி வரும் இவர், தன் கணவரின் பரம்பரை நர்சரி தொழிலினை திறம்பட நடத்தி வருகிறார்.
‘‘என்னுடைய சொந்த ஊர் நாமக்கல். என்னுடைய 15 வயதில் அப்பா தவறிட்டார். அம்மாதான் என்னையும் தம்பியையும் வளர்த்தாங்க. 19 வயதில் திருமணமானது. என் கணவர் லாரி ஓட்டுனர். அவங்களின் பரம்பரை தொழில் நர்சரியில் செடிகளை பராமரித்து விற்பனை செய்வது. திருமணத்திற்குப் பிறகு இதனை முழுமையாக நான் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். நர்சரி பராமரிப்பு, விற்பனை, செடிகளை வாங்குவது என அனைத்தும் என் மாமனார், மாமியாரிடம் கற்றுக்கொண்டேன். நான் இந்தத் தொழிலுக்கு வந்து 12 வருடமாகிறது. இன்று வரை அதை மிகவும் ஆசையுடன்தான் செய்து வருகிறேன்’’ என்றவர், வீட்டில் மற்றும் தோட்டமாக வளர்க்கக்கூடிய அனைத்து செடிகளையும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘ஒவ்வொரு செடிக்கும் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலை இருக்கும். அதற்கு ஏற்பதான் அந்தப் பகுதியில் செடிகள் வளரும். நம்மூர் தட்பவெப்ப நிலைக்கு வளரக்கூடிய ரோஸ் செடிகளை நான் விற்பனை செய்கிறேன். 7 Days Rose, பன்னீர் ரோஸ், காஷ்மீர் ரோஸ் என பல வகை ேராஜா செடிகள் உள்ளன. இந்த ரோஜாக்களின் இதழ்கள் எளிதில் உதிர்ந்து போகாது. அதேபோல் குண்டுமல்லி, ஜாதிமல்லி, பச்சை மல்லி, கலர் காட்டான் அடுக்குமல்லி, பவளமல்லி என மல்லி வகையிலும்... பாரிஜாதம், செண்பகம், மனோரஞ்சிதம், பன்னீர் பூ என மற்ற வகைப் பூக்களும் உள்ளன. பூக்கள் மட்டுமில்லாமல் பலவித மரக்கன்றுகளையும் நாங்க விற்பனை செய்கிறோம்.
மகிழம்பூ, டெர்மலியா மரம், பாதாம் மரம், நாகலிங்க மரம், அத்தி மரம்... இவை தவிர கொய்யா, சப்போட்டா, திராட்சை, எலுமிச்சை, மாதுளை, நாவல், மாம்பழம், பலாப்பழம் என பலவகை மரக்கன்றுகளும் உள்ளன. பலாப்பழங்களில் பல வகை இருப்பதால் பண்ருட்டி போன்ற இடங்களில் இருந்தும் மரக்கன்றுகளை வாங்கி விற்பனை செய்கிறோம். இவை தவிர சீத்தாப்பழம், பேரிக்காய், பப்பாளி, பேரீச்சம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ரம்பூட்டான், டிராகன் போன்ற பழ வகை கன்றுகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பழ மரக்கன்றுகளை வாங்கி செல்ல வசதியாக இருக்கும். துளசி, குறிஞ்சான், தொட்டாச்சிணுங்கி, திருநீற்றுப்பச்சை, வெற்றிலை, சிறிய நங்கை, பெரிய நங்கை, ஆடாதொடா, கொசு விரட்டி, யூகலிப்டஸ் போன்ற பல்வேறு மூலிகைச் செடிகளும் விற்பனை செய்கிறோம்’’ என்றவர், செடியின் பலன்கள் மட்டுமில்லாமல் அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும் விவரித்தார்.
‘‘ஒவ்வொரு செடி வாங்கும் போதும் அதன் அடர்த்தி மற்றும் அதிக கிளைகள் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். செடிகளின் வேர் முழுதும் மண்ணுக்குள் இருக்கும்படிதான் தொட்டிக்குள் வைக்க வேண்டும். மேலும், செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவது மட்டுமில்லாமல் சாணம் அல்லது மண்புழு உரம் கண்டிப்பாக போட வேண்டும். புதிய செடி பதியம் வைத்து ஒரு மாதம் கழித்து ரோஸ் மிக்ஸ் உரம் போட்டால் செடி நல்ல செழிப்பாக வளரும்.
இதனை ரோஜா செடிக்கு மட்டுமில்லாமல் அனைத்து செடிகளுக்கும் பயன்படுத்தலாம். அதே போல் தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டு நாளைக்கு ஒருமுறை ஊற்றலாம். சில செடிகளுக்கு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். தினமும் அவசியமில்லை.மேலும், வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு முழு வழிகாட்டுதலும் வழங்குகிறோம். எந்த செடி எந்த இடத்தில் வைக்க வேண்டும், எவ்வளவு வெயில் வேண்டும், எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லித் தருகிறோம். பூச்சித் தொல்லை, இலை உதிர்வு, செடி வளர்ச்சிக் குறைவு போன்ற பிரச்னைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது பற்றியும் கற்றுக் கொடுக்கிறோம். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் செடிகளை நீண்ட காலம் பராமரிக்க முடியும்.
ஒவ்வொரு செடி மற்றும் பழங்களுக்கு ஒரு தன்மை இருக்கும். பழ வகைகளில் கொய்யா உடலுக்கு நல்ல ஜீரண சக்தியை தரும். மாதுளை ரத்தத்தை அதிகரிக்கும். நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். எலுமிச்சை உடலை சுத்தப்படுத்தும், மாம்பழம் உடலுக்கு சக்தி தரும். பூ வகைகளில் மல்லி மன அமைதிக்கு உதவும், செண்பகம் மற்றும் மனோரஞ்சிதம் வாசனை மன அழுத்தத்தை குறைக்கும். பன்னீர் பூ மற்றும் ரோஸ் வகைகள் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. பாரிஜாதம் மற்றும் அரளிப் பூக்கள் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வாஸ்து செடிகளான ZZ plant, Banke plant, Areca palms வகைகள் காற்று மாசுபாடு ஏற்படாமல் பாதுகாக்கும்.
மூங்கில் செடிகள், கள்ளிச்செடிகள், சக்குலன்ஸ் போன்றவை பாசிட்டிவ் வைப்ரேஷன்களை கொடுக்கும். எங்களின் நர்சரியில் செடிகள் மட்டுமில்லாமல், மண் கலவை, உரங்கள், குடுவைகள், கோகோபீட் அனைத்தும் கிடைக்கும். செடி வாங்கும் போது அதனை வைக்க பானைகள் மற்றும் உரங்களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றவர், நர்சரியில் செடிகளை எவ்வாறு வாங்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
‘‘நர்சரியில் செடி வாங்கும் போது அதன் வயது, வேர் பிடிப்பு மற்றும் ஆரோக்கிய நிலையை பார்த்து வாங்க வேண்டும். நல்ல வேர் பிடித்த செடிகள்தான் நன்றாக வளர்ச்சி பெறும். அதனால் செடி வாங்கும் போது அதன் மண் பிடிப்பு மற்றும் இலை நிறத்தை வைத்து தேர்வு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் காலநிலை, வெயில் மற்றும் தண்ணீர் தேவைகள் மாறுபடும் என்பதால் அதனைப் பற்றிய சரியான தகவலை தெரிந்து கொண்டு பராமரித்தால் செடிகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வளரும். எங்களின் நர்சரியில் பயன்படுத்தப்படும் உரங்கள் பெரும்பாலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை. சாணக்குப்பை உரம், மண்புழு உரம், கம்போஸ்ட் உரங்கள் மண் வளத்தை அதிகரித்து, வேர் வளர்ச்சியை தூண்டி செடிகள் ஆரோக்கியமாக வளர உதவும். இந்த உரங்களை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம்.
ஒரு செடியை நட்ட பிறகு சுமார் 20 முதல் 30 நாட்கள் கழித்து உரம் போட ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு மாதத்திற்கு ஒருமுறை அல்லது செடியின் வளர்ச்சியை பொறுத்து உரம் போடலாம். சரியான நேரத்தில் உரம் போடுவதால் செடிகள் நன்றாக பூத்து, கனி தரும். பூச்செடிகளை பெங்களூரிலும், பழ வகைகளை ஆந்திராவிலும், தென்னை மரங்களை அரசம்பட்டி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்து வாங்குகிறோம். புதிய வகை செடிகள் வந்தால் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்போம். இப்பொழுது ஊர் எங்கிலும் கேன்சர் பரவி வருவதால் முள் சீத்தா செடியினை பலரும் விரும்புகிறார்கள்.
இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு சிறிய முயற்சியாக நாங்கள் இந்த நர்சரியை நடத்தி வருகிறோம்.எதிர்காலத்தில் ஆன்லைன் மூலம் செடிகள் விற்பனை செய்வது, வீடியோ வழியாக செடி பராமரிப்பு கற்றுக்கொடுப்பது போன்ற புதிய முயற்சிகளையும் செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
இதன் மூலம் இன்னும் பலரிடம் நம் நர்சரியை கொண்டு செல்ல முடியும். இந்தத் தொழில் எனக்கு வருமானம் மட்டும் இல்லை, மனநிறைவும் தருகிறது. எங்க நர்சரியில் செடியை வாங்கி அது அவர்களின் வீட்டில் பூத்துக்குலுங்கும் போது, நம்முடைய மனசுக்கு கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. இந்தத் தொழிலை மேலும் வளர்த்து, அதிகமான மக்களிடம் பசுமையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பமும் கனவும்’’ என்றார் ஆனந்தி.
தொகுப்பு: திலகவதி



