Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘நோ’ (No) சொல்லப் பழகுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

​‘‘உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாமா?” என்று யாராவது கேட்கும் போதே, நமக்குள்ளே ஒரு சின்ன பதற்றம் தொற்றிக்கொள்ளும். மனதிற்குள் ‘இப்போது இதற்கு நேரமில்லை’ அல்லது ‘நம்மால் இது முடியாது’ என்று மிகத்தெளிவாகத் தெரிந்தாலும், நம் உதடுகள் நமக்கே துரோகம் செய்து ‘‘கண்டிப்பா பண்ணித்தரேன்!” என்று சொல்லிவிடுகின்றன.

காலையில் சமையல் அறையில் தொடங்கும் இந்த ‘சரி’ (Yes), அலுவலகத்தில் கூடுதல் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்வது, உறவினர்களின் நியாயமற்ற எதிர்பார்ப்புகளுக்கு வளைந்து கொடுப்பது என இரவு தூங்கப் போகும் வரை நீள்கிறது. எல்லாவற்றிற்கும் ‘சரி’ என்று சொல்லிவிட்டு, படுக்கையில் படுக்கும் போது ஏற்படும் அந்த மனச்சோர்வும், எரிச்சலும், அழுத்தமும் விவரிக்க முடியாதவை.

சைக்காலஜி உலகில் இதற்கு ‘பீப்பிள் ப்ளீசிங்’ (People Pleasing) என்று பெயர். அதாவது, நம் சொந்த விருப்பங்களையும், எல்லைகளையும் தியாகம் செய்தாவது மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு மனநிலை. மத்தவங்க மனசு வலிக்கக் கூடாது என்று, நம் சொந்த மனநலத்திற்கு நாம் வைக்கும் கொள்ளி என்பதை நாம் உணர்வதே இல்லை. ‘நோ’ (No) என்று சொல்வது பல நேரங்களில் ஏதோ ஒரு பெரிய பாவம் போலவும், சுயநலத்தின் உச்சக்கட்டம் போலவும் இங்கே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உளவியல் ரீதியாகப் பார்த்தால், சரியான இடத்தில் ‘நோ’ சொல் லாமல் இருப்பதுதான் நம் மன அமைதியை முழுமையாக அழிக்கும் ஆகச்சிறந்த ஆயுதம்.

​ஏன் நம்மால் அவ்வளவு எளிதாக ‘இல்லை’ என்று சொல்ல முடிவதில்லை என்பதற்குப் பின்னால் ஆழமான சைக்காலஜிக்கல் காரணங்கள் இருக்கின்றன. நாம் வளர்க்கப்பட்ட விதம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளிடம், ‘‘அடக்கமா இருக்கணும், சொல்றதைக் கேட்கணும், மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்கணும்” என்று போதிக்கப்படுகிறது. தன் தேவைகளை தள்ளிவைத்துவிட்டு மற்றவர்களுக்காக ஓடி ஓடி உழைக்கிறாளோ, அவள்தான் ‘நல்ல பெண்’, ‘நல்ல மருமகள்’, ‘நல்ல தாய்’ என்ற பிம்பம் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஒரு விஷயத்திற்கு ‘முடியாது’ என்று சொல்லும் போது, நமக்குள் குற்ற உணர்வு மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம் தானாகவே வந்துவிடுகிறது.

‘நோ’ சொன்னால் தப்பா நினைப்பாங்களோ? மரியாதை குறைஞ்சிடுமோ? விட்டு விலகிடுவாங்களோ? என்ற பயம்தான் நம்மை அடிமையாக்குகிறது. உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோவின் ‘தேவைகளின் படிநிலை’ (Maslow’s Hierarchy of Needs) கோட்பாட்டின்படி, மனிதர்களுக்கு மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், ஒரு சமூகக் குழுவில் அங்கமாக இருக்க வேண்டும் என்ற ஆழமான தேவை இருக்கிறது. இந்தத் தேவையை தவறாக புரிந்துகொள்ளும்போது, மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகவே நம்மை நாமே அழித்துக்கொள்ளத் துணிகிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், எல்லோரையும் எப்போதும் திருப்திப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியம்.

​உளவியல் ரீதியாக, எல்லா சூழ்நிலைகளிலும் (Yes) சொல்லும் நபர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான பாதிப்புகள் மிக ஆபத்தானவை. தொடர்ந்து நம் எல்லைகளை மற்றவர்கள் மீற அனுமதிக்கும் போது, நமக்குள் ஒருவித ரகசிய வன்மம் உருவாகும். அது அந்த நபர் அல்லது ஒட்டுமொத்த சூழ்நிலையின் மீது எரிச்சலாக வெடிக்கும். நாளாக நாளாக, ‘‘எல்லோரும் என்னை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க” என்ற எண்ணம் தோன்றி, நம்முடைய சுயமரியாதை மற்றும் சுயமதிப்பு பாதாளத்திற்குச் சென்றுவிடும். இது காலப்போக்கில் கடுமையான மனச்சோர்வு, பதற்ற நோயாக மாறக்கூடும். அதுமட்டுமன்றி, உடலும் மனமும் அளவுக்கு அதிகமாக உழைத்து, ஓடாய் தேய்ந்து போகும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

எதற்கெடுத்தாலும் ‘சரி’ சொல்பவர்களின் வார்த்தைக்கு காலப்போக்கில் மதிப்பும் குறைந்துவிடும். ‘‘அவ என்ன சொன்னாலும் செய்வா” என்ற ஒரு அலட்சியப் போக்கு மற்றவர்களிடம் வந்துவிடும். உங்கள் நேரத்தையும் உழைப்பையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதலில் அதற்கு ஒரு உளவியல் எல்லையை நீங்கள் வகுக்க வேண்டும். ஒரு நல்வாழ்வு வாழ, உங்கள் ஆற்றல் எங்கே செலவிடப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

குற்ற உணர்ச்சி இல்லாமல், உறவுகளை பாதிக்காமல் ‘நோ’ சொல்வது எப்படி என்று பார்த்தால் சைக்காலஜியில் இதற்கென சில எளிய வழிகள் இருக்கின்றன. முதற்படியாக, யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கும் போது உடனே ‘சரி’ என்று சொல்லாமல், யோசிச்சு சொல்வதாக என்று கொஞ்சம் நேரம் வாங்குங்கள். இந்த இடைவெளி, அந்த உதவி உங்களால் செய்யக்கூடியதுதானா, அதற்கு உங்களிடம் நேரம் இருக்கிறதா என்பதைப் பகுப்பாய்வு செய்ய உதவும். இரண்டாவதாக, ‘நோ’ சொல்லும் போது தேவையில்லாத விளக்கம் அல்லது பொய் காரணங்கள் சொல்லாதீர்கள். ‘‘என்னால இப்போ செய்ய முடியாது, கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு” என்று சுருக்கமாகவும், தெளிவாகவும், கனிவாகவும் சொல்லிப் பழகுங்கள்.

அடுத்தவர்களை காயப்படுத்தாமல், அதே சமயம் நம் கருத்தில் உறுதியாக இருப்பது. நீங்கள் பொய்க் காரணங்களைச் சொல்லும்போது, அடுத்தவர்கள் உங்களை வற்புறுத்த வாய்ப்புள்ளது.  ​இறுதியாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான உளவியல் உண்மை. ஒரு விஷயத்திற்கு ‘நோ’ சொல்லும்போது, அது அந்த மனிதருக்கு எதிரான வெறுப்பு அல்ல; உங்கள் மீதான அன்பு. நீங்கள் மற்றவர்களின் ஒரு கோரிக்கைக்கு ‘இல்லை’ என்று சொல்லும் போதுதான், உங்களுடைய சொந்த ஆரோக்கியத்திற்கு, உங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்திற்கு, உங்கள் கனவுகளுக்கு, உங்கள் மன அமைதிக்கு (Yes) சொல்கிறீர்கள்.

‘நோ’ என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல; அது உங்களைச் சுற்றி நீங்கள் அமைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வேலி. உங்களை மதிக்கிற, உங்கள் மீது உண்மையான அன்பு கொண்ட மனிதர்கள் நீங்கள் ‘நோ’ சொல்லும் பக்குவத்தை நிச்சயம் புரிந்துகொள்வார்கள். உங்களை வெறும் காரியத்திற்காக பயன்படுத்துபவர்கள் மட்டும்தான் உங்கள் ‘நோ’வை ஏற்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் விலகுவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லதுதானே? எனவே தோழிகளே, அடுத்த முறை உங்களால் முடியாத ஒரு சூழல் வரும்போது, தைரியமாக, முகத்தில் ஒரு புன்னகையோடு, நெஞ்சார ‘நோ’ சொல்லப் பழகுங்கள். ஏனெனில், சுய பாதுகாப்பு என்பது சுயநலம் அல்ல; அது உங்கள் மனநலனின் அஸ்திவாரம்!

தொகுப்பு: அர்ஷதா