நன்றி குங்குமம் தோழி
நான் முதல்வன்
100 எலும்பு முறிவுகள்... ஆக்சிஜன் சிலிண்டர் மூலமே சுவாசம்... ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாரான அசாத்தியப் பெண்.வெற்றி பெற்ற சிலரது வாழ்க்கை மட்டுமே மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் உந்துசக்தியாகவும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் லட்சியத்தை நோக்கி தன் னம்பிக்கையுடன் செயலாற்றிய சிலரது முயற்சிகளும் வியந்து பாராட்டுவதற்கு உரியனதான்!
அப்படிப்பட்ட பெண்தான் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த லதீஷா அன்ஸாரி. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது இவரது குறிக்கோள். அதற்காக தேர்வும் எழுதினார். இதிலென்ன வியப்பு என்கிறீர்கள்தானே? இவருக்குப் பிறவியிலேயே ‘Osteogenesis Imperfecta’, எலும்பு தொடர்பான மிக அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை ‘Brittle bone’ நோய் என்றும் சொல்வார்கள். எலும்புகள் பலம் இன்றி, மிக எளிதில் நொறுங்கிப் போய்விடும். இதன் காரணமாக லதீஷாவுக்குப் பலமுறை எலும்புமுறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
அவரது உருவமும் மிகச் சிறியது. இவரின் மொத்த உயரமே இரண்டு அடிதான். எடை 14 கிலோ. இவரால் சுயமாக நிற்கவோ நடக்கவோ முடியாது. நடப்பது, உட்காருவது போன்றவற்றைச் செய்தாலுமே எலும்புகள் நொறுங்கும் அபாயம் இருந்தது. வெளியுலகில் நடமாடவும் பொதுப் போக்குவரத்துக்களை பயன்படுத்தவும் அவரால் இயலாது. தந்தை சிறியதொரு உணவகம் நடத்தி வருகிறார். லதீஷாவின் மருத்துவச் செலவுகளுக்காக மாதம் சுமார் 25,000 ரூபாய் வரை அவரது குடும்பத்தினர் செலவு செய்ய நேர்ந்தது.
லதீஷா எதிர்கொண்ட சவால்களை சமாளிக்க அவரின் பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவரது தந்தைதான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அவரைத் தோளில் சுமந்து செல்வார். லதீஷா படிப்பில் படு சுட்டி. ஓவியங்கள் அருமையாக வரைவார். இசையிலும் நாட்டம் உண்டு. கீ போர்டும் வாசிப்பார். எம்.காம். பட்டதாரியான இவர், எருமேலி கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் இவருக்கு ‘Pilmonary Hypertension’ என்ற வியாதியும் சேர்ந்து கொண்டது. சுவாசிப்பதில் சிக்கல். நுரையீரல்கள் பலவீனம் ஆயின. இயல்பாக வெளிக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கும் ஆற்றல் தடைபட்டது. சுவாசத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை. உடல்ரீதியாக இவ்வளவு தொல்லைகள் இருந்தபோதும் மனதளவில் மிக வலிமையான பெண்ணாகத் திகழ்ந்தார் லதீஷா. தான் ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலராக வேண்டும் என்ற தீராத வேட்கை அவருள் கனன்று கொண்டே இருந்தது. பயிற்சி மையம் ஒன்றிலும் சேர்ந்தார். ஆனால், நாள்தோறும் சுமார் ஆறு மணி நேரம் பேருந்துப் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதனால் அவரால் தினசரி வகுப்புகளுக்குச் செல்ல இயலவில்லை. வீட்டிலிருந்து தயார் செய்தார்.2019 ஆம் ஆண்டு, யூபிஎஸ்சி முதல் கட்டத் தேர்வுகளை இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் வெற்றிகரமாக எழுதினார்.
லதீஷா தம்முடைய 27 வது வயதில், 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி இறந்து போனார். அவர் இறந்தாலும் அவரது ‘வாழ்ந்தே தீருவேன் - வெற்றியே லட்சியம்’ என்ற கோட்பாடு மறையவில்லை. பலருக்கும் வழிகாட்டியாக லதீஷாவின் முன்னெடுப்புகள் உள்ளன.அவரது நிலை மோசமான போது தன் தந்தையிடம் தமது இறுதி விருப்பத்தை வெளியிட்டார்: “அப்பா! என் வாழ்நாளில் என்னால் நிற்கவே முடியவில்லை; என்னைத் தாங்கிப் பிடித்து நிற்க வையுங்கள்.”கண்ணீர் மல்க லதீஷாவின் உடலை அவரது தந்தை தாங்கி நிற்க வைத்தார். இரண்டு மணி நேரம் நின்றார் லதீஷா. பின்னர் உயிர்நீத்தார்.
லதீஷாவின் தந்தை அன்ஸாரி, “இந்தியாவில் அரிய நோய்களுக்கு என அரசாங்கம் சிறப்பு ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், மக்களுக்கும் அந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்துவது அவசியம்” என்கிறார்.லதீஷா என்ற பெயருக்கு, ‘மகிழ்ச்சி’ என்று அர்த்தம். அவருக்கு வலுவான கால்கள் இல்லை. ஆனால், உறுதியான மனம் இருந்தது. அவரது சுவாசம் கடினமானது. ஆனால், கனவு பிரகாசமானது.
தொகுப்பு: லதானந்த்


