நன்றி குங்குமம் தோழி
‘ஆடி மாசத்தில் அம்மியும் பறக்கும்’ என்ற சொல் உண்டு. காரணம், இந்த மாதம் காற்று பலமாக வீசும். அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சென்னை மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை கடற்கரையில் சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற்று வருகிறது. ராட்சத மீன், திமிங்கலம், ஜல்லிக்கட்டு மாடு என பல்வேறு வடிவங்களில், வண்ண நிறங்களில் ராட்சத காத்தாடிகள் விண்ணில் பறப்பதை பார்க்கலாம். ஐந்தாவது வருடமாக நடைபெறும் இந்த காத்தாடி திருவிழா இம்மாதம் 14 முதல் 16ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. வருடா வருடம் இதனை பெனடிக்ட் சாவியோ என்பவர் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து நிகழ்த்தி வருகிறார். இந்த வருடம் இதன் சிறப்பு குறித்து நம்முடன் பகிர்ந்தார்.
‘‘இந்த காத்தாடி திருவிழா நாம வீட்டு மொட்டை மாடியில் விடும் காகிதப் பட்டம் போல் கிடையாது. சர்வதேச அளவில் இருந்து பட்டம் விடும் கலைஞர்கள் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். சர்வதேச அளவில் உள்ள காத்தாடி கலைஞர்கள் மற்றும் நம்மூர் கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். கடந்த வருடம் 25 பேர் கலந்து கொண்டார்கள். இந்த வருடம் 30 பேர் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம் என ஐந்து நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் காத்தாடிகளை அமைப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளை காத்தாடிகளாக செய்து பறக்க விட்டோம். இந்த வருடம் சிறப்பு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை காத்தாடி. நாங்க ஸ்கைடர்ஸ் என்ற குழு அமைத்து அதன் மூலம் பல இடங்களில் நடைபெறும் காத்தாடி விழாவில் பங்கு பெற்றிருக்கிறோம். பொதுவா காத்தாடி விண்ணில் பறக்க காற்று வேண்டும். மேலும், இந்த காத்தாடி ரொம்ப கலைத்துவம் வாய்ந்தது. ராட்சத வடிவில் பார்க்கவே பிரமிப்பா இருக்கும். வெளிநாட்டில் நடைபெற்று வந்த இந்த விழாவினை நம்மூர் மக்களும் ரசிக்க வேண்டும் என்பதால், ஐந்து வருடம் முன்பு தமிழ்நாடு சுற்றுலா கழகத்துடன் இணைந்து செயல்படுத்த ஆரம்பித்தோம்’’ என்றவர், காத்தாடி குழு அமைத்தது குறித்து விவரித்தார்.
‘‘நாங்க ஏவியேஷன் துறையில் கடந்த 20 வருடமாக பல நிகழ்வுகளை நிகழ்த்தி வருகிறோம். காத்தாடி பறப்பதற்கான குழு அமைத்து, அதில் விரும்புபவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை சர்வதேச அளவில் பங்கு பெற வைக்கிறோம். காத்தாடி விடுவது ஒரு வித அனுபவம்தான். இது ஒரு கலை. அதற்கான விருப்பம் இருக்கணும். மேலும் காற்று வீசும் திசை குறித்து கணிக்க தெரியணும். இந்த நுட்பங்கள் தெரிந்திருந்தால் யார் வேண்டும் என்றாலும் காத்தாடி பறக்க விடலாம். இதை இன்ஃபிளேட்டபில் பட்டம்னு சொல்வாங்க. பாராஷூட்டிற்கு பயன்படுத்தும் பொருளைக் கொண்டுதான் இந்த காத்தாடியை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு காத்தாடியும் 15 முதல் 20 அடி இருக்கும். இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை 25 முதல் 30 அடியில் செய்திருக்கிறோம். இந்த ராட்சத காத்தாடிகளை ஷோகைட்ஸ் என்று சொல்வாங்க. இதை பறக்க வைக்க தனிப்பட்ட டெக்னிக் உள்ளது. நாங்க கிட்டத்தட்ட 40 நாடுகளுக்கு சென்றிருக்கிறோம். அதனால் நம்ம தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தினை மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த காத்தாடி மூலமாக எடுத்துச் சொல்ல விரும்பினோம்.
சென்னையில் மூன்று நாட்கள் நடக்க இருக்கும் இந்தத் திருவிழா மதியம் இரண்டு மணிக்கு துவங்கி சூரியன் அஸ்தமமாகும் நேரம் வரை நடைபெறும். அதன் பிறகு காற்று நன்றாக இருந்தால் இரவு நேரத்தில் LED லைட்டுகள் கொண்ட காத்தாடிகள் பறக்கும். நாம நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிப்பது போல் வெளிநாட்டுக் கலைஞர்களின் பெரிய திமிங்கலம் மற்றும் கார்ட்டூன் பொம்மைகள் போன்ற காத்தாடிகளை விண்ணில் பார்க்கலாம். சொல்லப்போனால் 200 காத்தாடிகளுக்கு மேல் இந்த வருடம் விண்ணில் பறக்கும் என்று நினைக்கிறோம்’’ என்றவர், வருடம் முழுதும் ஏதாவது ஒரு நாட்டில் காத்தாடி திருவிழா நடைபெறுவதாக தெரிவித்தார்.
‘‘சென்னையில் நாங்க ஆகஸ்ட் மாதம் பிளான் செய்திருப்பது போல ஒவ்வொரு நாட்டில் குறிப்பிட்ட மாதம் இதை நடத்துவார்கள். செப்டம்பரில் தைவானில் நடக்க இருக்கிறது. அதில் பங்கு பெற இருக்கிறோம். காத்தாடி திருவிழா நாம் வருடம் முழுக்க திட்டமிடலாம். ஆனால், நாம் திட்டமிடும் நேரத்தில் காற்று இருக்கணும். சில சமயம் காற்று இருக்காது. அந்த நேரத்தில் கொஞ்சம் தாமதமா ஆரம்பிக்க நேரிடும். ஒருமுறை மலேசியாவிற்கு நான்கு நாட்கள் போயிருந்தோம். அதில் இரண்டு நாள் காற்றே இல்லை. இரண்டு நாள்தான் பறக்க விட முடிந்தது’’ என்றவர், லாலா லேண்ட், இன்ஃபிளேட்டபில் தீம் பார்க்கினை வடிவமைத்துள்ளார்.
தொகுப்பு: ரிதி
