நன்றி குங்குமம் தோழி
*எல்லாவிதமான காய் பொரியலையும் தேங்காய் எண்ணெயில் தாளிக்கலாம். முடிக்கும் போது தேங்காய், சீரகத்தை கரகரப்பாக அரைத்து சேர்க்கலாம்.
*உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் போது புழுங்கல் அரிசியை வறுத்துப் பொடித்து சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
*துவரம் பருப்பை வேகவைக்கும் போது சிறிது வெந்தயம் சேர்த்தால் பருப்பு விரைவில் கெட்டுப்போகாமலிருக்கும். 4, 5 பூண்டு பற்களை வேகும் போது பருப்புடன் சேர்த்தால் வாய்வுத் தொல்லை இருக்காது.
*வாழைப்பூவுடன் முருங்கைக்கீரையை சேர்த்து சமைத்தால் குடற்புண் குணமாகும்.
*பொதுவாக சீரகம், சோம்பு மிக்ஸியில் நன்கு மசியாது. இரண்டையும் தனித்தனியாக வெயிலில் நன்கு காய வைத்து பொடியாக்கி பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.
*எலுமிச்சை சாதத்துடன் சிறிது பெரிய வெங்காயத்தை வதக்கி சேர்த்தால் சுவை கூடுதலாகும்.
*உணவில் கறிவேப்பிலையை சேர்க்கும் போது 5-6 இலையாக சேர்த்து, பொடியாக நறுக்கி சேர்த்தால் உணவுடன் சேர்ந்து விடும்.
*தேவையான அளவு தனியாவை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்தால் சாம்பார், காரக்குழம்பை முடிக்கும் தருவாயில் சேர்த்தால் சுவை, மணம் சூப்பராயிருக்கும்.
*வற்றல் குழம்புடன் நிலக்கடலை சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
*எள்ளு அதிகமிருந்தால் கெடாமலிருக்க எள்ளை வறுத்து வைக்கலாம்.
*கேசரி செய்யும் போது, தண்ணீருக்கு பதில் பாலும், சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்தால் வித்தியாச சுவையுடன் கேசரியிருக்கும்.
*விளாம்பழம் மேல் ஒரு ஆரஞ்சு பழத்தோல் சிறிதளவு ரசத்துடன் சேர்த்தால் ரசத்தின் வாசனை கூடும்.
*தானிய வகைகள் கெடாமலிருக்க வசம்பை போட்டு வைக்கலாம்.
* புளி சீசன் நேரத்தில் அதிகமாக வாங்கி, நன்கு காய வைத்து, கல் உப்பு சேர்த்து வைத்தால் கெடாமலும், நிறம் மாறாமல் இருக்கும்.
* சர்க்கரை பாகு தயாரிக்கும் போது பிசுபிசுப்பு பதம் வந்ததும் சிறிது பால் சேர்த்தால் சர்க்கரையில் உள்ள அழுக்கு கருப்பாகி பாத்திரத்தின் ஓரத்தில் வந்து விடும். அதை நீக்கிவிடலாம்.
*வேப்பம் பூவை நன்கு காய வைத்திருந்தால் சிறிது பூவை நெய்யில் வறுத்து ரசத்திலும், எண்ணெயில் பூ உடன் மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து உப்பு, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிடலாம்.
*காய்ந்த மிளகாயை கல் உப்புடன் சேர்த்து வறுத்தால் கமுறாமலும், மிளகாய் கருக்காமலும் இருக்கும்.
- பார்வதி கோவிந்தராஜ், நாகப்பட்டினம்.


