Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* அடைக்கு பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சம அளவில் ஊறவைத்து அவற்றில் நான்கில் ஒரு பங்கு துவரம் பருப்பு, துவரம் பருப்பில் 3ல் ஒரு பங்கு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றையும் தனியாக ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து அரிசிகளுடன் உப்பு, வரமிளகாய் இவற்றையும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றிய பிறகு பருப்புகளை சேர்த்து எல்லாவற்றையும் கொரகொரப்பாக அரைத்து, அரைத்த மாவில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பொடியாக அரிந்த வெங்காயம் தாளித்துச் சேர்த்து அடைகளாக வார்த்தால் சுவை அபாரம்.

* கோதுமை ரவை உப்புமா செய்யும்போது 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து செய்து இறக்குவதற்கு முன்பு 2 டேபிள் ஸ்பூன் இட்லிப் பொடியையும் தூவி இறக்கினால் தொட்டுக் கொள்ள உப்புமாவிற்கு எதுவுமே தேவையில்லை.

* அரிசி பாயசம் செய்யும் போது 1 கப் பச்சரிசிக்கு 5 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி, 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து உடைத்து வேகவிட்டு அத்துடன் தேங்காய் துருவல், பாதாம், முந்திரி இவற்றை நெய்யில் வறுத்து சேர்க்கும் முன் வெல்லம் ½ கப், சர்க்கரை ¼ கப் சேர்த்து கொதிக்க விட்டு பின் வறுத்த வற்றைச் சேர்த்து ஏலப்பொடி தூவி இறக்கினால் வித்தியாசமான அரிசி பாயசம் தயார்.

- எஸ்.சுரேந்திரன், சென்னை.

* வரகரசியுடன் இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து ஊறவைத்து இட்லி, தோசை செய்யலாம்.

* மாங்காயை துருவி காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால் புளிப்பு சுவைக்கு பல வகை உணவுகளில் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

* தக்காளியில் சாறெடுத்து புளிக்கு பதிலாக ரசம், குழம்பு போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

* சின்ன வாணலியில் கடுகு, வெந்தயம், வரமிளகாய், பெருங்காயம் தாளித்து, புளிக்கரைசலை விட்டு கொதித்ததும், வெந்த துவரம் பருப்பு, உப்பு சேர்த்து கறிவேப்பிலை போட்டு இறக்கினால் தாளித்த சாம்பார் சுவையாக இருக்கும்.

- எஸ்.ராஜம், திருச்சி.

* இட்லிப் பொடி தயார் செய்யும் போது ஒரு கைப்பிடி கறுப்பு எள்ளையும் வறுத்து சேர்க்கலாம்.* இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருந்தால் மாவின் மீது கொஞ்சம் சர்க்கரையை தூவி விட்டால் போதும். மாவு நன்கு புளித்து விடும்.

* வெந்தயக் குழம்பை தயார் செய்து இறக்கும் போது ஒரு ஸ்பூன் எள்ளுப் பொடியை சேர்த்தால் குழம்பு வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* சிறிதளவு தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து ரசத்தில் நன்றாக கொதி வந்த பிறகு சேர்த்தால் ரசம் கூடுதலாக மணக்கும்.

- பர்வதவர்த்தினி, பம்மல்.

* துவரம் பருப்பு வேகும் போது பொங்கிக் கொண்டு வரும். அப்படி பொங்காமல் இருக்க வேகவைக்கும் போது அதனுடன் இரண்டு சொட்டு கடலை எண்ணெய் விடவும்.

* முட்டைக்கோஸை நறுக்கும் போது அதிலுள்ள தண்டுகளை எறிந்து விடாமல் அதை நறுக்கி சாம்பாரில் போட்டு சமைத்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* வெயில் காலத்தில் கோழி முட்டைகள் கெட்டுப் போகாமல் இருக்க தண்ணீரில் போட்டு வைத்தால் 10 நாட்கள் வரை இருக்கும்.

* எலுமிச்சம் பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால் அது ஆறு நாட்கள் வரை கெடாமல்இருக்கும்.

- கே.ஆர்.இரவீந்திரன், சென்னை.

* வடை மாவு மீந்துவிட்டால், அதை குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்து நன்றாக உதிர்த்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய் வற்றல் தேவையான அளவு சேர்த்து, கிளறி விட்டால் சுவையான பருப்பு உசிலி தயார்.

* அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவை சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சேர்த்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.

* கேக் தயாரிக்கும் போது அதில் சேர்க்க வேண்டிய முந்திரி, பாதாம் பருப்பு போன்றவைகளை பாலில் ஊறவைத்து, பின்னர் சேர்த்தால் சுவை கேக்கிலிருந்து உதிராமல் இருக்கும்.

- ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.