Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*பருப்புகளை வாங்கியதும் வெயிலில் உலர்த்திவிட்டு டப்பாவில் போட்டு இறுக மூடி வைத்தால் பூச்சிகள் வராது.

*பருப்புகளை லேசாக சூடுபடுத்தி எவர்சில்வர் டப்பாவில் வைத்தால் வண்டுகள் வராது. பருப்பு கெடாமல் இருக்கும்.

*பருப்பு டப்பாக்களில் வெள்ளைப் பூண்டு, சுக்குத் துண்டு போட்டு வைத்தால் பூச்சி, புழு நெருங்காது.

*பருப்புகளை அவ்வப்போது வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

*எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் போது தோலுரித்த இஞ்சித் துண்டுகள் இரண்டை வதக்கி எலுமிச்சையுடன் சேர்த்தால் ஊறுகாயின் சுவை கூடும்.

*கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையினை வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

*இறைச்சி வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்துவிட்டால் சீக்கிரம் வெந்து விடும்.

*சமையல் எண்ணெயில் ஒரு துண்டு வெல்லம் போட்டால் எண்ணெய் பொங்காது.

- விசாலாட்சி கண்ணன், ஓசூர்.

*இட்லிப்பொடி அரைக்கும் போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாகும்.

*ரவா தோசை செய்யும் போது 2 தேக்கரண்டி சோள மாவு சேர்த்து செய்தால், தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும்.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

*எந்த வகை ஜூஸ், சர்பத் தயாரிக்கும் போதும் அதில் கொஞ்சம் சோம்பு பவுடர், ஊறிய சப்ஜா விதை சேர்த்துக் கொள்ள சுவை அதிகரிப்பதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

*நீராகாரத்தில் வெங்காயம் அல்லது கேரட் ஒன்றை நறுக்கிப் போட்டு நார்த்தங்காய் வற்றலுடன் 2 டம்ளர் பருகினால் உடல் குளிர்ச்சியாகும்.

*நீர் மோரில் தக்காளி பழச்சாறு கலந்து தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து பருகினால் களைப்பும், சோர்வும் நீங்கிவிடும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

*வடை மாவில், வடை தட்டும் போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மூடி பொரித்தால் வடை சுவை கூடும்.

*கீரையுடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து வேகவைத்தால் நிறமும் மாறாது. சுவையும், மணமும் கூடும்.

*சூப் செய்யும் போது நீர்த்துப் போய்விட்டால் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்தால் சுவையும், சத்தும் கூடும்.

- எஸ்.ராஜம், திருச்சி.