Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கமல் ரணதிவே

நன்றி குங்குமம் தோழி

பலவித நோய்களுக்கு காரணமானவை நுண்ணுயிரிகள்தான். பாக்டீரியா, வைரஸ், அமீபா, ஒரு செல் உயிரியான பிளாஸ்மோடியம் மற்றும் சில வகைப் பூஞ்சைகள் போன்றனவற்றை மைக்ராஸ்கோப் என்னும் நுண்பெருக்கியால் மட்டுமே பார்க்க முடியும். அவற்றை ஆராய்ந்து, அவற்றின் நோய் பரப்பும் தன்மைக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவது சவால்கள் நிரம்பியது மட்டுமல்லாமல், மனிதகுலத்துக்கு பெரும் சேவை ஆற்றும் பணியும் அதுதான். இந்தத் துறையில் பெண்கள் அதிகம் ஈடுபடாத காலகட்டத்தில், குறிப்பிடத்தக்க வலுவான பங்களிப்பை செய்திருப்பவர்தான் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளரான கமல் ரணதிவே. பலராலும் அறியப்படாத சாதனையாளராக இருந்தாலும் இவரது சாதனைகள் அசாத்தியமானவை.

மார்பகப் புற்றுநோயின் மரபணுக்கூறுகளை கண்டறிந்த முதல் விஞ்ஞானி இவர்தான். புற்றுநோய்க்கும் பரம்பரைக்கும் (Heredity) உள்ள தொடர்பையும், புற்றுநோய்க்கும் சில குறிப்பிட்ட நுண்ணுயிரிகளுக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்ததிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் இவர்.உலக மக்களே அஞ்சி நடுங்கும் தொழு நோயை பரப்பும் பாக்டீரியாவான மைக்ரோபேக்டீரியம் லெப்ரே என்பதைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அந்த நோய் வராமல் தடுக்கும் லெப்ரசி வேக்சின் என்னும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு நிதி கொடுத்து உதவியிருக்கிறார். புற்று நோயை பற்றியும் தொழு நோயை பற்றியும் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். மக்களின் நோயற்ற வாழ்வுக்காக தமது வாழ்நாளெல்லாம் உழைத்தார். ெசால்லப்போனால் மார்பகப் புற்றுநோயின் மரபணுக்கூறுகளை கண்டறிந்த முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர்.

1973 ஆம் ஆண்டு, ‘இந்தியன் விமன் சைன்டிஸ்ட்’ அசோசியேஷன் (IWSA) என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதில் தம்முடன் பணியாற்றிய பதினொரு பெண்களையும் சேர்த்துக் கொண்டார். அந்த அமைப்பின் மூலம் அறிவியல் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுத்தார்.

இவர் உருவாக்கிய இந்திய பெண் அறிவியலாளர் கழகம் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதற்கு பல கிளைகள் உருவாகியிருக்கின்றன. அறிவியலில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு ஊக்கத் தொகைகளையும் அளித்து வருகிறது.வெளிநாடுகளுக்குச் சென்று தமது மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குத் தம்மால் ஆன உதவிகளையும் உத்வேகத்தையும் கமல் ரணதிவே தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறார். அப்படி வெளிநாடுகளில் படிப்பவர்கள், படித்து முடித்த பிறகு தாங்கள் பெற்ற கல்வியறிவை தாய்நாட்டுக்குச் சேவை செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

1917ல் பூனாவில் பிறந்தார். தன்னுடைய மகள் மருத்துவராக வேண்டும் என்பது இவரது பெற்றோரின் விருப்பம். ஆனால், கமலுக்கு உயிரியல் ஆராய்ச்சியே மிகவும் விருப்பமானதாக இருந்தது. பூனாவில் இருக்கும் ஹூஸூர்பாகா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவரது மாணவப் பருவத்தில் பூனாவில் உள்ள ஃபெர்கூஸன் கல்லூரியில் பெண்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் அரிதானது. இவரது தந்தை அந்தக் கல்லூரியில் உயிரியல் துறையில் ஆசிரியராக இருந்ததாலும் அவரது தூண்டுதலாலும் அந்தக் கல்லூரியிலேயே இவர் தன் பட்டப் படிப்பினை மேற்கொண்டார். பின்னர் பூனாவில் இருக்கும் வேளாண் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதன் தொடர்ச்சியாக பாம்பே பல்கலைக்கழகத்தில் சைட்டாலஜி (Cytology) எனப்படும் செல்கள் பற்றிய பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அமெரிக்காவில் இருக்கும் மேரிலாண்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில், திசு வளர்ப்பில் புகழ்பெற்ற செல் உயிரியலாளர் ஜார்ஜ் கெய் என்பவருடன் இணைந்து பணியாற்றினார். அந்தப் பணிஅனுபவம் அளித்த தாக்கத்தால், மும்பையில் உள்ள இந்தியப் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு (ICRC) திரும்பியதும், அங்கே இந்தியாவின் முதல் திசு வளர்ப்பு ஆய்வகத்தை நிறுவினார்.ICRC நிறுவனத்தின் இயக்குநராகத் திறம்பட பணிபுரிந்தார். புற்றுநோய் தொடர்பாக விலங்குகளை மாதிரிகளாகக் கொண்டு பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். ரத்தப் புற்றுநோய், மார்பகம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்கள் பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்ள இவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின.

1989ம் ஆண்டு, இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு சமூக சேவையில் முழு வீச்சோடு இறங்கினார். மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு சுகாதாரமான பழக்க வழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.1982ம் ஆண்டு, இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருதை அளித்து கௌரவித்திருக்கிறது. தொழுநோய் பற்றிய அவரது ஆராய்ச்சிப் பணிகளை கௌரவிக்கும் விதமாக வாடுமல் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு விருது அளித்திருக்கிறது. இவரது கணவர் ஜே.டி.ரணதிவே கணிதவியலாளர் ஆவார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. அவரது பெயர் அனில் ஜேசிங். 2001ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பதினொன்றாம் தேதி கமல் ரணதிவே காலமானார். அவ ரது பரந்துபட்ட ஆராய்ச்சிப் பணிகள் இன்றும் புற்றுநோய் சிகிச்சைக்கும் மேம்பட்ட மருந்துகளை தயாரிக்கவும் பேருதவியாக இருக்கின்றன.

தொகுப்பு: லதானந்த்