நன்றி குங்குமம் தோழி
நவராத்திரி முடிந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். காரணம், தீபாவளி பண்டிகை. இந்தியாவில் வருடந்தோறும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் தீபாவளி மட்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை. குழந்தைகள் பட்டாசுகளுக்காக காத்திருப்பர். புத்தாடைகளை குடும்பத்துடன் ஷாப்பிங் செய்வார்கள். வீட்டில் விதவிதமான பலகாரங்கள் ரெடியாகும். ஜவுளி முதல் இனிப்பு கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். அந்தளவிற்கு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைக் கட்டும்.
இந்தாண்டும் தீபாவளி கொண்டாட்ட வைப்ஸ் தொடங்கிவிட்டது. குடும்பமாக சென்று ஆடைகளை பார்த்து பார்த்து வாங்கும் கூட்டம் ஒருபுறம் இருக்க, கூட்டம் என்றாலே அலர்ஜி... நமக்கு ஆன்லைன் ஷாப்பிங்தான் என்று மறுபக்கம் ஆன்லைனில் ஆடைகள் வாங்குவோர் பெருகிவிட்டனர். அலைச்சல் இல்லாமல், விரும்பிய உடைகளை ஆன்லைனில் வாங்குவது இன்று பெண்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. அவர்களுக்காகவே ‘தியா ட்ரெண்டி கலெக் ஷன்ஸ்’ நம்பிக்கையான தரமான ஆடைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் என்கிறார் அதன் நிறுவனர் ஆதித்யா முரளிதரன்.
“மயிலாடுதுறை மாவட்டம், மடப்புரம் கிராமத்தில் பிறந்தேன். நாங்க விவசாய குடும்பம். எங்க குடும்பத்துல நான்தான் முதல் பட்டதாரி. M.E படிச்சிருக்கேன். சின்ன வயசுலயிருந்தே ஆடைகள், ஃபேஷன் மீது என்னுடைய ஆர்வம் தனித்துவமாக இருக்கும். நான் அணியும் உடைகளையும் அப்படித்தான் தேர்வு செய்வேன். திருமணத்திற்குப் பிறகு அந்த ஆர்வம் அதிகமானது. அதைத் தொழிலாக மாற்றி அமைத்தேன். தற்போது சென்னை ஓ.எம்.ஆரில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் இந்த பிசினஸை நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் முகநூலில் வரும் ஃபேஷன் டிசைனிங் வீடியோக்களை மிகவும் ஆர்வமாக பார்ப்பேன். அதுதான் என்னை இந்த துறைக்குள் இழுத்து வந்ததுன்னு சொல்லணும்’’ என்றவர், 2021ல் ரீசெல்லிங் முறையில் தன் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
‘‘ஆன்லைனில் ரீசெல்லிங் செய்யும் போது வாடிக்கையாளர் மனநிலை, நிறங்கள், துணியின் தரம் பற்றி தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் ஆன்லைனில் விற்பனை செய்த போது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. புகைப்படத்தில் இருப்பது போல் டிசைன் மற்றும் நிறம் இருக்காது. டெலிவரியில் பிரச்னை, முன்கூட்டியே பணம் செலுத்துவதால் ஏற்படும் மோசடி போன்ற பல காரணங்களால் மக்களுக்கு ஆன்லைன் விற்பனையில் நம்பிக்கையில்லாமல் போனது. இது போன்ற ஏமாற்றங்களை என் வாடிக்கையாளர்கள் சந்திக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
பத்துக்கு பத்து அறையில்தான் நான் இந்த பிசினஸை ஆரம்பித்தேன். அதில் வந்த லாபத்தினை முதலீடாக கொண்டு ‘தியா டிரெண்டி கலெக் ஷன்ஸ்’ உருவானது. ஆரம்பத்தில் புடவைகள் மட்டும்தான் விற்பனை செய்து வந்தேன். காட்டன் முதல் சிந்தடிக் என அனைத்து ரகங்களும் இருக்கும். குறிப்பாக மற்ற ஊரில் உள்ள ஸ்பெஷல் டிசைன் புடவைகளும் என்னிடம் உள்ளது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸும் செய்து தருகிறோம். அதற்காக சொந்தமான தயாரிப்பு மற்றும் டெய்லரிங் யூனிட்டும் உள்ளது. ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க லைவ் வீடியோக்களை நான் இன்ஸ்டாவில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அதில் நானே புடவைகளை நேர்த்தியாக உடுத்தி பதிவிடுவேன்.
அதன் மூலம் துணியின் தன்மை, நிறம், டிசைன் எல்லாம் நன்றாக தெரியும். லைவ் வீடியோக்கள் போட ஆரம்பித்த பிறகுதான் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது’’ என்றவர், குர்தீஸ், கோ-ஆர் செட்கள், ஆரி வேலைப்பாடு செய்யப்பட்ட குர்திகளும் விற்பனையும் செய்கிறார். ‘‘குர்தி விற்பனை தொடர்ந்த போது, வாடிக்கையாளர்களிடம் பிளஸ் சைஸ் தேவைகள் அதிகமாக இருப்பதை அறிந்தேன். ஒவ்வொரு உடலமைப்பிற்கு ஏற்ற ஆடைகளை விற்க நினைச்சேன்.
அதற்காக ஒவ்வொரு டிசைனையும் அவர்களின் உடலமைப்பிற்கு ஏற்ப எங்களின் யூனிட்டிலேயே தயார் செய்தோம். பேஃப்ரிக் செலக்ஷன், ஸ்டிச்சிங், கஸ்டமைசேஷன் அனைத்தும் செயல்படுத்தினோம். அதில் மேக்ஸி கலெக் ஷன்தான் எங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. மேலும், ஒரு ஆர்டர் வாடிக்கையாளரின் கைக்கு செல்லும் வரை நாங்க டிராக் செய்வதால், வாடிக்கையாளர்களுக்கு எங்க மேல் நம்பிக்கை ஏற்பட்டு வரவேற்பும் கிடைத்தது.
கொரோனா சமயத்தில் ஆன்லைன் விற்பனை அதிகமாக இருந்தாலும், நான் நிறைய சவால்களை சந்திச்சேன். சரக்கு ஏற்றுமதி இறக்குமதியில் பிரச்னை, போக்குவரத்து என ரொம்ப கஷ்டப்பட்டேன். இருந்தும் என்னுடைய தன்னம்பிக்கையை நான் கைவிடவில்லை. என்னுடைய ஆடைகளுக்கு நானே மாடலாக மாறினேன். அதன் மூலமாக வாடிக்கையாளர் மத்தியில் என் மேல் இருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது. சில வாடிக்கையாளர்களுக்கு உடை குறித்து சந்தேகம் ஏற்படும்.
அதற்கான பதிலும் இன்ஸ்டாவில் பதிவு செய்ய தொடங்கினேன். போட்டோ எடுப்பது, எடிட்டிங் செய்வது, சமூகவலைத்தளங்களை நிர்வகிப்பது, வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது என அனைத்து வேலைகளையும் நானே செய்தேன். சிறிய அறையில் ஆரம்பித்த இந்த பிசினஸ் இன்று கிடங்கில் ஸ்டாக் வைத்து சேமிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தற்போது என்னிடம் ஏழு பேர் வேலைப் பார்க்கிறார்கள்.
என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் குடும்பத்தினர்தான் முக்கிய காரணம்’’ என்றவர் இந்த தீபாவளிக்கான புது வரவுகள் குறித்து பகிர்ந்தார். ‘‘புடவை மற்றும் குர்திகளில் புது டிசைன்களை அறிமுகம் செய்திருக்கிறோம். அதில் பனாரசி சில்க், காட்டன் சில்க், சாஃப்ட் சில்க், வார்ம் சில்க், ஜார்ஜ்ஜெட் மார்பிள் சிஃப்பான் போன்ற பல்வேறு டிசைன்கள் உள்ளன. பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் செட்டிநாடு காட்டன், காஞ்சி காட்டன், சுங்குடி காட்டன் போன்ற கைத்தறி வகைகளும் விற்பனைக்கு உள்ளது. காட்டன் மேக்ஸி, ஜார்ஜ்ஜெட், ரெயான், மல் காட்டன், மல் சந்தேரி போன்ற பல்வேறு மெட்டீரியல்களில் குர்திகள் கிடைக்கும். குறிப்பாக ஜார்ஜ்ஜெட் மற்றும் ஆரி வேலைப்பாடு கொண்ட குர்த்திகள் எங்களின் சிக்னேச்சர் உடைகள்.
ஆன்லைன் விற்பனை என்பதால் அனைத்து உடைகளையும் எங்களின் வெப்சைட்டில் பார்த்து வாங்கலாம். குர்திக்கள் 7XL சைஸ்கள் வரை உள்ளன. பிளஸ் சைசில் அதிகம் கவனம் செலுத்தி அதில் புது டிசைன்களை அறிமுகம் செய்கிறோம். நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலிருந்துதான் அதிக ஆர்டர்கள் வருகின்றன. கிராமப்புற பெண்களுக்கும் என் ஃபேஷன் சேவை சென்று சேருவதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது’’ என்கிறார்.
‘‘எதிர்காலத்தில் எங்களுடைய விற்பனையை மேலும் விரிவுபடுத்தி, தரமான ஆடைகளை நியாயமான விலையில் அதிகமான பெண்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய இலக்கு. ஒவ்வொரு பெண்ணும் தனக்குப் பிடித்த ஆடையை முழு மனநிறைவுடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம். சிறிய அறையில் தொடங்கிய பயணம் சொந்தமாக யூனிட், கிடங்குகள் என வளர்ந்து நிற்பது என்னுடைய வெற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிற்முனைவோரின் வெற்றியாக பார்க்கிறேன்’’ என்கிறார் ஆதித்யா முரளிதரன்.
தொகுப்பு: கலைச்செல்வி


