நன்றி குங்குமம் தோழி
‘‘பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்க, பெற்றோர் தனித்திருப்பார்கள். இவர்களுக்கு பிள்ளைகளுடன் வெளிநாட்டில் இருக்க விருப்பம் இருந்தாலும், அங்குள்ள சூழல் அவர்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால் பெரும்பாலான பெற்றோர் சில மாதங்கள் பிள்ளைகளுடன் தங்கிவிட்டு மீண்டும் அவர்களின் இல்லத்திற்கே வந்துவிடுகிறார்கள். அதே சமயம் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தங்களின் பெற்றோர் தனியாக இருப்பது ஒருவித பதற்றத்தை கொடுப்பதால் அவர்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ரெசிடென்ஷியல் ஹோம். இது முதியோர் இல்லம் கிடையாது’’ என்கிறார் நிறுவனர் மற்றும் இயக்குனரான கிருஷ்ண காவ்யா.
இவர் ‘அதுல்யா’ என்ற பெயரில் முதியோர்களுக்கான ரெசிடென் ஷியல் ஹோமினை சென்னையில் பல இடங்களில் துவங்கி அதனை நிர்வகித்து வருகிறார். பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில்
தனியாக அவர்கள் வீட்டில் இல்லாமல், அவர்களை போல் மற்றவர்களும் சேர்ந்து இருப்பதற்காகவே அமைக்கப்பட்ட அடுக்குமாடி இல்லம். இங்கு ஒவ்வொருவ ருக்கும் தனி வீடு, மூன்று வேளையும் உணவு, மருத்துவ வசதி என அனைத்தும் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் கேர்கிவ்வருக்கான பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அது குறித்த விவரங்களை பகிர்ந்தார் காவ்யா.
‘‘அதுல்யா ஆரம்பித்து பத்து வருடங்களாகிறது. ஆரம்பத்தில் ஹோம் கேர் நிறுவனமாகத்தான் செயல்பட்டு வந்தது. அதாவது, வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு இல்லம் சென்று மருத்துவ சேவை அளிப்பது. ரத்தப் பரிசோதனை, பிசியோதெரபி, மருத்துவ உதவி போன்றவற்றை கொடுத்து வந்தோம். அப்போது எங்களின் வாடிக்கையாளர்களில் பலர் உங்களுக்கு ஒரு இடம் இருந்து, அங்கு நாங்க தங்கிக் கொள்ள வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். அப்பதான் எங்களுக்கு புரிந்தது முதியோர்களுக்கு என மருத்துவ உதவியுடன் தங்கக்கூடிய இடம் இல்லை என்று. அதை அசிஸ்டெட் லிவ்விங்னு சொல்வாங்க. அதை கொடுக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் அதுல்யா உருவானது. இப்போது 12 கிளைகள் அமைக்கப்பட்டு அதில் 900க்கும் மேற்பட்ட முதியவர்களை நாங்க பார்த்துக் கொள்கிறோம்’’ என்றவர், முதியோர்களை பார்த்துக் கொள்வதற்கு என சிறப்பு டிரெயினிங் வழங்கி வருகிறார்.
‘‘முதியவர்களுக்கான அனைத்து வசதி படைத்த இல்லங்களை ஆரம்பிக்கலாம். ஆனால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு முறையாக பயிற்சி பெற்ற கேர்டேக்கர்கள் வேண்டும். இவர்கள் இல்லாமல் நான் இல்லம் நடத்த முடியாது. ஒருவருடன் இருந்து அவர்களின் தேவைகளை அறிந்து பார்த்துக் கொள்பவர்தான் கேர்டேக்கர். சிலர் தனிப்பட்ட முறையில் நியமித்துக் கொள்வார்கள். இவர்களின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆள் பற்றாக்குறையும் உள்ளது. ஆரம்பத்தில் எங்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நாங்க பயிற்சி அளித்து ஆட்களை நியமிப்போம். இந்த வேலைக்கு பெரும்பாலானவர்கள் கிராமத்தில் இருந்து வருவார்கள். ஆனால், அதிக பட்சம் இரண்டு வருடம்தான் இருப்பார்கள். அதன் பிறகு ஊருக்கே சென்றுவிடுவார்கள்.
இதனால் ஆட்களுக்கு பயிற்சி அளிப்பது, அவர்களை நியமிப்பது என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. எங்களின் நிறுவனத்திற்காக மட்டுமே ஆட்களை நியமித்தால்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிந்து கொண்டோம். காரணம், கேர் கிவ்வராக வேலை பார்ப்பவர்கள் முதியவர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். சாதாரணமாக ஒருவரை பார்த்துக் ெகாள்வதற்கும் வயதானவர்களை கவனித்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது. பொறுமை மற்றும் தனிப்பட்ட கவனிப்பு அவசியம். இவர்கள் செவிலியர்கள் கிடையாது. ஆனால், அவர்களின் தினசரி அன்றாட வேலைக்கான சப்போர்ட் இவங்க தருவாங்க. பக்கத்தில் இருந்து அவர்களை பார்த்துக் கொள்வார்கள். இந்த பெரிய இடைவேளையை நிரப்ப பயிற்சி மையம் ஆரம்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்தோம். அப்படித்தான் அதுல்யா அகாடமி உருவானது’’ என்றவர், பயிற்சி முறைகள் குறித்து பகிர்ந்தார்.
‘‘முதலில் இதற்கான பாடத்திட்டங்களை அமைத்தோம். 30% அவர்களுக்கு பாடங்களாகவும் 70% செயல்முறை விளக்கங்களும் இருக்குமாறு அமைத்தோம். மேலும், தேசிய, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா திறன் பள்ளிகளின் வழிகாட்டலும் பாடங்கள் அமைக்க உதவியது. இப்போது எங்களின் பயிற்சி மையத்தில் இருந்து 700 பேர் பயிற்சி பெற்று எங்களின் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இது ஒரு தனிப்பட்ட பயிற்சி. செவிலியர் படிப்பிற்கு முறையான பாடத்திட்டங்கள் இருக்கும். ஆனால், கேர்கிவ்வர் பயிற்சியினை வரைமுறைப்படுத்த முடியாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பிரச்னை இருக்கும். அவர்களை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு டிமென்ஷியா, பார்கின்சன் நோயாளிகள், படுத்த படுக்கையாக இருப்பவர்களின் பிரச்னைகள் வெவ்வேறாக இருக்கும். சிலருக்கு நடப்பதில் சிரமம் இருக்கும். ஒவ்வொருவரின் பிரச்னைகள் அறிந்து கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால் ஒவ்வொரு பிரச்னைக்கு ஏற்ப நாங்க இவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். குறிப்பாக டிமென்ஷியா மற்றும் பாலியேடிவ் கேருக்கான பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இது ஆறு மாதப் பயிற்சி காலம். இந்தப் பயிற்சி பெற விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நாங்க கேர்கிவ்வருக்கான பயிற்சிதான் தற்போது அளித்து வருகிறோம். பிசியோதெரபிக்கு பயிற்சி அளிப்பதில்லை. வரும் காலங்களில் அதற்கான பயிற்சியும் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது’’ என்றவர், பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருவதாக கூறினார்.
‘‘நாங்க அசிஸ்டெட் லிங்விங் மட்டுமில்லை ஹோம்கேரும் தருகிறோம். அதனால் எங்களிடம் பயிற்சி பெற்றவர்களை எங்க நிறுவனத்திலேயே வேலைக்காக நியமித்துக் கொள்கிறோம். எங்களின் இல்லத்தில் ஒரு தளத்திற்கு ஒரு கேர்கிவ்வர் இருப்பாங்க. அவர்கள் அங்கு வசிக்கும் முதியவர்களை பார்த்துக் கொள்வார்கள். சிலர் எங்களுக்கு தனிப்பட்ட ஒருவர் வேண்டும் என்று கேட்பார்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்று ஹோம்கேர் கொடுக்கவும் இவர்களை நாங்க நியமிக்கிறோம். இப்படி பல தேவைகள் இருப்பதால்தான் நாங்களே பயிற்சி மையத்தினை துவங்கினோம்.
எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ள ணும். இங்கு வசிப்பவர்கள் யாரும் நிராகரிக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்களுக்கு எல்லா வசதியும் இருக்கும். பிள்ளைகள் வேலை காரணமாக வெளியூரில் இருப்பார்கள். பெற்றோர்களை உடன் இருந்து பார்த்துக் கொள்ள முடியாத நிலை என்பதால், அவர்களுக்கு அனைத்து வசதியுடன் பாதுகாப்பான இடம் வேண்டும் என்று நினைத்தார்கள். அதே போல் அனைவரும் உடல் நிலை சரியில்லாதவர்களும் கிடையாது. ஆரோக்கியமாக இருப்பவர்களும் உள்ளனர். வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் தன் வயது ஒத்தவர்களுடன் இணைந்து இருக்க விரும்பி இங்கு தங்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முழுமையான பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்’’ என்றார் கிருஷ்ண காவ்யா.
எங்களின் நிறுவனத்திற்காக மட்டுமே ஆட்களை நியமித்தால் தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிந்து கொண்டோம். கேர்கிவ்வராக வேலை பார்ப்பவர்கள் முதியவர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.
தொகுப்பு: நிஷா



