Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மக்களுடன் இணைக்கும் பாடலை உருவாக்குவது முக்கியம்!

நன்றி குங்குமம் தோழி

இந்திய ராப் இசையில் பேசப்படும் பாடகிகள் மிருணாள் ஷங்கர், இர்ஃபானா, ஷியா, மெபா ஆஃபிலியா, த்ரிஷிய கிரேஸ் வரிசையில் வளர்ந்து வரும் பாடகி ‘ஹிப்-ஹாப்’ தயாபி லாமரே. இவருக்கு, ‘ரெபல்’ என்ற மேடைப் பெயரும் உண்டு. மலையாளத் திரையுலகில் ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ திரைப்படத்தின் மூலம் ஆங்கில ராப் பாடகியாக அறிமுகமானார். 24 வயதாகும் தயாபி லாமரே, ரன்வீர் சிங்கின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘துரந்தர்’ படத்திலும் பாடியுள்ளார்.

கூர்மையான வரிகளை பாடும் தயாபி லாமரே வடகிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்தவர். ஹிந்தி ஹிட் பாடல்களின் ரீ மிக்ஸ் பதிப்புகளையும் பாடி வரும் தயாபி லாமரே தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை இந்தியாவிலும் வளைகுடா நாடுகளிலும் உருவாக்கியிருக்கிறார். காலத்திற்கேற்ப மாறி, தாளத்திற்கேற்ப பரிணமித்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், தயாபி லாமரே மனம் திறந்தார்.

“துரந்தர் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் எனக்கு ஒரு சிறப்பான அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு எதிர்பாராத தருணத்தில் கிடைத்தது. பாடல் வரிகளை நானும் இசை அமைப்பாளர் அவர்களுடன் சேர்ந்து விரைந்து முடித்தாலும், அனைத்தும் திருப்திகரமாக நிறைவேறியது.மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மலைகளில் உள்ள நாங்பா என்ற ஊரில் பிறந்தேன். வடகிழக்கு இந்தியாவின் இசைச் சூழலில் வளர்ந்தேன்.

இசையுடனான தனது முதல் அறிமுகம் ஒரு தொலைபேசி மூலம் நிகழ்ந்தது. ஐந்து வயதாக இருந்த போது, ஒரு தொலைபேசி இணைப்பில் ஒரு மெல்லிசையைக் கேட்டேன், அது என்னை முழுமையாகக் கவர்ந்தது. 11 வயதில் ராப் இசைதான் எனக்குப் பொருத்தமாக இருக்கும் என தீர்மானித்தேன். ராப் இசை எழுத முறையான பயிற்சி தேவையில்லை. ராப் இசைக்கு புரிதல் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறமை அவசியம். ராப் இசைக்கென்று குறிப்பிட்ட விதிகளோ அல்லது சூத்திரங்களோ இல்லை.

2018ல், தயா என்ற புனைப்பெயரில் உள்ளூர் இசைக் குழுவான சிம்போனிக் மூவ்மென்ட் உடன் தொழில்ரீதியாக இசை நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினேன். பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு பொறியியல் படிக்க பெங்களூர் சென்றேன். அதன் பிறகு நான் மற்றவர்களைப் போல் அன்றாட வேலைக்கு செல்வேன் என்று எங்க வீட்டில் எதிர்பார்த்தார்கள். நானே புதிய சிறகுகளை விரித்தேன். ‘ரெபல்’ என்று புதிய பெயரில் இசை உலகில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்தப் பெயரில் என் முதல் தனிப்பாடல் வெளியானது. தொடர்ந்து ‘ரீசன்ஸ்’, ‘மேனிஃபெஸ்ட்’, ‘டெரர்’, ‘செட் இட் ஆஃப்’, ‘கில் ஸ்விட்ச்’, ‘ஈஸ்ட் இந்தியா சைஃபர்’ மற்றும் ‘நியூ ரயட்’ என பல பாடல்களை வெளியிட்டேன். இசைக்காக பல இடங்களுக்கு பயணிக்க துவங்கினேன். நான் சென்ற ஒவ்வொரு நகரத்தின் தாக்கங்கள் என் இசையில் பிரதிபலிப்பதை பார்க்கலாம்.

பாடல்களை பாடினாலும் எனக்கென்று தனிப்பட்ட பாணி என்று இருந்ததில்லை. அதன் பிறகு பல இசைக் குழுவினருடன் பயணிக்க துவங்கிய போதுதான் எனக்கான ஒரு ஸ்டைலினை அவர்கள் மூலம் வடிவமைத்துக் கொள்ள முடிந்தது. இப்போது மக்களுக்கும் என்னுடைய அந்த ஸ்டைல் பிடித்திருக்கிறது. மக்களுடன் இணைக்கும் பாடலை உருவாக்குவது முக்கியம்.

இப்போது திரை உலகமும் என்னை ஏற்றுக்கொண்டுள்ளது. ‘லோகா’ படத்திற்காக நான் பாடிய விளம்பரப் பாடல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் வெற்றி பெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்காக நான் பல இடங்களுக்கு சென்றிருந்ததால், ஐந்து வயதில் தொலைபேசியில் என் காதில் ஒலித்த அந்த பல்லவி தான் இன்றும் என்னை இயக்கி வருகிறது. மக்களின் இதயங்களைத் தொடக்கூடிய இசையை உருவாக்கவே விரும்புகிறேன். ஒரு இசையை மக்கள் கேட்க மட்டுமில்லாமல் அவர்களை முணுமுணுக்க வைக்க வேண்டும்’’ என்கிறார் தயாபி லாமரே.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி