Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இடைநிற்றலை தடுக்க மூன்றாண்டுகளானது!

நன்றி குங்குமம் தோழி

சமூக சேவைக்கான முனைவர் பட்டம் பெற்றுள்ளார் குளோரா ராணி. பட்டம் பெற்றது மட்டுமில்லாமல் ஸ்விட் (SWIT) என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

‘‘நான் வால்பாறையில் பிறந்து வளர்ந்தேன். பள்ளியும் அங்குதான் பயின்றேன். வால்பாறையில் என்னுடைய பள்ளி நாட்கள் குறிப்பாக கடும் மழை மற்றும் பனிப் பொழியும் மாதங்களிலும் மிகவும் சிரமப்பட்டு கரடு முரடான மலைப் பாதைகளை கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். என் பெற்றோர் இருவரும் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர்.

நான் மட்டுமில்லை தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபடுபவர்களும் மழை, பனி எதுவாக இருந்தாலும் அதிகாலையில் மிகுந்த சிரமத்துடன்தான் காடுகளில் வேலைக்குச் செல்வார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது அப்போது இவர்களின் முன்னேற்றத்திற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று மனதில் யோசிப்பேன். குறிப்பாக பெண்கள். அவர்கள் தங்களின் கடுமையான உழைப்பினை தங்கள் குடும்பத்திற்காக பங்காற்றி வந்தார்கள். பள்ளிப்படிப்பு முடித்த பிறகு உயர்கல்விக்காக நான் தாராபுரத்தில் தொழில் பயிற்சியுடன் கூடிய கல்வியினை தேர்வு செய்தேன். அதில் பிசினஸ் மேனேஜ்மென்டில் கவனம் செலுத்தினேன்’’ என்றவர், திருமணத்திற்குப் பிறகு முழுமையாக சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

‘‘படிப்பு முடித்தவுடன் எனக்கு திருமணமானது. என் கணவர் காவலர் பணியில் இருந்ததால் ஐந்து வருடம் டெல்லியில் இருந்தேன். பிறகு சென்னைக்கு நாங்க குடிபெயர்ந்தோம். இங்க வந்த பிறகு என் கணவர் பணியில் இருந்து கொண்டே சமூகக் கல்வியியலில் உயர் கல்வி பயின்றுக் கொண்டிருந்தார். நானும் என்னுடைய ஆசிரியர் பயிற்சியினை தொடர்ந்தேன். நானும் என் கணவர் இருவரும் எங்களால் முடிந்த உதவிகளை நலிந்தவர்களுக்கு செய்து வந்தோம்.

இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 2009ல் தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் முழு மூச்சாக சமூகப் பொருளாதார மற்றும் கல்வி விழிப்புணர்வு வழங்க ஆரம்பித்தோம். அதில் குறிப்பாக சேரிப் பகுதியில் துவங்கி காசிமேடு மீனவ கிராமங்களில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை நேரம் டியூஷன் பயிற்றுவிக்கும் சேவையினை துவங்கினோம். இதில் என் கணவருடன் வேலை பார்க்கும் காவல்துறை நண்பர்களும் இணைந்து சேவை செய்தனர்.

இந்த நேரத்தில் எனது கணவருக்கு திருச்சிக்கு பணி மாற்றம் பெற்ற போது SWIT (Social welfare integral trust) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நிறுவினோம். அதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரம், சுய முன்னேற்றம், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் இவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட துவங்கினோம். திருச்சியை மையமாகக் கொண்டு அனைத்து சிறிய கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள பெண்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சிறிய முதலீடு செய்து தொழில் துவங்கவும், அரசின் திட்டங்கள் மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கினோம்.

திருச்சி மட்டுமில்லாமல் புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், காரைக்கால், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை என பல மாவட்டங்களிலும் எங்களின் பணியினை நீடித்து வருகிறோம். இதுவரை 3500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் பயிற்சியினை அளித்திருக்கிறோம். அதில் 700க்கும் மேற்பட்டவர்களை அரசின் திட்டங்கள் மூலம் பலனடைய செய்திருக்கிறோம்’’ என்றவர், பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் குழந்தைகளுக்கு மாலை நேர டியூஷனை அமைத்ததாக கூறினார்.

‘‘என் கணவர் அவரின் M.Phil Thesis குறித்து திருச்சி, திருவெறும்பூர் அரசுப் பள்ளிகளுக்கு சென்றிருந்தார். போகும் வழியில் அரியமங்கலம் குப்பைமேட்டினை கடந்துதான் செல்ல வேண்டும். அந்தப் பகுதி எப்போதும் துர்நாற்றமும் புகை மண்டலமாகத்தான் இருக்கும். அந்த குப்பைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி தொடக்க நிலையிலேயே நின்று விடும். ஆரோக்கியம் மற்றும் அடிப்படை வசதிகளுமின்றிதான் அவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

இது குறித்து நானும் என் கணவரும் அவரின் இளைய சகோதரர் மற்றும் அவரின் மனைவியிடம் கலந்தாலோசித்தோம். இருவரும் சமூக சேவையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் என்பதால் அவர்களின் ஆலோசனை உதவியுடன் செயலாற்ற முடிவு செய்தோம். அதன் தொடக்கமாக குப்பைமேடு பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக மாலை நேர டியூஷன் சென்டரினை நிறுவ முடிவு செய்தோம்.

ஆனால், அந்தப் பகுதி மக்களை அணுகுவது அவ்வளவு எளிதாக இல்லை. அந்தப் பகுதியில் சாக்கடை நிறைந்திருந்தது. அதை கடந்து சென்றாலும் நம்மை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலோ தங்களை மேம்படுத்திக் கொள்ளும் எண்ணமோ அவர்களிடம் இல்லை. மூன்றாண்டு போராட்டத்திற்குப் பிறகு அங்குள்ள 15 குழந்தைகளுக்கு பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் வகுப்பறையினை அமைத்து பள்ளி இடைநிற்றலை நிறுத்தினோம்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தினோம். அதில் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தோம். அவர்களுக்கு தகுந்த மருத்துவ சேவை அளித்து உயிரை காப்பாற்றினோம். அது எங்களுக்கு மனநிறைவை கொடுத்தாலும், அங்குள்ள மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வழிவகுத்தது. அதன் பிறகு சுமார் ஏழு ஆண்டுகள் அவர்கள் வாழ்வியலோடு பயணித்தோம். தற்போது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரி மற்றும் தொழில் கல்வி, செவிலியர், காவல்துறை போன்ற பணியில் சேர இருக்கும் மாணவர்களுக்கு உதவி வருகிறோம்.

அடுத்த நிலையாக அங்குள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களை தொழில்முனைவோர்களாக்கும் முயற்சியினை துவக்கியுள்ளோம். தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலோடு, துறையூர் பச்சைமலை பழங்குடி மகளிர் குழுவின் சுமார் 35 பெண்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல், மதிப்புக்கூட்டுதல் தொழில் பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்கள் ‘பச்சமலை’ என்கிற பெயரில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

திருச்சி புறநகர் மற்றும் கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக, அவர்களுக்கு மதிப்புக்கூட்டுப் பயிற்சி அளித்து, அரசு மானிய திட்டங்களின் மூலமாக சிறு தொழில்முனைவோர்களாக அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முனைந்து வருகிறோம். மேலும் அவர்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய சிரமம் இருப்பதை அறிந்தோம். அதனால் ‘எல்டோரா இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை அமைத்து அவர்களிடம் பொருட்களைப் பெற்று அதை சந்தைப்படுத்த வழிவகை செய்து வருகிறோம்.

இதன் மூலம் ‘உன்னத்தி’ திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் பொருட்களை சந்தைப்படுத்த ஊக்கமளித்து வருகிறோம். இதனால் பலன் அடைந்தவர்களை சந்திக்கும் போது நம்முடைய பணி எத்தனை பேரின் உயிர் ஆதாரமாக விளங்குகிறது என்பது புரிந்தது. இந்தப் பணியினை மென்மேலும் மேம்பட செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு’’ என்றார் குளோரா ராணி.

 தொகுப்பு: விஜயா கண்ணன்