நன்றி குங்குமம் தோழி
பல வருஷம் கஷ்டப்பட்டு படிச்சு கை நிறைய சம்பளம் தருகிற பாதுகாப்பான ஐ.டி வேலையை உதறிட்டு, கையில இருக்கிற ஒரே ஒரு ஸ்மார்ட்போனை மட்டும் வச்சுக்கிட்டு வாட்ஸ்ஆப்ல புடவை விக்க ஆரம்பிச்சா என்ன நடக்கும்?
அப்படி ஒரு ரிஸ்க் எடுத்து, இன்றைக்கு YouTubeல் மில்லியன் ஃபாலோவர்ஸ், இன்ஸ்டாவில் 8 லட்சம் என வலைத் தளங்களை கலக்கி வரும், கோயம்புத்தூரை சேர்ந்த உமாசங்கரி-சவுந்தர்யா சகோதரிகள், வெவ்வேறு ஊர்களில் இருந்தவாறே ஆன்லைனில் தொழிலை தொடங்கி, இன்று ரிஷி பொட்டிக் என்கிற ஒரு புடவை சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தி, பிரம்மாண்டமா வளர்ந்து நிற்கிறார்கள். இருவரிடமும் பேசியதில்...
‘‘நாங்க ரெண்டு பேரும் இரட்டையர்கள் கிடையாது. ஆனா, இரட்டையர்கள் மாதிரியே ஒரே மாதிரி கலர், ஒரே டிசைன் புடவை, ரவிக்கை, ஆர்னமென்ட்ஸ் என வலம் வந்தவாரே, புடவை விற்பனையில் கலக்கி வருகிறோம்’’ என புன்னகைத்தவர்கள் மேலும் தொடர்ந்தனர்.‘‘நாங்க சிறு வயதா இருக்கும்போது, எங்கள் அம்மாவும் சித்தியும் சேர்ந்து டூ வீலர் ஷோரூம் நடத்தினாங்க. அதைப் பார்த்தே நாங்களும் வளர்ந்ததால், நாமும் இப்படித்தான் ஒன்னா சேர்ந்து பிசினஸ் பண்ணணும் என சிறு வயதிலே முடிவு பண்ணினோம்.
ஆனால், நாங்கள் வளர வளர சூழல் எங்களை வெவ்வேறு திசைக்கு இழுத்துச் சென்றது. நான் இன்ஜினியரிங் முடித்து காலேஜ் லெக்சரர், பிறகு திருமணம், ஐ.டி வேலை என முதலில் சென்னை, பிறகு மதுரைக்கு மாறினேன்’’ என்ற உமா சங்கரி. ‘‘இரண்டு வயது இளையவரான என் தங்கை சவுந்தர்யா எம்.சி.ஏ முடிச்சிட்டு கோயம்புத்தூர்ல ஐ.டி ஃபீல்டுல வேலை, அங்கேயே திருமணம்னு செட்டிலானார்.
நம்ம சின்ன வயசு கனவுகள் எல்லாம் அந்தந்த ஊர் டிராபிக்லயே காணாம போயிடும் என்பதுதானே இங்கே நிஜம். தோழியோ, சகோதரியோ அதிகபட்சம் வீக்கெண்ட்ல போன் பண்ணி பேசுவோம். அதோட சரி. ஆனால், நாங்கள் இருவருமே எங்களின் சின்ன வயது கனவை விடல. WhatsAppல் குரூப் ஒன்றை இருவருமாக உருவாக்கி அவரவர் ஊரில் இருந்தபடியே புடவை விற்க ஆரம்பித்தோம். தொடக்கத்தில் சின்ன அளவுல டார்கெட் செய்து, எங்களிடம் இருக்கிற புடவைகளின் புகைப்படங்களை WhatsApp குரூப்ல அனுப்பி, அதை கஸ்டமர்ஸ் கிட்ட காட்டி, ஆர்டர் எடுத்து வாங்கி அனுப்ப ஆரம்பித்தோம்.
ஒரு சாதாரண துணிக்கடை வைக்கணும்னா கூட நம்ம மைண்ட்ல என்ன வரும்? அட்வான்ஸ் கொடுக்கணும், இன்டீரியர் பண்ணணும், வாடகை, கரண்ட் பில், ஊதியம்னு நிறைய செலவு இருக்குமே என்றுதானே. அது மட்டும் இல்லாம லட்சக்கணக்குல சரக்குகளையும் வாங்கி அடுக்கி வைக்கணும். ஆனால், நாங்க முதலில் போட்டோக்களை மட்டுமே முதலீடா பயன்படுத்தினோம். அதாவது, வாடிக்கையாளர் கிட்ட போட்டோவை காட்டி ஆர்டர் கன்பார்ம் ஆகி அவங்க கிட்ட இருந்து பணத்தை பெற்று, பிறகு புடவையை மொத்தமாக ஆர்டர் செய்து வாங்கி அனுப்ப ஆரம்பித்தோம்.
தி நகர்ல பல லட்சம் கொடுத்து ஒரு ஷோரூமை திறப்பதற்கு பதிலா, வீட்ல இருக்கற ஒவ்வொரு பெண்ணும் தங்கள் ஸ்மார்ட்போனை 10,000 ஸ்கொயர்பிட் வெர்ச்சுவல் ஷோரூமா மாத்திட்டாங்கன்னுதான் சொல்லணும்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘பிறகு இன்ஸ்டா, YouTubeன்னு சமூக வலைத்தளங்களில் எங்கள் வியாபார தளத்தை விரிவுபடுத்தினோம்’’ என்றவாறே தங்கை சவுந்தர்யாவை பார்க்க அவர் தொடர்ந்தார்.
‘‘எனக்கு பிடித்ததாகவும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும் புடவை கட்டுவதையே பெரிய பிசினஸ் சாம்ராஜ்யமா மாத்துறது சந்தோசம்தானே’’ என்றவர், ‘‘நம்மகிட்ட ஒரு ஷோரூம் இருந்தால் அதை பெரிய லெவல்ல கொண்டு போக, பாப்புலரான பர்பெக்ட்டான மாடல் வச்சுதான ஷூட் பண்ணுவோம். ஆனா, நாங்க வேறொரு விஷயத்தை கையில் எடுத்தோம். அதாவது, அந்தப் புடவையை கட்டிக்கிட்டு வர்ற மாடலை பார்க்கும்போது நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்காங்களேன்னு கஸ்டமர்ஸ ஃபீல் பண்ண வைக்க நினைச்சோம். எனவே, நாங்களே மாடலாகவும் மாறினோம்.
சோசியல் மீடியால முகம் காட்டிப் பேச குடும்பத்தினர் அனுமதி வாங்கணுமே. இருவருமே அதை வெற்றிகரமாக முதலில் முடித்தோம். ஒரு புடவைய வெறுமன மடிச்சு செல்ஃப்ல வைக்கிறத விட, அதை ஒரு பெண் கட்டிக்கிட்டு வரும்போதுதானே, புடவையின் நிஜமான அழகு வெளிப்படும்.
அதுவும் அந்தப் பெண், மாடலிங் குறித்து எதுவும் தெரியாத பெண்ணாக இருந்தால் அந்த கனெக்ட் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும்தானே’’ என்றவர், ‘‘நாங்க ப்ராப்பர் மாடல் இல்லைதான். எங்களுக்கு போஸ் கொடுக்கவோ ரியாக் ஷன் கொடுக்கவோ சுத்தமா தெரியாது தான். ஆனால், இன்ஸ்டா பக்கத்தில் ஒட்டிப் பிறந்தவர்கள் போலவே ஆடை அலங்காரத்தில் ஒரே மாதிரி புடவை, ஒரே மாதிரி அணிகலன் என அட்டகாசம் செய்து, பெண்கள் பலரையும் சேலை வாங்கத் தூண்டிவிடுவோம்.
இதுதான் எங்கள் பலம்.சமூக வலைத்தளங்களில் உண்மைத்தன்மை, அதாவது, ஆதென்டிசிட்டிதான் பெரிய மூலதனம். இவங்க நம்மளை ஏமாத்த மாட்டாங்கங்கிற ட்ரஸ்ட் உருவாக நாங்களே எங்களை வெளிப்படுத்தியதுதான் மிக முக்கியமான காரணம். ரெண்டு பேரும் வேற வேற ஊர்ல இருந்தாலும், மாசத்துல ரெண்டு மூணு நாள் ஒரே இடத்துல மீட் பண்ணி காலையில ஆரம்பித்து சாயங்காலம் வரை தொடர்ந்து எல்லா உடைகளையும் மாத்தி மாத்தி அணிந்து, ஒரு மாசத்துக்கு தேவையான மொத்த போட்டோ ஷூட், வீடியோ ஷூட்டையும் முடிச்சிடுவோம்.எங்களுடைய ட்ரெடிஷனல் லுக் மற்றும் புடவையில் உள்ள யுனிக்னெஸ் இவைதான் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தது.
தொழில் டெவலப் ஆனதுமே இருவருமே ஐ.டி வேலையை துறந்தோம். வேலையை விட்டதுக்காக ஒரு நாளும் நாங்க வருத்தப்பட்டதே இல்லை. இது எங்களுக்கு பிடிச்ச துறை. இன்வால்வ் ஆகி செய்கிறோம். அவ்வளவுதான். அதனால சோர்வுங்கிறதே எங்களுக்கு கிடையாது.புடவைகளை விளம்பரப்படுத்துவதன் மூலம், ஒரு நாளைக்கு 400ல் இருந்து 500 புடவைகள் வரை விற்பனை செய்கிறோம்.
500 ரூபாயில் தொடங்கி, 1500, 5000 ரூபாய் வரை பட்ஜெட் பிரெண்ட்லியான புடவைகள் ஏராளம் உண்டு. ஒரு மாதத்திற்கு மட்டும் 8 டிஜிட்ல எங்க டர்ன் ஓவர் நடக்குது. புடவைகளை வாரணாசி, சூரத், மும்பை போன்ற ஊர்களில் இருந்தும், காஞ்சிபுரம், மதுரை, காரைக்குடி, மங்களகிரி போன்ற பாரம்பரிய லுக் கைத்தறி நூல் புடவைகளையும் கொண்டு வருகிறோம்’’ என்கிற சவுந்தர்யா, ‘‘புடவைகளை வாங்கி விற்பது மட்டுமே எங்கள் பிசினஸ் மாடல் கிடையாது. ரத்தி கான்செப்ட் என்ற பெயரில் கஸ்டமைசேஷன் செய்ததுதான் எங்களின் பிசினஸில் மேலும் ஒரு கேம் சேஞ்சர். இதற்கென புடவைகளை டிசைன் செய்ய ஏஐ தொழில்நுட்பமான சாட்ஜிபிடிய பயன்படுத்துறோம்.
அதாவது, கஸ்டமர்ஸ் என்ன கலர், என்ன டிசைன், என்ன காம்பினேஷன் கேக்குறாங்களோ, அதை அப்படியே, சாட்ஜிபிடி மூலமாக உருவாக்கி நெசவாளர்களுக்கு அனுப்பி புடவையா நெய்து வாங்குறோம். உதாரணத்துக்கு, ‘மூக்குத்தி அம்மன்’ படத்துல நயன்தாரா கட்டி வந்த சேலை மாதிரி வேணும்னு கேட்டா, அதே டிசைன கஸ்டமரோட பட்ஜெட்டுக்கு அவர்கள் விருப்பத்திற்கு கஸ்டமைஸ் பண்ணி கொடுத்திடுவோம்.
இருவருமே வெவ்வேறு ஊர்களில் இருந்து, ஒன்றாக தொழில் செய்தாலும், இரண்டு ஊர்களில் இருக்கிற வெவ்வேறான டேலன்ட்ஸ், ரிசோர்சஸ் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கிற வாய்ப்பாகவே இது அமைஞ்சிருக்கு.ஒரு காலத்துல ஒரு தொழிலை ஆரம்பிக்க மிகப்பெரிய கண்ணாடிகளால் ஆன ஷோரூம், லட்சங்களில் வாடகை என தடைகள் இருந்துச்சு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்கள் இந்த தேவைகளை அடித்து நொறுக்கி, ஒரு சின்ன அறையில் இருந்தே, உலகளாவிய வியாபாரத்தை செய்ய முடியும் என்பதை காட்டியிருக்கு. நாம வாழற டிஜிட்டல் யுகத்தில், திறமையும் கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலிருந்தும் தொழிலை செய்ய முடியும்’’ என்றவாறு வெற்றிப் புன்னகையோடு விடைபெற்றனர்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்


