Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

செல்லப்பிராணிகளை வளர்த்தால் மட்டும் போதாது...அன்பும் செலுத்த வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

பூனை, நாய், லவ் பேர்ட்ஸ் தொடங்கி சுகர் கிளைடர் வரை வளர்ப்புப் பிராணிகள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. மனிதர்களின் நண்பர்களாக உற்ற துணையாக இருக்கும் செல்லப் பிராணிகள் இன்றளவில் குடும்ப உறுப்பினர்களாகவே பார்க்கப்படுகின்றன. தனிமையில் இருக்கும் பலருக்கு மன அழுத்தத்தை குறைத்து அமைதி தரும் அற்புத துணையாக வளர்ப்புப் பிராணிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. செல்ஃபோனுக்கு அடிமையாகியுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் எல்லோரையும் வளர்ப்புப் பிராணிகள் மூலம் மீட்டெடுத்து அவர்களின் மன நலத்தைக் காக்கலாம் என்பது உளவியலாளர்கள் கருத்தாக உள்ளது.

‘‘செல்லப்பிராணிகளை வளர்த்தால் மட்டும் போதாது அவற்றை முறையாக பராமரிக்கவும், அதன் மீது அன்பு செலுத்த வேண்டும். மேலும், பாதுகாப்பு தருவதும் அவசியம்’’ என்கின்றனர் உஷா உதயகுமார் தம்பதியினர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ‘சூர்யா அக்வோரியம்’ என்ற பெயரில் மீன்கள், லவ் பேர்ட்ஸ், காக்டெயில் வகை பறவைகளை விற்பனை செய்து வருகிறார்கள். ‘‘என் கணவருக்கு பெட்ஸ் என்றால் உயிர். அவரோட ஆசையில் உருவான இந்தக் கடை இப்போது எனக்கான உலகமாகவும் மாறிடுச்சு.

என் கணவர் தன் பன்னிரண்டு வயதில் வளர்ப்புப் பிராணிகள் மீது விருப்பம் ஏற்பட்டு, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு செல்லப்பிராணிகள் விற்கும் கடையில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். அவர் சின்ன வயதில் வேலை பார்த்த கடையினைதான் இன்று வரை கவனித்துக் கொள்கிறார். அவருக்கு இந்தத் தொழில் விருப்பம் என்பதால் எனக்கும் செல்லப்பிராணிகள் மேல் ஒரு ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. அதை புரிந்து கொண்டு எனக்கு தனியாக கடை ஒன்றை வைத்துக் கொடுத்திருக்கிறார்.

நான் 10வது வரைதான் படிச்சிருக்கேன். கல்யாணமாகி பசங்களும் பெரியவர்களாயிட்டாங்க. வீட்டு வேலை முடித்த பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கல. ஏதாவது வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்னு நினைச்சேன். எனக்கும் வளர்ப்புப் பிராணிகளை பிடிக்கும். அவரும் அந்த வேலையில் இருந்ததால், செல்லப்பிராணிகளுக்கான கடை ஒன்றை ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்தோம். மீன்கள், லவ் பேர்ட்ஸ், காக் டெய்ல் பறவைகளை வாங்கி அவற்றை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்கிறோம். கடந்த 10 வருஷமாக நான் என் கணவருடன் இணைந்து இந்த பிசினஸ் செய்து வருகிறேன்.

எங்களிடம் 40க்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன. மேலும், கொளத்தூரில் மீன்களுக்கான மொத்த விற்பனை அங்காடி உள்ளது. அங்கிருந்து மீன் வளர்ப்புக்கு தேவையான மீன் தொட்டி, உணவு என அனைத்து பொருட்களையும் வாங்கி எங்க கடையில் விற்பனை செய்கிறோம்’’ என்றவர் மீன் வளர்ப்பு முறை பற்றி விவரித்தார். ‘‘மீன்களைப் பொறுத்தவரை மெயின்டெனஸ் குறைவு. மீன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான அளவில் மீன்தொட்டி, மோட்டார், அதற்கான உணவுகள் எல்லாம் இருந்தாலே போதுமானது. பொதுவாக இரண்டு அடி டேங்கில், 10 மீன்கள் வரை வளர்க்கலாம். சின்னத் தொட்டிகளில் நிறைய மீன்களை வளர்க்கக் கூடாது. தொட்டியில் மோட்டார் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மேலும், தண்ணீர் அதிக குளிராகவோ, வெப்பமாகவோ இருக்கக் கூடாது. அதே போல் உணவுகளையும் அதிகமாக கொடுக்கக்கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுப் போட்டாலே போதும். அவ்வாறு போடும் போது ஒரு ஸ்பூன் அளவு உணவினை மூன்றாக பிரித்து போடலாம். மீன்களின் வகைகளுக்கு ஏற்ப உணவுகளை கொடுத்தால்தான் அவை ஆரோக்கியமாக வளரும். அதில் ப்ளோரான் மீன்கள் ரொம்ப பாசமா இருக்கும். நாம டேங் அருகில் சென்றாலே நம்மை நோக்கி வரும். தண்ணீருக்குள் கைவிட்டால் நம் கையை சுற்றி சுற்றி வரும், கையில் படுத்துக் கொள்ளவும் செய்யும். ப்ளோரான் மீனைப் பொறுத்தவரை அதன் நிறம், எடை மற்றும் அதன் கொண்டை வளர்ச்சிக்கு என தனித்தனி உணவுகள் உள்ளன’’ என்றவர் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டிலேயே மீன் தொட்டிகளை அமைத்தும் தருகிறார்.

‘‘எங்க தாத்தா வீட்டில் நாய், பூனை, கிளி, புறான்னு நிறைய வளர்த்தாங்க. வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பாடு கொடுத்தால் நல்லதுன்னு என் தாத்தா சொல்வார்’’ என்று பேசத் துவங்கினார் உதயகுமார். ‘‘சின்ன வயசில் இருந்தே அவர்களுடன் நான் வளர்ந்து வந்ததால், எனக்கு செல்லப்பிராணிகள் மேல் விருப்பம் ஏற்பட்டது. அவை சரியாக சாப்பிடாமல் சோர்ந்து படுத்துவிட்டால் அதன் உடலில் என்ன பிரச்னை என்று எனக்கு தெரியும். உடனே அதற்கான மருந்துகளை பார்த்து கொடுத்திடுவேன். அவை மீண்டும் துள்ளிக் குதிப்பதைப் பார்த்தால்தான் எனக்குள் உற்சாகமே ஏற்படும்’’ என்றவர், காக்டெய்ல் போன்ற பறவைகளின் வளர்ப்பு முறை பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘காக்டெய்ல் பறவைகள் ரொம்ப ஃப்ரெண்ட்லியாக பழகும். நம்மிடம் இருந்து அன்பும் பாதுகாப்பும் எதிர்பார்ப்பார்கள். அவைகளுடன் பழக வேண்டும் என்றால் கையில் உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதை விட வெயில் படும்படி காற்றோட்டமான இடத்தில் பறவைகள் இருந்தால் ஆரோக்கியமாக வளரும். மழை காலங்களில் வீட்டில் மஞ்சள் நிற விளக்கு போட்டு வைக்கலாம்.

பறவைகளை பொறுத்தவரை அதன் அன்றாட நடவடிக்கைகளை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருநாள் சரியாக உணவு சாப்பிடவில்லை என்றாலும் உடனே என்ன பிரச்னை என்று பார்க்க வேண்டும். ஒரு ஜோடிக்கு 100 கிராம் வரை உணவு வைக்கலாம். உணவு, தண்ணீர் வைக்கும் தட்டினை தினமும் நன்கு சுத்தம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் பறவைகளை பூஞ்சை நோய் தாக்கிவிடும். கால்சியம் உள்ள சுண்ணாம்பு கல், கடமா ஓடு, ஊற வைத்த கோதுமை, மூக்கடலை, வேர்க்கடலை பயறு வகைகளை விரும்பி சாப்பிடுவாங்க. அனைத்தும் கலந்த சிறுதானியங்கள், சூரிய காந்தி விதைகள் தரலாம். கடைகளிலும் சத்தான உணவுகள் கிடைக்கின்றன.

உணவில் கவனம் செலுத்துவது போல் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போதும் பறவைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பனி காலங்களில் பறவைகளும் சளி தொல்லையால் அவதிப்படுகின்றன. அந்த சமயத்தில் சளிப்பிரச்னை உள்ள பறவையை மட்டும் தனியாக எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். குட்டி பிறந்து எட்டு மாதத்தில் நன்கு வளர்ச்சி அடைந்துவிடுவார்கள். அந்த சமயத்தில் இனப்பெருக்கம் செய்யலாம்.

இதுவரை 80க்கும் மேற்பட்ட காக் டெய்ல், லவ் பேர்ட்ஸை நாங்களே இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்திருக்கிறோம். சில சமயம் வெளியே இருந்தும் வாங்கித் தருகிறோம். ஒரு முறை காக்டெயில் குட்டி ஒன்றின் காலில் சிறு நூல்கள் மாட்டி ரத்தம் கட்டி சீரியசான நிலையில் என்னிடம் வந்தது. கிளியை காப்பாற்றிட்டோம். ஆனால், அதன் காயம் பட்ட காலை நீக்க வேண்டியதாக போனது. ஒரு கால் இல்லாததால் யாருமே வாங்கவில்லை. ஒரு சிறுவன் வந்து வாங்கிக் கொண்டு போனான்.

இப்போ அந்தக் கிளி நல்லாருக்குனு கேள்விப்படும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு. குழந்தைகள்தான் எங்களின் மெயின் வாடிக்கையாளர்கள். அதற்காக எல்லா குழந்தைகளுக்கும் பறவை மற்றும் மீன்களை விற்க மாட்டோம். சிலர் வீட்டுக்குத் தெரியாமல் காசு சேகரித்துக் கொண்டு வருவாங்க. நாங்க இந்த பிசினசை காசு மற்றும் லாப நோக்கத்திற்காக செய்யல. மன நிம்மதி நிறைவு தருகிறது. வாயில்லா ஜீவன்களை வளர்த்து நாங்களும் வாழறோம்’’ என்கிறார்கள் உஷா, உதயகுமார் தம்பதியினர்.

செய்தி:கலைச்செல்வி

படங்கள்:பால்துரை