Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நஞ்சில்லா விதைகளை மீட்டெடுக்கும் விதை போராளி!

நன்றி குங்குமம் தோழி

பூமியில் தோன்றும் அனைத்து தாவரங்களுக்கும் அடிப்படை விதைகள். அவை இல்லாமல் புல்லும் இல்லை! மரமும் இல்லை! இயற்கையின் சந்ததிகள் விதைகள் மூலமே பெருகுகின்றன. மண் வளம் பாதுகாப்பிலும் இயற்கை சமநிலை காப்பதிலும் விதைகளே முக்கிய பங்காற்றுகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த விதைகள் நம் நாட்டில் முறையாக பாதுகாக்கப்

படுகிறதா என்றால் இல்லை. விதையில்லாமலே தாவரங்களை வளர்ப்பது பெருகிவிட்டது. இந்தப் பழக்கம் இயற்கையான சுழற்சியை பாதிக்கும். மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்.

விவசாயிகளின் வேளாண்மை அழிவுப் பாதையை சந்திக்கும். இது நாட்டிற்கு பேராபத்தினை ஏற்படுத்தும். இதைத் தடுக்க தன்னார்வலர்கள், பாரம்பரிய விவசாயிகள், விவசாயம் சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர். இயற்கை விவசாயம் குறித்த புரிதல் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர்தான் 1000க்கும் மேற்பட்ட மரபு விதைகளை மீட்டெடுத்த பிரியா ராஜநாராயணன். ‘விதை பிரியா’ என எல்லோராலும் அழைக்கப்படும் இவரை ‘விதைகளுக்கான போராளி’ என்றே கூறலாம்.

‘‘முதன் முதலில் நாலு பெயின்ட் பக்கெட்டில்தான் ஆரம்பிச்சேன். எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் அருகேயுள்ள பிலாத்து கிராமம். எங்களுடையது விவசாய குடும்பம். எம்.பி.ஏ பட்டதாரி. கணவர் திருப்பூர் கம்பெனில வேலை பார்க்கிறார். திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை நகர்ந்தது. அந்த சமயத்தில்தான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அறிந்து வேதனைப்பட்டேன். எனக்கு தெரிந்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதை கேள்விப்பட்ட போது என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதற்கு காரணம் அவங்க சாப்பிடும் உணவாக இருக்கலாம்னு சொன்னாங்க. ஆனால், அவர்கள் அனைவரும் ஆரோக்கியமான உலர் பழங்கள், நட்ஸ், கீரை போன்ற உணவுகளைதான் சாப்பிட்டு வந்துள்ளார்கள். இதில் எங்கு கேன்சர் பாதிப்புன்னு புரியல. ஆழமாக விசாரித்த போது, நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்திலும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தேன். இந்த விஷயம் என்னை ரொம்ப பாதித்தது. நாம சம்பாதிப்பது ஆரோக்கியமாக வாழத்தானே? அதற்கு நாம் சாப்பிடும் உணவே எமனாக மாறுகிறது என்று நினைக்கும் போது நிம்மதியாக இருக்க முடியவில்லை.

அதனால் நம்ம வீட்டுத் தேவைக்கான காய்கறி, கீரைகளை நாமே விளைவிக்கலாம் என்று முடிவெடுத்தேன்’’ என்றவர், தன்னுடைய விதை தேடல்கள் குறித்து விவரித்தார். ‘‘முதலில் கீரை, கத்தரி, வெண்டையின் விதைகளைதான் விதைச்சேன். முதலில் போட்ட போது நன்றாக வளர்ந்தது. ஆனால், மறுபடி வளரவேயில்லை. ஒவ்வொரு முறையும் விதையினை வாங்கி வந்து புதுச் செடிகளை பயிர் செய்ய வேண்டியதாக இருந்தது. விதைகளின் தரமும் சரியாக இல்லையோ என்று எனக்கு தோன்றியது.

அப்போதுதான் வியாபார நோக்கில் மீண்டும் மீண்டும் விதை வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் விதைகள் விற்கப்படுகின்றன என்று புரிந்துகொண்டேன். அதனால் என் தோட்டத்தில் விளைந்த செடியினைக் கொண்டு மரபு விதைகளை சேகரித்தேன். அதை பயிரிட்ட போது அவற்றின் மகசூல் அதிகமாக இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினேன்.

2015 காலக்கட்டத்தில் இணையத்தின் வளர்ச்சி இல்லை. ஊரிலுள்ள விவசாயிகளை சந்தித்து விதைகள் சார்ந்த தகவல்களைச் சேகரித்தேன். அவர்கள் சொன்ன தகவல்கள் வியப்பாக இருந்தன. அலுவலகப் பணியை பார்த்துக் கொண்டே விதையினை தேட ஆரம்பித்தேன். சேகரித்த விதைகளை கொண்டு என் தோட்டத்தை மூன்று ஏக்கராக விரிவாக்கம் செய்து அதில் பயிரிட்டேன். முழுக்க முழுக்க நாட்டு ரக பயிர்களை மட்டுமே பயிரிடுகிறேன்.

மேலும், மரபு விதைகளை என் தோட்டத்தில் இருந்தே சேகரித்து பாதுகாக்க துவங்கினேன். நான் எம்.பி.ஏ படித்த போது என்னுடன் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் படித்தனர். அவர்களின் உதவியுடன் கேரளா, மணிப்பூர், சிக்கிம், ஆந்திரா என பல மாநிலங்களுக்கு பயணித்தேன். அங்குள்ள அரிய மரபு வகை விதைகள், குறிப்பாக மூக்குத்தி அவரை, சிறகு அவரை, சமைக்காமல் சாப்பிடக்கூடிய சில்லிக்குடி கத்தரி, தக்காளி ரகங்களின் விதைகளை சேகரித்து வந்தேன். மேலும், மலைவாழ் மக்களுடன் பயணித்து மரபு ரகங்களை மீட்டெடுத்துள்ளேன்.

என்னுடைய இந்தச் செயலால் நானும் என் குடும்பத்தாரும் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறினோம். என் தோட்டத்தில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் மற்ற விளைப்பொருட்களை எங்கள் தேவைக்கு போக உறவினர்கள், நண்பர்களுக்கு விற்றோம். அதில் கொஞ்சம் வருமானம் கிடைத்தது. நஞ்சில்லா காய்கறிகள் சாப்பிடுவதால் மருத்துவ செலவுகள் இல்லை. அதனால் நான் விவசாயத்தில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன். வேலையை ராஜினாமா செய்தேன்.

என்னைப் போல் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் ஒத்த எண்ணமுள்ள நண்பர்கள் என நாங்கள் 11 பேர் இணைந்தோம், ‘விதைத் தீவு’ என்ற பெயரில் அமைப்பை துவங்கினோம். எங்களால் முடிந்தவரை எங்கெல்லாம் சென்று விதைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயணிக்கிறோம். குறைந்தபட்சம் அவரவர் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை வளர்த்துக் கொள்ளும் அளவிற்கு பயிற்சிகள் தருகிறோம். நான் இதுவரை விதைகளை விற்பனை செய்தது இல்லை. இலவசமாகத்தான் வழங்கி வருகிறேன்’’ என்று கூறிய பிரியா, விதைகளை பாதுகாக்கும் வழிகளையும் கூறுகிறார்.

‘‘விதைகளை பாதுகாக்க சுரைக் குடுவைகள், பானைகளை விவசாயிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். நான் நொச்சி, துளசி, வேப்பிலை போன்ற மருத்துவ மூலிகைகள் மற்றும் அவற்றின் குச்சிகளை எரித்து அந்த சாம்பலை காய வைத்து விதைகளில் கலப்பேன். சூடாக கலந்தால் முளைப்புத் திறன் இருக்காது. ஃபிரிட்ஜில் வைத்தும் சேமிக்கலாம். இந்த முறையில் விதைகளை பாதுகாத்தால் அவை வீரியமாக வளரும்.

தக்காளி, மிளகாய் எல்லாம் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு இம்முறையில்தான் வந்தன’’ என்றவர், தற்போதுள்ள ‘மில்லட்’ மோசடி பற்றிக் கூறினார். ‘‘இப்போது எங்கு பார்த்தாலும் ஆரோக்கியம், ஆர்கானிக் என்ற பெயரில் சிறுதானியங்களின் மாவுகள் விற்கப்படுகின்றன. மருத்துவர்கள் பலரும் மில்லட் சாப்பிடுவதை அறிவுறுத்துவதால் மக்கள் பெருவாரியாக வாங்குகிறார்கள். ஆனால், இதற்கு பின்னால் பெரிய ஸ்கேம் இருக்கிறது.

உண்மையாக சொன்னால் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் எல்லாவற்றையும் ஊற வைத்து, காய வைத்து ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் கழித்துதான் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடனே காய வைத்து அரைத்து சாப்பிடக் கூடாது. சரியாக வேகாமல் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். முளைக்கட்டிய பின் காய வைத்து அரைத்து மாவாக்கி கஞ்சி, அடை செய்து சாப்பிடுவது சிறந்தது.

‘மைக்ரோகிரீன்ஸ்’ முறையில் உற்பத்தியாகும் கீரைகளை தயார் செய்ய பயன்படுத்தும் பச்சைப்பயறு, கடுகு, வெந்தயம் என விதைகள் எல்லாமும் ரசாயனம் கலக்காத விதைகளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மைக்ரோகிரீன்ஸ் கீரைகளும் விஷமாகிவிடும். கோதுமையும் நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைத்து பின்பு காய வைத்து மாவாக அரைத்து பயன்படுத்த வேண்டும்.

சென்னை போன்ற நகர்ப்புற மக்களுக்கும் நான் முக்கியமாக சொல்வது பால்கனியிலாவது குறைந்தபட்சம் கீரைகள், கத்தரி, வெண்டை பயிரிட்டு சாப்பிடுங்கள்.

எங்களைப் போன்று பலரும் விதை திருவிழாக்கள் நடத்துகின்றனர். நாங்க வருடா வருடம் சேலத்தில் விதை திருவிழா நடத்தி வருகிறோம். விதைகள் விவசாயிகளுக்கு மட்டுமே... கார்ப்பரேட்களுக்கு அல்ல என்பதுதான் எங்கள் முழக்கம். 150 விருதுகள் வரை வாங்கியுள்ளேன்.

ஆனால், அரசு தரப்பில் இருந்து எந்தப் பெருமையும் பாராட்டுகளும் கிடைக்கவில்லை. யார் உண்மையாக களத்தில் பணியாற்றுகிறார்கள் என்பது அரசுக்கு தெரியவில்லை. நம்மாழ்வார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சில காரணங்களால் அது கிடைக்கவில்லை. நான் பல தனியார் மற்றும் தன்னார்வ அமைப்பினரின் விருதுகள் வாங்கியுள்ளேன். விருதுக்காக வேலை செய்யவில்லை. விவசாயம் காப்பாற்றப்பட வேண்டும். இந்த முயற்சி GEN Z தலைமுறையிடம் சென்று சேர வேண்டும். அதற்காக பல பள்ளிகள், கல்லூரிகளில் சென்று கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறோம். நான் போட்ட நஞ்சில்லா விதை, விருட்சமாக வேண்டும் என்பதுதான் என் இலக்கு. அதை நோக்கிதான் பயணிக்கிறேன்’’ என்றார் விதை பிரியா.

தொகுப்பு: கலைச்செல்வி