நன்றி குங்குமம் தோழி
வீட்டில் காது குத்து முதல் திருமணம் வரை எந்த நிகழ்வாக இருந்தாலும், வீட்டிலுள்ள பெரியவர்கள் முன்னிலையில் மற்ற அனைவரும் சேர்ந்துதான் அதற்கான வேலையில் ஈடுபடுவார்கள்.
சொல்லப் போனால் ஒவ்வொருவரும் ஒரு வேலையை எடுத்துக்கட்டி செய்வார்கள். தங்களுக்கான வேலையினை பிரித்துக் கொள்வார்கள். இவை எல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் மட்டுமல்ல, தனிக்குடித்தனம் இருந்த போதும், விழா என்றால் அனைத்து சொந்தங்களும் ஒன்றாக கூடிவிடுவார்கள். ஆனால், இன்று அனைவரும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கிறார்கள். வீட்டிலுள்ள பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத சூழலில்தான் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம்.
ஒவ்ெவாரு வேலையையும் தனி ஒருவராக மட்டுமே கவனிக்க முடியாது. எல்லாவற்றிலும் கவனம் செலுத்த முயலும் போது சின்னச் சின்னதவறுகள் கவனக்குறைவால் ஏற்படக்கூடும். அதுவே வாழ்நாள் முழுவதும் பேசுப் பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது. விழாவினை சிறப்பாக செய்தால் பாராட்டுபவர்கள், சிறு தவறையும் பெரிய குற்றமாக மாற்றிவிடவும் செய்கிறார்கள். இந்த பதட்டத்தை குறைத்து விழாவினை சிறப்பாக நடத்துவதுதான் ஈவென்ட் மேனேஜ்மென்ட் துறையின் வேலை.
இந்த துறையில் பல ஆண்டுகளாக இருந்தாலும், பெண்கள் இந்த துறையில் முன்னேறி வருகின்றனர். பெண்களுக்கே உரிதான திட்டமிடுதல், வாடிக்கையாளர்களிடம் பேசுதல், வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற திறமைகளுக்கு இத்துறை அவர்களுக்கு மிகவும் உகந்தது என்கிறார், சென்னையைச் சேர்ந்த சிந்து விவேகானந்த். ‘EPIC வெட்டிங்ஸ்&ஈவென்ட்ஸ்’ என்ற பெயரில் ஈவென்ட்மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து பல விழாக்களை சிறப்பித்து தந்து வருகிறார்.
‘‘நான் காஞ்சிபுரத்தில் பிறந்திருந்தாலும், அப்பாவின் வேலை காரணமாக சென்னை, மும்பை, துபாய் என பல இடங்களில் குடியிருந்தோம். இப்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டோம். சென்னையில் இளங்கலை முடித்துவிட்டு UKவில் இன்டர்நேஷனல் டூரிசம்& ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் குறித்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். அதன் பிறகு வேலைக்காக பல இடங்களுக்கு பயணம் சென்ற போது பலதரப்பட்ட மக்களின் வாழ்வியல் குறித்த புரிதல் எனக்கு கிடைத்தது.
2003ல் ‘சேவாவர்ஷினி பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் அம்மா இந்த பிசினஸ் நடத்தி வந்தாங்க. அந்த சமயத்தில் இந்த துறைக்கு பெரிய அளவில் வரவேற்பில்லை. சிறிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்பாடுகளை செய்து வந்தார் அம்மா. சிறிய பட்ஜெட் என்றாலும் அம்மாவின் நேர்த்தியான வேலைப்பாடு எல்லோரையும் கவர்ந்திருந்தது. எனக்கு திருமணமான பிறகு என் கணவர்தான் இந்த பிசினஸை பெரிய அளவில் எடுத்து நடத்தலாம்னு ஐடியா தந்தார். அவர் பார்த்து வந்த ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையா இந்த பிசினஸில் இணைந்துவிட்டார்’’ என்றவர் அம்மாவின் அதே நிறுவனத்தை EPIC வெட்டிங்ஸ் &ஈவென்ட்ஸ் என்ற பெயரில் ரீ-பிராண்ட் செய்துள்ளார்.
‘‘அம்மாவின் பிசினஸை நாங்க பிராண்ட் மாற்றிய பிறகு திருமணங்கள், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்காக எங்களை அணுகினார்கள். சிலர் குறிப்பிட்ட தீம்களின் டெக்ரேஷன் வேண்டும் என்று கேட்பார்கள். அதனால் ஆறு மாதம் கிராஃபிக்ஸ் டிசைனிங் குறித்து படித்தேன். அதன் பிறகு இன்று வரை தீம் சார்ந்த விழாக்களுக்கு கம்ப்யூட்டரில் டிசைனிங் செய்வது என்னுடைய வேலை. அவர்கள் சொன்ன தீமில் நான் நான்கு டிசைன்களை தயார் செய்து அனுப்புவேன். அதில் அவர்கள் பிடித்ததை தேர்வு செய்வார்கள். சிலர் சின்னச் சின்ன கரெக்ஷன் சொல்வார்கள். அவர்கள் தேர்வு செய்ததை கண் முன் கொண்டு வந்திடுவார் என் கணவர்.
ஆரம்பத்தில் மேடை அலங்காரங்களுக்கு வெளியில் இருந்து ஆட்களை நியமித்தோம். ஆனால், நாங்க எதிர்பார்த்தது போல் வரவில்லை. அதனால் நாங்களே வடிவமைக்க ஆரம்பித்தோம். புதுப் புது தீம்களில் மேடையினை அலங்காரம் செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் வேலையை நேரில் பார்த்தவர்கள் அடுத்தடுத்த வாய்ப்பினை எங்களுக்கு கொடுத்தார்கள். அவர்களுக்கு தெரிந்தவர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்தார்கள். இந்த அலங்காரங்களை பட்ஜெட்டுக்கு ஏற்ப செய்து தருகிறோம். ஒரு கோடி பட்ஜெட் வரை செய்திருக்கிறோம்’’ என்று வியக்க வைத்தார்.
‘‘திருமணங்கள் மட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து தருகிறோம். இதற்கு பட்ஜெட் பெரிய அளவில் இல்லை என்றாலும், அதுதான் எங்க வேலை என்பதால் அதையும் வாடிக்கையாளரின் திருப்திக்கு ஏற்ப செய்து தருகிறோம். சில நிகழ்ச்சிகளுக்கு கல்யாண மேடை அலங்காரம், மெஹந்தி, சங்கீத், பேச்சுலர் பார்ட்டி என அனைத்து ெபாறுப்பையும் எங்களிடம் கொடுத்திடுவார்கள். சில நிகழ்வுக்கு அலங்காரம் மட்டுமே கொடுப்பார்கள். வேலை எதுவாக இருந்தாலும் அதை தரமாக செய்து தர வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்’’ என்றவர், திருமணங்கள் மட்டுமல்லாது கார்ப்பரேட் அலுவலக விழாக்கள், கல்லூரி விழாக்கள், மருத்துவ பயிலரங்கம், கருத்தரங்கம் மற்றும் விளையாட்டு விழாக்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
‘‘இன்று ஆர்கானிக் பொருட்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் வாடிக்கையாளர் ஒருவரின் திருமண விழாவிற்கு முழுவதும் தென்னை ஓலை, கீற்றுகள், நிஜ பூக்கள் என இயற்கை சார்ந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அலங்காரம் செய்திருந்தோம். பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது. அவர் விவசாயம் செய்து வருவதால், இதனை தன்னுடைய நிலத்திற்கு உரமாக மாற்ற இருப்பதாக கூறினார். அவர் அப்படி சொன்ன போது, மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
சென்னை, பெங்களூரு, கேரளா குருவாயூரில் டெம்பிள் வெட்டிங், மாமல்லபுரம் ரிசார்ட் வெட்டிங், புதுச்சேரி கடற்கரை திருமணம், திருச்சி, மதுரை என பல்வேறு இடங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத் தியுள்ளோம். இந்த துறையும் போட்டி நிறைந்தது என்பதால், புதுப்புது ஐடியாக்களை கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள புதுமையும் நவீனமும் அவசியத் தேவையாக உள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.
தற்போது எங்களின் பிசினஸை விரிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளன. எங்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் நிகழ்ச்சிகளை நடத்தும் பிளான் உள்ளது. ஈவென்ட் பிளானிங் குறித்து வொர்க் ஷாப் நடத்தும் எண்ணத்திலும் இருக்கிறோம். அதில் ஸ்டால் அமைத்து இந்த துறைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யவும் நினைத்துள்ளோம்’’ என்றார் சிந்து விவேகானந்த்.
தொகுப்பு: கலைச்செல்வி



