நன்றி குங்குமம் தோழி
அனைத்திலும் முன்னேற்றம் கண்டுள்ள காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். சாப்பிடும் பொருட்கள் முதல் உடைகள் வரை மாற்றம் கண்டுவிட்ட ஒரு நவீன யுகம் என்று கூட சொல்லலாம். இன்றைய சமுதாயத்தினருக்கு இது சாதாரணம் என்றாலும், அறுபது வயதைக் கடந்தவர்களுக்குதான் தெரியும், முன்பிருந்த காலகட்டத்திற்கும் தற்போதைக்குமான வித்தியாசங்கள்.
தாத்தா-பாட்டி காலத்தில் வீட்டில் அன்றாடம் சாப்பிட்ட பழைய சோறு இன்று ஆரோக்கிய உணவு என்றாகி டிமாண்ட் அதிகமாகிவிட்டது. உணவு மட்டுமல்ல, வீட்டுப் பொருட்கள் வரை பழையதை மெருகேற்றி புது கோணத்தில் பிரபலமாகி வருகிறது.
அன்று தேக்கு மற்றும் செம்மரத்தில் வீடு நிறைய மரப்பொருட்கள் இருக்கும். இப்பொழுது அவைகளை போன்று புதிய பெயர்களில் வருகின்றன. பாட்டி காலத்தில் அணிந்த கனமான நகைகள் நம்மை அலங்கரிக்க வந்துவிட்டன. அதேபோல் நம் வீட்டுப் பொருட்களில் முக்கியமானது மூங்கில் அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட பிரம்புப் பொருட்கள். விதவிதமான பல்வேறு வீட்டுப்பொருட்கள் வந்தாலும், பழமை மாறாதது பிரம்பினால் செய்யப்பட்டவை என்றுமே ‘ஓல்டு ஈஸ் கோல்டு’தான். உறுதியானது, கனமற்றது. இதில் ஒருவித அழகு இருக்கிறது.
வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களில் முதலில் கவனம் செலுத்துவது ‘சோபா செட்’தான். மட்டுமல்லாது அதனுடன் இணைந்த அனைத்து செட்டுகளும் நிறைய மாடல்களில் வந்துவிட்டன. பாதி லெதர், பாதி சிந்தடிக், சாட்டின், வெல்வெட் என வகைகளுக்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு அனைத்துப் பொருட்களுமே கிடைப்பதால் வீட்டை அலங்கரிக்க முடிகிறது. வீட்டிலுள்ள ஒவ்வொரு அறைக்கும் சரியான பொருட்களை அதன் இடத்தில் வைத்தாலே அதற்கான அழகு வந்து விடும். ஒரு சிலர் எங்கேயோ பார்த்த சிலவற்றை கருத்தில் கொண்டு அமைப்பார்கள்.
அதன் பிறகு இவ்வாறு செய்திருக்கலாமே என்று யோசிப்பார்கள். நமக்குப் பிடித்தனவற்றை செய்வதற்கு தயங்கக் கூடாது. வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் அவர்கள் நாசமாக்கி விடுவார்கள் என்பதால், சிலர் விலையுயர்ந்த பர்னிச்சர்கள் போடமாட்டார்கள். நாசமானாலும் சரி செய்து கொள்ளும் வகையினை தேர்வு செய்யலாம். பழையதை கொடுத்து புதியதை மாற்றிக் கொள்ளலாம். என்ன புது டிசைன்கள் வந்தாலும், நம் முன்னோர் காலத்து பிரம்பு நாற்காலிகளும், சோபாக்களும் எப்பொழுதும் மவுசு குறையாது. இதில் சிறிய ஸ்டூல் முதல் அனைத்து வகையான பொருட்களையும் அழகுற அமைக்க முடியும்.
அந்தக்கால பிரம்பு நாற்காலிகள் என்று சொன்னாலும், இந்தக் காலத்திலும் விருந்தினர் மாளிகைகள், தோட்ட வீடுகள், வீட்டுத் தோட்டங்கள் போன்ற பல்வேறு இடங்களிலும் பிரம்பு பர்னிச்சர்களையே பயன்படுத்துகிறார்கள். விலை உயர்ந்த ‘ரிசார்ட்’ போன்ற இடங்களிலும் பிரம்பினாலான பர்னிச்சர்களை கொண்டே அலங்கரித்து வருகிறார்கள். நெருக்கமாக பின்னப்பட்டுள்ளதால் மிகவும் உறுதியுள்ளதாக இருக்கும். பால்கனியோ, தோட்டமோ இரண்டு நாற்காலிகள் அதற்கு தகுந்த குஷன், அழகிய வெல்வெட் கவர் போட்டு விட்டால் போதும், ரிச் லுக் கிடைக்கும்.
நடுவில் பிரம்பால் பின்னப்பட்ட சென்டர் டேபிளினை கண்ணாடி கொண்டு அலங்கரிக்கலாம். பல வீடுகளில் இது போன்ற அமைப்பினை காண முடியும். ஒரு குடுவையில் பூங்கொத்துக்களை அடுக்கி அழகுற நடுவில் வைக்கலாம். ஒயரினால் பின்னப்பட்ட நிறைய சோபாக்கள் போலவேதான் பிரம்பினால் பின்னப்பட்ட பர்னிச்சர்களும் காணப்படும். ஒயர்கள் சிந்தடிக் இழைகள். பிரம்பு இயற்கையில் கிடைக்கும் மூங்கில் குச்சிகள். பின்னுவதிலும் இப்பொழுது நல்ல டிசைன்கள் உள்ளன. மேலும், வண்ணம் தீட்டி தரமான குஷன்களை வைத்துவிட்டால், அனைத்துமே பார்க்க விலை மதிக்கத் தக்கதாகவே தெரியும். நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு வாழை இலை விருந்து எவ்வாறு தனித்துவமானதோ, அப்படித்தான் நம் பாரம்பரியப் பொருட்களும். அடிபாகம் முழுவதும் பிரம்பால் செய்யப்பட்டாலும், மேலே நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம். ஒரு டைனிங் ஹாலில் பிரம்பால் பின்னப்பட்ட தொட்டிகளில் இருபுறம் செடிகள் வைத்து, நடுவில் பிரம்பு மேசை மற்றும் நாற்காலிகளை மூங்கில் சட்டங்கள் அடித்தபடி அமைக்க முடியும். எளிமையைக் கூட ஆடம்பரமாக காட்டுகின்றன. எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் சிலர் பாரம்பரிய சம்பிரதாயங்களை கடைபிடிப்பார்கள். ஏதாவது விசேஷ நாட்களில் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களையும், பிரம்பினால் ஆனதை மட்டும் பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு ஒரு தாம்பூலம் தருவதானால் பித்தளை போன்ற உலோகங்களை பயன்படுத்தாமல், பிரம்பினால் ஆன தட்டுக்களை பயன்படுத்துவார்கள்.
பழங்கள் வைக்க பிரம்புக் கூடையை உபயோகிப்பார்கள். காலங்கள் மாறினாலும், நம் பாரம்பரியங்கள் மாறுவதில்லை. இன்றைய காலத்தில் அரிசி புடைக்கவும், அதிலுள்ள கற்களை அகற்ற பிரம்பு முறங்களை பயன்படுத்துகிறார்கள். அதன் உறுதி மட்டுமல்லாது, பராமரிப்பிற்கும் ஏற்றது. கையடக்கமாக கையாள காய்கறிகளோ, பழமோ வேறு கீரை வகைகளோ, பூவாகக்கூட இருக்கலாம். கனமில்லாமல், கீழே விழுந்தாலும் உடையாமல் இருப்பவைதான் பிரம்பால் ஆனப் பொருட்கள்.
நம்மிடம் நிறைந்து காணப்படும் சில பொருட்களின் அருமை நமக்குத் தெரிவதில்லை. ஆனால், அதுவே வெளிநாடுகளில் அதன் விலையை கேட்கும் போது இதற்கு இவ்வளவு மதிப்பா என தோன்றும். உதாரணத்திற்கு நம் வேலி ஓரங்களில் வளரக்கூடிய கற்பூரவல்லி செடி, பல டாலர்களில் விற்கப்படுகிறது. அதே போல்தான் நம் பாரம்பரியம் மிக்க பிரம்புப் பொருட்களும், உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. வெளிநாட்டில் கோடையை மகிழ்ச்சியுடன், குடும்பத்துடன் கொண்டாட திறந்தவெளி உணவகத்தை நாடிச் செல்வது வழக்கம்.
அங்கே முழுவதும் பிரம்பு நாற்காலிகள், மேசைகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் கொண்டு வரும் பன், ரொட்டி போன்றவைகளும் பிரம்பினால் ஆன தட்டுக்களில் பரிமாறப்படும். முழுமையான தோட்டம் வைத்திருப்பவர்களும் அழகிய பிரம்பு நாற்காலிகள் போட்டு உட்கார வசதியாக அமைத்திருப்பார்கள். இதன் மதிப்பு தெரிந்துதான் முன்பு ஊஞ்சல் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் தனி வீடுகளில் மட்டுமே பெரிய மர ஊஞ்சல் பயன்படுத்தப்படுகிறது. அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு பிரம்பு ஊஞ்சல்கள் வரப்பிரசாதம்.
உடல் எடைக்குத் தேவையான எடையிலும் பிரம்பு ஊஞ்சல்கள் கிடைப்பதால், அனைவரும் மகிழலாம். இதில் குஷன்களும் போட்டுக் கொள்ளலாம். வரவேற்பு அறைகளில் மட்டுமில்லாமல் குழந்தைகளின் அறை, பால்கனி போன்ற இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரியவர்களும் அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடுக்க வசதியானது. இதில் சோபா போன்று இரண்டு இருக்கைகள் கொண்டவையும் உண்டு. எத்தகைய குஷன் சோபாக்கள் வந்தாலும், பிரம்பினால் செய்யப்பட்டவை அழகும் உறுதியும் கொண்டவை.
அசைக்க முடியாத கனமான பர்னிச்சர்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பதை விட, பிரம்பு பர்னிச்சர்களை சுலபமாக வேண்டிய இடத்தில் நகர்த்திப் போட்டுக் கொள்ளலாம்.
நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தரம், உறுதி, நீண்ட உழைப்பு இவற்றைப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம். எளிமையான பொருட்களைக் கொண்டும் வீட்டை அழகுபடுத்த எடுத்துக்காட்டான பொருள்தான் மூங்கில். இடங்களுக்குக்கேற்ற சரியான அமைப்பை தரும்பொழுது, லட்சக்கணக்கில் செலவு செய்ய அவசியமில்லை. எத்தனையோ ஆடம்பரப் பொருட்கள் தினம் தினம் வந்தாலும், பாரம்பரியம் மாறாதப் பொருட்களுக்கு என்றுமே தனி ஈர்ப்புள்ளது. இதில் சோபாக்கள் மட்டுமில்லாமல் பங்க்பெட் என்று சொல்லும் அடுக்குக் கட்டில் போன்றும் அமைத்துக் கொள்ளலாம். பூந்தொட்டி வைப்பதற்கான அடித் தொட்டியாகவும் பயன்படுத்தலாம்.
பழமையில் புதுமையை புகுத்தி எளியப் பொருட்களில் கூட, அழகழகான ஓவியங்கள் போன்று டிசைன் அமைத்துத் தருகிறார்கள். சமையலறையில் உள்ள காய்கறிக்கூடையில் ஆரம்பித்து வரவேற்பு நாற்காலிகள், சோபாக்கள், சாப்பாட்டு மேசை நாற்காலிகள், ஊஞ்சல் வரை அனைத்தும் இருப்பதால், எளிமையாகவும் அதே சமயம் அழகாகவும் அலங்கரிக்கலாம். நம் வீடுதான் நமக்கு சொர்க்கம். அங்கு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், வீட்டை கண்களுக்கு விருந்தாக்கி அதில் இன்பம் காண்போம்.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்


