Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்

ஒரு வீட்டில் நுழைந்தவுடன் நம் கண்களில் படுவது முதலில் சுவர்தான். ஒரு காலி இடம் சுவர் கட்டியபின்தான் அறைகளாகத் தோற்றம் தருகிறது. தரையை போல கிட்டத்தட்ட நான்கு மடங்கு பரப்பளவு கொண்டது சுவர். நுழைந்தவுடன் அதன் அழகு முதலில் தெரிவதால்தான் அதை முகமாக வர்ணிக்கிறார்கள். சுவற்றின் அழகுதான் அந்த வீட்டின் அழகை எடுத்துக்காட்டும். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும், சுவற்றின் அழகும் நிறமும் அவ்வீட்டு உறுப்பினரின் ‘மூடை’யே மாற்றக்கூடியது. சரியான நிறத்தோற்றம் சுவரில் இல்லையென்றால், அழகான இடம் கூட அழகற்று காணப்படும். அதே சமயம் சுவர் ‘பளிச்’சென காணப்பட்டால், ரொம்ப அழகில்லாத இடம் கூட பிரமாதமாகத் தெரியும்.

சுவர் அலங்காரம் என்பது ஒவ்வொரு அறைக்கும் முக்கியமான ஒன்று. சுவரின் நிறமும் டிசைன்களும் ஒரு இடத்தை பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ எடுத்துக்காட்டும் தன்மை கொண்டது. சுவரை பல முறையில் அலங்கரிக்கலாம். அதில் ஒன்றுதான் பெயின்டிங் முறை. பல்வேறு வண்ணங்களில் பெயின்ட்டுகள் உள்ளன. மழை, வெயில் தன்மைக்கு ஏற்ப ஆயில் பவுண்ட், டிஸ்டம்பர், அக்ரலிக், எனாமல் போன்ற பல வகைகள் உள்ளன.

ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும். நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். டிஸ்டம்பர் அனைத்து சுவர்களுக்கும் பொருந்தும். சுவரில் பெயின்ட் அடர்த்தியாக தெரிய பிரைமர் பயன்படுத்தலாம். ஆடம்பரமாக, அழகாக, ரிச்சாக வேண்டும் என்றால், வால்பேப்பர் பயன்படுத்தலாம். இதில் பல்வேறு ரகங்கள் உண்டு. பேப்பர், துணி, கண்ணாடி என அலங்காரத்திற்காக பயன்படுத்தலாம். இது எந்தவித சுவற்றுக்கும் ஏற்றது. கட்டடங்களில் விரிசல்களை மறைக்கவும் பயன்படுத்தலாம். வால்பேப்பர்கள், பேப்பர் வடிவில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனை அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதிக நடமாட்டம் உள்ள இடத்தின் சுவர்களுக்கு தண்ணீர் உறிஞ்சக்கூடிய நல்ல தரம் வாய்ந்தவற்றை பயன்படுத்தலாம். வண்ணப்பூக்கள், கணித வடிவமான முக்கோண, செவ்வக வடிவங்கள், மரம், செடி, கொடிகள் டிசைன்கள் மற்றும் பட்டைக்கோடு, நேர்க்கோடு என பல்வேறான அழகிய நிறங்களில் கிடைக்கின்றன. நம் சுவற்றிற்கும் அறையின் நிறத்திற்கும் ஏற்றவாறு தேர்ந்தெடுக்கலாம். வீட்டின் லிவ்விங் அறையில் உள்ள சுவரை கூட ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப இயற்கைக் காட்சிகள், மலை, அருவி, மேகக்கூட்டம் போன்றவை கொண்டு அமைக்கலாம். இவை தவிர சுவர் அலங்கார ஓவியங்களும் உள்ளன. மேலும், வீட்டிலுள்ள பர்னிச்சர்களின் நிறக்கூட்டில், சுவரின் நடுவில் மட்டுமே அலங்கரித்தால் ஒருவிதமான அழகு. அதேபோல் இருபது ஆண்டுகளுக்குக்கூட ‘பளிச்’சென்று காட்சிதரும் 3D படங்களும் பலரின் தேர்வாக உள்ளது.

வால்பேப்பர் போன்று அழகான டிசைன்களில் டைல்ஸ்களும் வந்துவிட்டன. இயற்கைக் காட்சிகள், மரம், செடி, கொடிகள் போன்ற டிசைன்களும் உள்ளன. புதிதாக வீடு கட்டும் போது சுவரையே டைல்ஸ் மூலம் ஒட்டி அலங்கரித்து விடலாம். ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் வீட்டில் பெயர்த்து டைல்ஸ் ஒட்டுவது சுலபமில்லை என்பதால், அதற்கேற்ற சாத்தியக்கூறுகள் கொண்டு அமைக்கலாம்.

பானலிங், மரச்சட்டங்கள் போன்று அமைப்பதும் ஒரு வகை அலங்காரம்தான். வசதியிருந்தால் ‘வுடன்பானல்ஸ்’ என்று சொல்லக்கூடிய மரத்தால் செய்யப்படும் ‘சுவர் பினிஷ்’ செய்யலாம். சுவர் முழுவதும் அழகான மரத்துண்டுகளை வைத்து பெயின்டிங் செய்வது ேபால் இருக்கும். வருடக் கணக்கில் அப்படியே இருக்கும். இவை மனதுக்கும் ரம்மியமான சூழலையும் ஏற்படுத்தும். லிவ்-இன்ஸ், வால்-டாய்ஸ் போன்ற பல்வேறு வகையான இந்திய வால் பேப்பர்கள் உள்ளன. மிகச்சிறிய அறைகளுக்கு மினி பிரின்ட்ஸ் என்று சொல்லக்கூடிய டிசைன்கள், அறை பெரியதாக இருப்பது போலத் தோன்றும். பெரிய பெரிய இயற்கைக் காட்சி டிராயிங் ரூம், லாபி போன்ற இடங்களுக்கு அழகாக இருக்கும்.

Vertical stripes அறையை உயரமாக்கிக் காட்டும். Horizontal Stripes அகலம் குறைவான அறைகளுக்கு போட்டால், கொஞ்சம் அகலம் அதிகமாக இருப்பது போலத் தோன்றும். மிகவும் பெரியதாக காட்ட விரும்பினால், கண்ணாடி பானல்ஸ் போடலாம். இப்பொழுது துணியில் செய்யப்பட்ட விதவிதமான பெயின்டிங்ஸ் நிறைய கிடைக்கின்றன. கலாச்சார அடிப்படையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. சுவர் அமைப்புக்கு ஏற்றவாறு போட்டுக் கொள்ளலாம்.

சுவர் அலங்காரங்கள் எதுவும் செய்யாவிடில், ஒன்றிரண்டு இடங்களில் வைத்தால் அறையின் அழகை உயர்த்திக் காட்டும். வரவேற்பறை முழுவதும் அலங்கரிக்க இயலவில்லை என்றால், அறையில் நுழைந்தவுடன் எந்த சுவர் கண்களில் படுகிறதோ, அந்த சுவற்றை ஏதாவது ஒரு விதத்தில் அலங்கரித்தால் கூட போதும். பெரிய சித்திரங்கள், புத்தர் படங்கள், பாய் போன்ற அமைப்பில் வண்ணமயமான இயற்கைச் சித்திரங்களையும், பசுமைக் காட்சிகளையும் வரையலாம். காலத்தால் அழிக்க முடியாத சில கற்பனைக் காவியங்கள் கொண்ட படங்களை போட்டு மகிழலாம்.

உயரமான சுவராக இருந்தால் மேலும் கீழும் இடைவெளிவிட்டு முழு அளவில் அழகான காட்சியை கண்களுக்கு விருந்தாக்கலாம். சில இடங்களில் மேலும் கீழும் இடைவெளி கூட விடாமல் சித்திரம் வரைந்தால், கண்ணைப் பறிக்கும். எப்பொழுதுமே வண்ணப்படங்கள் இடத்தின் அழகை எடுத்துக்காட்டும் குணம் கொண்டவை. பிள்ளைகளின் விருப்பம் அறிந்து அவர்களுக்கேற்றவாறு அறையை அலங்கரிக்கலாம்.

இதில் உளவியல் விஷயங்கள் அடங்கியுள்ளன. அறிவியலில் ஆர்வம் கொண்ட பிள்ளைகள் இருந்தால், அறிவியல் சம்பந்தப்பட்ட படங்கள் போடலாம். உதாரணத்திற்கு வானவில் படம் போட்டால் ஏழு நிறங்களைப் பற்றி அறிந்து கொள்வதுடன், வானவில் பற்றியும், எதனால் தோன்றுகிறது என்றும் தெரிந்து கொள்வார்கள். விளையாட்டை விரும்பும் குழந்தைகள் அறையில் மைதானம், விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் பொருட்கள் கொண்ட சுவர் ஓவியங்களை போடலாம்.

ஒரு சிறிய வரவேற்பறையை சுவற்றின் அலங்காரம் மூலம் ‘ரிச்’சாகக் காட்ட முடியும். அலங்கரிக்கப்பட்ட சுவற்றின் கீழே ஒரு சிறிய கார்ப்பெட் போட்டு, இருபுறமும் ஒரே அளவிலான ெபரிய பொம்மைகள், விளக்குகள், பாவை விளக்குகள் என நம் வசதிப்படி வைக்கலாம். பொருட்களை வைக்க இடமில்லை என்றால், அழகான இரண்டு செடிகளை இருபுறமும் வைத்து விடலாம். உழைத்துக் களைத்து வீட்டிற்கு வந்தவுடன், அரை கப் ‘டீ’யுடன் அமர்ந்து செடிகளை பார்க்கும் போது களைப்பு நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சுவரின் அழகு நம் மனநிலையை மாற்றக்கூடும். நல்ல ஒரு சுவர் அலங்காரம், பராமரிப்பும் அழகில்லாத இடத்தைக் கூட மிளிரச் செய்யும்.

இன்று சதுர அடி கணக்கிட்டு வீடுகள் வாங்குகிறோம். நம் மூதாதையர் காலத்தில் ஒரு கிரவுண்டில் வீடு அமைக்கப்பட்டு தோட்டம் ஒரு பங்காக இருந்தது. ஆனால், இன்று ஒரு கிரவுண்டில் பல வீடுகள் கட்டப்படுகிறது. ஒவ்வொரு சதுர அடியும் விலை பெறுவதால், நாம் ஒவ்வொரு இடத்தையும் வசதிப்படி, ரசனைக்கேற்றபடி அமைத்துக்கொள்ள முடியும். வீட்டில் பல்வேறு குறைகள் இருந்தாலும், சின்னச் சின்ன தீர்வுகள் மூலம் நிறைவாக்கி விடலாம். நுழையும் போதே மன அமைதியும், சந்தோஷமும் கிடைத்தால் அவர்கள்தான் வாழ்க்கையை நிஜமாக வாழ்கிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்