நன்றி குங்குமம் தோழி
இந்தியாவின் மூத்தப் பெண் வழக்கறிஞர் லிபியா லோபோ சர்தேசாய்க்கு 102 வயதாகிறது. போர்ச்சுக்கீசியர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த கோவாவின் விடுதலைப் போராட்டத்தின் போது காட்டுக்குள் ரகசிய வானொலியை இயக்கிய பெருமையும் லிபியா லோபோ சர்தேசாய்க்கு உண்டு. 1955ல், லிபியா லோபோ சர்தேசாய் (Libia Lobo Sardesai) தனது கணவர் வாமன் சர்தேசாயுடன் இணைந்து, போர்ச்சுக்கீசிய ஆட்சிக்கு எதிராக ஒரு ரகசிய வானொலி நிலையத்தை நடத்தினார். இதனால் கோவாவின் அடர்ந்த காடுகளுக்குள் வாழ்ந்தார். சென்ற ஆண்டு (2025) லிபியா லோபோ சர்தேசாய்க்கு ‘பத்ம’ விருது வழங்கப்பட, கணவர் வாமன் சர்தேசாய்க்கு 1992லேயே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
‘‘இந்திய விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நான் மும்பையில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 12, தேச பக்தர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர் துறப்பதை நான் நேரில் பார்த்தேன். வெள்ளை மற்றும் காக்கி நிற ஆடைகளை அணிந்த பெருந்திரளான மக்கள், காந்தியடிகளுடன் சௌபாத்தியிலிருந்து ‘தோபி தலா’ வரை நடந்து செல்வதும், ‘ஜெய் ஹிந்த்’ மற்றும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ போன்ற முழக்கங்களை எழுப்புவதும் என் நினைவில் நிழலாடுகின்றன. குதிரை மீது வரும் காவலர்கள் போராட்டக்காரர்களை குதிரைகளின் கால்களில் மிதிபட வைப்பார்கள். மக்கள் கீழே விழுவார்கள். காயமடைவார்கள். சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
கல்லூரியில் படிக்கும் போது ‘கோவா யூத் லீக்’ (Goa Youth League) அமைப்பின் செயலாளராக இணைந்தேன். மும்பை வீதிகளில் போராட்டங்களில் பங்கேற்பதும், அதிகாரவர்க்கத்திடம் உண்மையை உரக்கச் சொல்வதுமாக நாட்கள் நகர்ந்தன. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், கோவா மட்டும் போர்ச்சுக்கீசிய சர்வாதிகாரி அன்டோனியோ டி ஒலிவேரா சலாசாரின் பிடியிலேயே இருந்தது. திருமண அழைப்பிதழ்களை கூட தணிக்கை செய்தார்கள். போர்ச்சுக்கீசியர்களின் கண்காணிப்பு எந்த அளவுக்குத் தீவிரமாக இருந்தது என்றால், சாலையில் நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தாலே, அவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று விசாரிக்க காவலர்கள் வந்துவிடுவார்கள்.
1954ல், கோவா மக்கள் போர்ச்சுக் கீசிய ஆட்சியிலிருந்து விடுதலை கோரி கோவாவின் எல்லைகளில் திரண்டனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கோவா மாநிலத்திற்குள் யாரும் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டது. கோவா, இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த முற்றுகை மாநிலத்திற்குள்
பட்டினியை உருவாக்கியது.
என் கணவர் காலனித்துவ எதிர்ப்பு இலக்கியங்களை பரப்பியதற்காக ஒன்பது மாதங்கள் சிறையில் போடப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு அவரது குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் கைது செய்யப்பட்ட அவர், கோவாவில் தனது படிப்பைத் தொடர முடியாமல் மகாராஷ்டிராவில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்திற்குச் சென்று நான்கு ஆண்டுகள் தங்கினார்.
பின்னர், இந்திய அரசால் அகில இந்திய வானொலியில் அவருக்கு வேலை வழங்கப்பட்டது. எனக்கும் அங்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பம்பாயில் வசிக்கும் கோவா மக்களின் கருத்துக்களை பதிவு செய்வது எங்களது பணியாக இருந்தது. அந்தக் கருத்துக்கள் டெல்லியில் உள்ள வெளிநாட்டுச் சேவைப் பிரிவுக்கு அனுப்பி ஒலிபரப்பப்பட்டன. இதன் மூலம் கோவாவில் நடப்பதை சர்வதேச பார்வையாளர்கள் அறிந்துகொள்ள முடிந்தது.
வானொலியை பயன்படுத்தி, கோவா மக்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைத்தால் என்ன என்று யோசனை தோன்றியது. ‘வாய்ஸ் ஆஃப் ஃப்ரீடம்’ (Voice of Freedom) வானொலி நிலையம் உருவானது. அதன் முதல் ஒலிபரப்பு 1955 நவம்பர் 25ல் தொடங்கியது. போர்ச்சுக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றி சரியாக 445 ஆண்டுகள் நிறைவடைந்த நாள் என்பதால், அந்தத் தேதியை தேர்ந்தெடுத்தோம்.
தாயகத்தின் மீதான பற்றின் விளைவாகவே எனக்கும், வாமனுக்கும் இடையிலான பிணைப்பு உருவானது. நாங்கள் 1964ல் திருமணம் செய்துகொண்டோம். 1955 முதல் 1961 வரை நாங்கள் காடுகளில் வாழ்ந்தோம். அங்கிருந்துதான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வானொலி ஒலிபரப்பை நடத்தி வந்தோம்.
திடீரென்று, 1961 டிசம்பர் 16 அன்று, நாங்கள் ராணுவ ஜீப்பில் பெல்காமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு ஒரு புதிய இடத்திலிருந்து ஒலிபரப்புச் செய்யுமாறு எங்களை கேட்டுக்கொண்டனர். மறுநாள், ஒரு மணி நேரத்திற்குள் சரணடையுமாறு போர்ச்சுக்கீசிய கவர்னர் ஜெனரலுக்கு விடுக்கப்பட்ட இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரின் நேரடிச் செய்தியை ஒலிபரப்பும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.
இதுகுறித்து நடவடிக்கையை தொடங்க இந்திய அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவா முழுவதும் இருந்த போர்ச்சுக்கீசிய நிலைகள் மீது முழு வீச்சிலான தாக்குதலை நடத்த இந்தியக் கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டன. இறுதியில் போர்ச்சுக்கீசியப் படைகள் சரணடைந்தன.
மறுநாள் காலை 6:30 மணிக்கு வருமாறு ராணுவத்திடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ‘வானத்திற்குச் சென்று மக்களிடம் பேச வேண்டும் என்றுதானே விரும்பினீர்கள்? அதனால் உங்களை விமானத்தில் அனுப்பப் போகிறோம்’ என்று இந்திய ராணுவ அதிகாரி கூறினார். ஆனால், அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
அதற்கு நாங்கள், ‘பரவாயில்லை. அப்படி நேர்ந்தால், குறைந்தபட்சம் நாங்கள் சுதந்திரமான கோவாவின் மண்ணில்தானே விழுவோம்’ என்று கூறினோம்.1961 டிசம்பர் 19 அன்று, என்னையும், என் கணவரையும் ஏற்றிக்கொண்டு விமானம் கோவாவின் வானில் பறந்தது. ‘மகிழ்ச்சி கொள்ளுங்கள் மக்களே...! மகிழ்ச்சி கொள்ளுங்கள்! 450 ஆண்டுகளுக்குப் பிறகு கோவா விடுதலை பெற்றுவிட்டது’ என்று எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வானத்திலிருந்து அள்ளி வீசினோம்’’ என்கிறார் லிபியா.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி


