Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

இந்தியாவின் முதல் பார்வைத் திறனற்ற சார்ட்டட் அக்கவுன்டன்ட்

நன்றி குங்குமம் தோழி

நான் முதல்வன்

இந்தியாவில் பார்வைத் திறன் முழுவதும் அற்ற முதல் பெண் சார்ட்டட் அக்கவுன்டன்ட்-CA என்ற பெருமை ரஜனி கோபாலகிருஷ்ணா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

இவருக்கு ஒன்பது வயதாகும் போது கடுமையான ஒவ்வாமையினால் இவரது பார்வை மங்கத் தொடங்கியிருக்கிறது. சாதாரண சளி பிடித்ததற்காக இவருக்கு பெனிசிலின் மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த மாத்திரையை கொடுப்பதற்கு முன்னர் அது ஒவ்வாமையை ஏற்படுத்துமா எனப் பரிசோதிக்கும் ‘டெஸ்ட் டோஸ்’ கொடுக்கப்படவில்லை. அந்த மாத்திரை இவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

‘ஸ்டீவன் ஜான்ஸன் சிண்ட்ரோம்’ என்ற கோளாறை அது இவருக்கு உண்டாக்கிவிட்டது. அதன் விளைவாகப் பார்வை மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி யிருக்கிறது.கண்களில் தொடர் அரிப்பும் ஏற்பட்டிருக்கிறது. விழித்திரை பாதிப்பை மருத்துவர்களால் சரி செய்ய முடியவில்லை. கண்கள் சிவப்பாக இருந்ததால் பிற மாணாக்கர் இவரை ஒதுக்க ஆரம்பித்தனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிதாப கண்ணோட்டத்தோடு பார்க்க ஆரம்பித்தார்கள். தனிமையிலேயே இருப்பது இவரது வழக்கமானது. ஆரம்பத்தில் தனக்கு ஏற்பட்ட குறையை நினைத்து அழுதாலும், பெற்றோர் வருத்தப்படுவார்கள் என்று இயல்பாக வாழ ஆரம்பித்தார்.

பள்ளிப் படிப்பினை முடித்து கல்லூரிக்கு சென்ற போது அங்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனால், இவர் தேர்வுகளை எழுத மிகவும் சிரமப்பட்டுள்ளார். பார்வையற்றோர் படிப்பதற்கான புத்தகங்கள் எளிதில் கிடைக்கவில்லை. சாதாரண புத்தகத்தில் உள்ள எழுத்துக்களும், கண்ணுக்கு மிக அருகில் வைத்தால்தான் ஓரளவாவது படிக்க முடியும். அதனால் மிகவும் சிரமப்பட்டு படித்தார். பயணத்திலும் சிக்கல் இருந்தது. தட்டுத் தடுமாறிதான் நடப்பார் என்பதால், பயணம் சிரமமாக இருந்துள்ளது.

காலம் கடக்கையில் இவரது இடது கண்ணில் முற்றிலும் பார்வை இல்லாமல் போனது. தனக்கு பார்வை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே இவரது மனம் மறுத்தது. பார்வையுடைய மற்ற பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் மனம் மிகவும் வருந்தியிருக்கிறது. இதிலிருந்து கண்டிப்பாக தன்னை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்தார்.

நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பட்டப் படிப்பை முடிக்கும் போது வலது கண்ணில் பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது. நேர்காணலுக்காக போன போதும், திறமை இருந்தும், இவரைப் பணியில் அமர்த்த யோசித்தார்கள்.

இன்னும் கூடுதல் கல்வித் தகுதி இருந்தால் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என நம்பினார். பி.காம் படிப்பிற்கு பிறகு சி.ஏ. படிப்பினை தேர்வு செய்து கடுமையாக படித்தார். பார்வையுள்ளவர்களுக்கே சவாலாக இருக்கும் அந்தத் தேர்வை இவர் எழுதி வென்றார். ஸ்க்ரீன் ரீடிங் மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தக் கற்றுக்கொண்டார். ஸ்க்ரைப் (Scribe) மூலம் தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்வதையும் கற்றுக்கொண்டார்.

இரு கண்களிலும் பார்வைத் திறன் பறிபோன சமயத்தில் இவரது தந்தைக்கு ரத்தப் புற்றுநோய் பாதித்தது. இதனால் மனமுடைந்தவர் யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். “புலம்பிக் கொண்டிருப்பதற்கு பதிலாக எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிச்சலை எனக்கு யோகா கொடுத்தது” என்று கூறும் ரஜனி தற்போது முன்னணி மென்பொருள்

நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

ஆரம்பத்தில் இந்தியா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் நிறுவனத்தில் கம்யூனிட்டி கோ-ஆர்டினேட்டர் என்ற பதவி வகித்தார். பின்னர் தமது சுய விவரங்களை தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆஃப் இந்தியா (I.C.A.I.) அமைப்பில் பணியில் சேர்ந்திருக்கிறார். கணினியை ஸ்க்ரீன் ரீடிங் சாஃப்ட்வேர் என்ற மென்பொருள் மூலம் பணிகளை எளிதாகக் கையாளுகிறார். யோகா பயிற்சி, சமையல், வீணை வாசிப்பது, இசையை ரசிப்பது, ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று மகிழ்ச்சியும் திருப்தியுமாக தன் வாழ்க்கையினை கழித்து வருகிறார்.

தொகுப்பு: லதானந்த்